மோசடி செய்வோரின் முகமூடி ஆன்மிகம்!-மஞ்சை வசந்தன்

10 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

“பக்தி வேஷம்”, “கபட நாடகம்”, “பசுத்தோல் போர்த்திய புலி” என்று பலவிதமாக மோசடிப் பேர்வழிகள் அக்காலந் தொட்டே விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.

சதிகாரர்கள், காமுகர்கள், பித்தலாட்டம் செய்வோர், ஏமாற்றுப் பேர்வழிகள், குறுக்கு வழியில் சொத்து சேர்க்க முயற்சி செய்வோர் என்று பலரும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள, மக்களை ஏமாற்ற ஆன்மிக முகமூடியையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

முத்தநாதன் அணிந்த ஆன்மிக முகமூடி

திருக்கோயிலூரை ஆண்ட அரசன் மெய்ப் பொருள் நாயனார் என்பவர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். அவர் ஒரு தூய சிவபக்தர். சிவனிடம் மட்டுமின்றிச் சிவனடியார்களிடமும் பக்தி கொண்டு, அவர்களுக்குத் தொண்டாற்றி அவர்களையும் வழிபட்டு வந்தார்.

கட்டுரை

அவருக்குப் பகையரசன் முத்தநாதன் என்பவன். அவன் மெய்ப்பொருள் நாயனாரைப் போரிட்டு வெல்ல முடியாமையால் அவரை, நயவஞ்சகமாகக் கொல்லத் திட்டமிட்டான். மெய்ப்பொருள் நாயனார் சிவனடியார் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டவர் என்பதை அறிந்த முத்தநாதன், அவரை வஞ்சித்துக் கொல்ல, சிவனடியார் வேடம் போட்டுக் கொண்டு, மெய்ப்பொருள் நாயனாருடைய அரண்மனையை அடைந்தான்.

சிவனடியார் வந்துள்ளார் என்பதை அறிந்த மெய்ப்பொருள் நாயனார் அளவில்லாத ஆனந்தங்கொண்டார்;  எதிர்கொண்டு அழைத்துச் சென்று ஆசனத்தில் அமர்த்தி, அவனைப் பலவாறு போற்றிப் புகழ்ந்து உபசரித்து மகிழ்ந்தார்.

மைபொதி விளக்கேயன்ன மனதினுள் வஞ்சத்தை வைத்துக் கொண்டு மெய்த்தவ வேடம் பூண்டுவந்த முத்தநாதன், மெய்ப்பொருள் நாயனாரை நோக்கி,“நான் இன்று உமக்கு ஆகமப் பொருளை உரைக்க வந்துள்ளேன்!” என்றான்.

கட்டுரை

“அப்படியா! என் பாக்கியமே பாக்கியம்! இத்தகு பேறு பெற்றதற்கு நான் என்ன தவம் செய்தேனோ?” என்று பலவாறு மகிழ்ந்து, ஆகமப் பொருளை உரைக்கும்படி மெய்ப்பொருள் நாயனார் வேண்டினார். “நான் அதை உங்களுக்குத் தனிமையிலேயே உரைக்க வேண்டும். எனவே, இங்கு வேறு யாரும் இருக்கக்கூடாது” என்று முத்தநாதன் கூறினான்.

மெய்ப்பொருள் நாயனார் தன்னுடன் இருந்த தன் மெய்க்காப்பாளன் தத்தன் என்பவனை அங்கிருந்து அகற்ற, இருவரும் தனிமை ஆயினர். ஆசனத்தில் அமர்ந்திருந்த முத்தநாதன், மெய்ப்பொருள் நாயனாரைத் தனக்கு எதிரே தரையில் அமரச் செய்து, கண்களை மூடிக்கொண்டே, தான் சொல்லப் போவதைக் கேட்கும்படிக் கூறினார். மெய்ப்பொருள் நாயனார் அவ்விதமே செய்தார்.

உண்மைப் பொருளை உணரப்போகிறோம் என்ற ஆவலோடு, கண்களை மூடிக்கொண்டு காத்திருந்த மெய்ப்பொருள் நாயனார் மீது `சதக்’ கென்று கத்தி பாய்ந்தது. “ஆ” என்ற அலறலோடு மெய்ப் பொருள் நாயனார் கண் விழித்துப் பார்த்தார். கையில் கத்தியோடு முத்தநாதன் நின்று கொண்டிருந்தான். ஆம், தான் கொண்டுவந்த புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியாலே அவன் மெய்ப்பொருள் நாயனாரைக் குத்தினான்.

அலறல் சத்தம் கேட்டு, மெய்க்காப்பாளனான தத்தன் ஓடோடி வந்தான். காட்சியைக் கண்டு திடுக்கிட்டான். கடுமையான கோபம்கொண்டு முத்தநாதனைத் தாக்குவதற்காக அவன் மீது பாய்ந்தான். அப்போது, கத்திக் குத்தோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த, உத்தம மனிதர் மெய்ப்பொருள் நாயனார், “தத்தா! அவர் நம்மவர், அவரை ஒன்றுஞ்செய்யாதே!” என்று தடுத்து வீழ்ந்தார்.

கட்டுரை

ஓர் உண்மையான கடவுள் பக்தர் மெய்ப்பொருள் நாயநாரை போரில் நேருக்கு நேர் வெல்ல முடியாத முத்தநாதன் சாமியார் வேடம் பூண்டு நயவஞ்சகமாகக் கொன்றானென்றால் கபட வேடதாரிகளுக்கு ஆன்மிகம் எந்த அளவிற்குப் பயன்படுகிறது என்பதை எண்ணிப் பாருங்கள்!

சதிகாரர்களின் முகமூடி ஆன்மிகம்

நாம் இதற்கு முந்தைய பகுதிகளில் சுட்டிக் காட்டியது அப்பர் என்னும் திருநாவுக்கரசரையும், தூய சிவபக்தர் நந்தனாரையும், கடவுள் பெயரைச் சொல்லி, சிதம்பரம் கோயிலில் நயவஞ்சகமாகக் கொன்றனர்.

வள்ளல் பெருமானை, வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில் கொன்று புதைத்துவிட்டு, கதவைச் சாத்திச் சென்றவர் மறைந்துவிட்டார் என்று கூறி மக்களை ஏமாற்றினர்.

இந்தச் சதிச் செயல்கள் எல்லாம் கடவுள் பெயரால், பக்திப் போர்வையில், ஆன்மிக அரணுக்குள் நடந்தவை. இங்கு சதிகாரர்களுக்கு ஆன்மிகம் அரியதொரு முகமூடியாகப் பயன்பட்டுள்ளது.

ஆன்மிக நிறுவனங்கள் அனைத்தும் அப்பட்டமான முகமூடிகள்

மடாதிபதிகளின் பீடங்களான மடங்கள் எல்லாம் அவர்களுக்கான முகமூடிகளே. மடாதிபதிகளின் பீடங்களா? மன்மத பீடங்களா, என்று கேட்கும் அளவுக்கு காமக் கழிப்பிடங்களாக, கூடிக் குலவும் கூடங்களாகவே இருந்து வருகின்றன.

கட்டுரை

மடாதிபதிகளின் காம இச்சைக்கு இரையான இளம் பெண்கள் உயிரோடு வீடு திரும்புவதில்லை! சுவைத்து முடித்ததும் கொன்று புதைத்து அதன்மீது தென்னங்கன்றுகளை, மாமரக் கன்றுகளை நடுவது வாடிக்கை என்றே காலங்காலமாகப் பேசப்படுகிறது. பல மடங்களின் இக்கொடுமைகள் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டாலும் சிவ மடங்களின் லீலைகள் வெளிப்பட்டு சந்திசிரித்தும் வருகின்றன.

காலஞ்சென்ற காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் காமலீலைகள் ஆண்டுக்கணக்கில் பேசப்பட்டு உலகே சிரித்தது. பிரேமாநந்தா, நித்தியாநந்தா பற்றிய ஒளிப்படங்ககள், காட்சிப் பதிவுகள் கூட வெளிவந்து சந்தி சிரித்தன.

புட்டபர்த்தி சாயிபாபா தன்னிடம் வந்த ஆண் பக்தனையே புணர்ந்த (ஓரினச் சேர்க்கை) நிகழ்வை அந்தப் பக்தனே வெளியில் கூறி அவர் அவலத்தை அரங்கேற்றினான்.

அந்த காலத்தில் “தேவதாசி” என்ற முறையில் கோயில்களில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்தனர். தந்தை பெரியார், டாக்டர் முத்துலட்சுமீ மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகியோரின் முயற்சியால் இந்த அநீதி அகற்றப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்
முகமூடி ஆன்மிகம்

ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு மதவாத, மதவெறி அமைப்பு. இந்தியாவை இந்து நாடாக்கிவிட வேண்டும், இஸ்லாமியர்களை, கிறித்தவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கிவிட வேண்டும், ஒரே மதம், ஒரே மொழி, மனுதர்மமே சட்டம். தற்போதுள்ள அம்பேத்கர் எழுதிய சட்டத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்ற கொள்கைகளைச் செயல்திட்டமாக வைத்து செயல்படும் அமைப்பு.

நாடு முழுதும் இந்து முஸ்லிம், இந்து கிறித்தவர்களுக்கிடையே மதமோதல்களை உருவாக்கி, அதன் மூலம் மக்களிடையே மத உணர்வை, மத வெறியைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும், தங்கள் கொள்கைகளை, செயல்திட்டங்களை நிறைவேற்றி விட வேண்டும் என்று திட்டமிட்டு 100 ஆண்டுகளாகச் செயல்படக் கூடியவர்கள்.

ஆனால், இந்த உண்மைகளை வெளிப்படை யாக இந்த இயக்கம் தொடங்கும்போது வெளிப்படுத்தவில்லை. தங்கள் அமைப்பு சமூகத் தொண்டு அமைப்பு, பண்பாடு, கலாச்சாரத்தைக் காக்கக்கூடிய அமைப்பு என்று கூறிக் கொண்டும், இளைஞர்களுக்கு உடற்பயிற்சி தருகிறோம், நல்லொழுக்கத்தைப் போதிக்கிறோம் என்று எல்லா ஊர்களிலும் நுழைந்து இன்றும் பயிற்சியளிக்கின்றனர்.

ஆக, இந்த வன்முறை, மதவெறி அமைப்புக்கு கடவுள், மதம், சாஸ்திரம் என்ற ஆன்மிக உள்ளடக் கங்கள் முகமடியாகப் பயன்பட்டு நாட்டைச் சீரழித்து வருகிறது!

சாமியார்களின் மோசடிகளும்
சரச சல்லாபங்களும்!

சாமியாராய்ப் போனவன் சபலப்பட்டு லீலைகள் செய்தான் அன்று. ஆனால், காமலீலைகள் செய்வதற்கென்றே சாமியாராய் நிறைய பேர் புறப்பட்டுவிட்டார்கள் இன்று.

இப்படிப்பட்ட சாமியார்களின் தொடக்க வாழ்வைத் தோண்டினால், கஞ்சா விற்றவன், கள்ளத்தனம் செய்தவன், டீக்கடை நடத்தியவன், குதிரைவண்டி ஓட்டியவன், குறி சொன்னவன், கொலை செய்தவன் என்று வண்டவாளங்கள் வெளிப்படும்.

இப்படிப்பட்ட சாமியார்கள் பொதுவாகச் செய்வது – பொது இடங்களை ஆக்கிரமிப்பது, அற்புதம் செய்வதாய் விளம்பரப்படுத்துவது, அரசியல்வாதிகளோடு கை கோர்ப்பது, அப்பாவிப் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்திச் சீரழிப்பது. அதிகப் பெண்கள் கிடைக்கும்போது அரசியல்வாதிகளோடு பங்கு போட்டு, அவர்களையும் வலையில் வீழ்த்தி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பனவாகும்.

இந்தச் சாமியார்களில் குடியரசுத் தலைவரே காலில் விழும் “ஹை கிளாஸ்’’ சாமியார்கள் முதல், காத்தாயியும், குப்பாயியும் குறைதீரச் செல்கின்ற “லோ கிளாஸ்’’ சாமியார்களும் உண்டு. பக்தி மயக்கத்தில் செல்கின்ற பக்தர்களில் படித்தவர்களும் உண்டு; பாமரர்களும் உண்டு.

காஞ்சி காமகோடி ஜெயேந்திரர்

இந்தியாவில் பந்தா காட்டிய உயர்நிலைச் சாமியார் காஞ்சிபுரத்துக் காமகோடி பீடத்தில் அமர்ந்திருந்தவர்தான். நல்ல பொருத்தமான பெயர்! காமம் கரைபுரண்டு நுங்கும் நுரையுமாய் பொங்கிவழிவது மட்டுமல்லாமல், கொலை, குத்து, வெட்டு என்று எல்லாம் அங்கு அரங்கேற, காமகோடியல்ல, “காமகேடி” என்று பெயர் பெற்றவர்.

குடியரசுத் தலைவர், பிரதமர் முதல் கார்ப்பரேட் முதலாளிகள் வரை எல்லோரும் வந்து ‘தரிசிக்கும்’ தகுதி பெற்றவராம். கவுண்டமணி பாணியில் சொல்ல வேண்டுமானால், இவர் ஓர் “ஆல் இன் ஆல் அழகுராஜா!’’ அனைத்திலும் எக்ஸ்பர்ட்டாக வாழ்நதார்.

தண்டத்தைவிட்டு பெண்ணோடு ஓடியவர்!

1986இல் ஜெயேந்திரர் தண்டத்தைப் போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல், வெங்கட்ராமன் என்பவரின் பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடினார். ஒரு மாதத்திற்கு மேல் குடும்பம் நடத்தினார். அப்போது ஓடிப்போன இந்த ஓடுகாலி சங்கராச்சாரியை, சி.பி.அய். கொண்டு தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் தலைக்காவிரிக்குப் போய் அந்தப் பெண்ணைப் பிரிந்து வந்த தகவல்கள் _ அப்போது ஊடகங்களுக்குப் பரபரப்புச் செய்திகள். அந்தக் கால இடைவெளியில் சின்ன சங்கராச்சாரி விஜயேந்திரனை நியமித்தது சங்கரமடம். இரண்டு சங்கராச்சாரிகள் இருந்ததன் ரகசியம் இதுதான்.

அனுராதா ரமணன் புகார்:

“1992ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண்ணும் (இவர்தான் சங்கராச் சாரியாரிடம் அறிமுகப்படுத்தியவர்) மடத்துக்குச் சென்றோம். அங்கு உட்கார்ந்து அவருடன் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது சங்கராச்சாரியார் ஆன்மிகம் பற்றிப் பேசினார். நான் தலைகுனிந்து எழுதிக் கொண்டு இருந்தேன். ஆன்மிகவாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது நான் என் தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தேன். அப்போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னுடன் வந்திருந்த பெண் சங்கராச் சாரியாருடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

அவர் என்னிடம் மிக ஆபாசமாகப் பேசினார். அவரது விருப்பத்துக்கு என்னை இணங்கும்படி வற்புறுத்தினார். என்னால் கோபத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், “நீயெல்லாம் மனுஷனா” என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்.

அப்போது ஒரு வாரப் பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தொடராக எழுதி வந்தேன். அதனால் எனக்கு மிரட்டல் வந்தது. அதேபோல போலீசில் புகார் கொடுக்க முடியாதபடி அவர்கள் எனக்குப் பல தொல்லைகள் கொடுத்தார்கள்.’’ என்று எழுத்தாளர் அனுராதா ரமணன் கூறியுள்ளார்.

ரவி சுப்பிரமணியம் வாக்குமூலம்:

ஜெயேந்திரர் பல பெண்களுடன் இருந்துள்ளதை நேரில் பார்த்த ரவி சுப்பிரமணியம் கூறிய அதிர்ச்சிகரமான தகவல்கள்:

மதிய நேரத்தில் பெண்களுடன்:

ஜெயேந்திரருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய தொடர்புகள் இருந்தன. மதிய நேரத்திலேயே தனது அறைக்குள் பல பெண்களுடன் அவர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

மடத்தின் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் இயக்குநர் நடராஜனின் மனைவி பிரேமா, அய்தராபாத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்க்கும் பெண் ஆகியோரை ஜெயேந்திரருடன் தவறான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

இதைத் தவிர நிறைய புளூ பிலிம் படங்களையும் ஜெயேந்திரர் பார்ப்பார். மதியம் 1:30 மணி முதல் மாலை 3 மணி வரை இதெல்லாம் நடக்கும்.

அப்போதைய தினபூமி, ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் இதழ்களைப் புரட்டினால் இவர் புரண்டதெல்லாம் புற்றீசலாய்ப் புறப்படும்.

ஷிவ்முராத் திவிவேதி
(பார்ப்பன சாமியார்):

சாமியார் சிவ்முராத் திவிவேதி இந்து மதத்தைக் கேடயமாக வைத்துக் கொண்டு விபச்சாரம் செய்து வருவதாகப் புகார்கள் வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி போலீசார் சிவ்முராத் திவிவேதியையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர். போலீஸ் விசாரணையில் கான்பூர் சாய்பாபா கோவிலில் சுரங்க அறைகள் இருப்பதும் அங்கு விபச்சாரம் நடப்பதும் உறுதியாகத் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிவ்முராத் திவிவேதி-யின் கோவிலில் அதிரடிச் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு விபச்சாரம் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து உடனடியாகப் போலி சாமியார் சிவ்முராத் திவிவேதி கைது செய்யப்பட்டார்.

ஆசாராம் பாபு:

குஜராத்தின் ஆமதாபாத் அருகே, ஆசிரமம் நடத்தி போலீசாரிடம் மாட்டிக்கொண்ட ஆசாராம் பாபு, லட்சக்கணக்கில் சீடர்கள் கொண்டவர். ஆசாராம் பாபு வடஇந்தியாவில் இருக்கும் பல மதகுருக்களில் ஒருவர்.

நில அபகரிப்பு, கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்ற நடவடிக்கைகளுக்காக இவர் மீது வழக்குகள்.

மத்திய டில்லியில் உள்ள, கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற, பெயர் குறிப்பிடப்படாத இளம்பெண் ஒருவர், 72 வயதான ஆசாராம் பாபு தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக, புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், பாலியல் வன்கொடுமை சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள, ஆசாராம் ஆசிரமத்தில் நடந்ததாக அப்பெண் கூறியதால், வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரிக்குமாறு, ராஜஸ்தான் போலீசாரைக் கேட்டுக் கொண்டனர். புகாரையும் அங்கு அனுப்பினர்.

உத்தரப்பிரதேசம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த அப்பெண், சாமியார் ஆசாராம் பாபுவிடம் ஆசி பெறுவதற்காக, தனது 15 வயது மகளுடன் 13.8.2013 அன்று ஜோத்பூர் சென்றுள்ளார். தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாகச் சொல்லி அவரிடம் சென்று முறையிட்டுள்ளார். 15.8.2013 அன்று அதற்கான சடங்குகளைச் செய்கிறேன் என்று ஆசாராம் பாபு சொல்லியிருந்தார். கிரியைகள் செய்யும்போது, நீங்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாலும், அந்தப் பெண்ணின் குடும்பம் அங்கேயே தங்கி இருந்தது.

அப்போது ஆசாராம் பாபு தன்னை மானபங்கம் செய்ததாக மைனர் பெண், தனது தந்தையிடம் கூறினார். இதுகுறித்து மைனர் பெண் 22-.8.2013 மாலை புகார்அளித்தார். இவன் பல மைனர் பெண்களை வன்புணர்வு செய்து கொன்றவன். அவனுடைய குற்றச் செயல்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டான்.

பிரம்மரிஷி சுபாஷ் பத்திரி:

தன்னிடம் வரும் பெண்களை இறுக்கி அணைத்தும், பாலியல் தொல்லைகள் கொடுத்தது மான புகாருக்கு உள்ளாகி விசாரிக்கப்பட்டவன். ஆந்திராவில் மெகபூப் நகர் மாவட்டம் படுதால் கிராமத்தில் மகேஸ்வரா மகாபிரமிடு என்கிற பெயரில் தியான மண்டபம் அமைத்து 136 ஏக்கரில் ஆசிரமமே நடத்தியவன். தினம் ஒரு லட்சம் பேர் தியானத்தில் கலந்து கொள்ள, அங்குவந்த பெண்களிடம் தவறாக நடக்க, அப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்து சந்தி சிரிக்க, போலீஸ் வழக்குப் பதிந்து விசாரிக்க, பிரச்சனை பெரிதானதால் ஆசிரமத்தை விட்டே ஓடிவிட்டான்.

ரஜினீஷ் குரோவா:

இவன் பிரசாதம் என்னும் பெயரில் மயக்க பிஸ்கட்டுகளைக் கொடுத்து, பெண்களை வன்புணர்ச்சி செய்தவன்.

ஜெய்பூரில் இரு பெண்களை இவ்வாறு வன்புணர்ச்சி செய்தான். இதுசார்ந்த படங்கள் ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பாகியது.

22 வயதுடைய பெண் ஜெய்பூர் காவல் நிலை யத்தில் இச்சாமியாருக்கு எதிராகப் புகார் அளித்தார்.

சந்தோஷ் மாதவன்
(சாமி அமிர்த் சைத்தன்யா):

கேரளாவில் இவன் நடத்திய காமலீலைகள் நீதிமன்றம்வரை சென்று, கேரள நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டான். நான்கு மைனர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனான இவன், பக்தர்களிடம் பணமும் ஏராளமாய்ப் பறித்துள்ளான்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *