“அருள்மிகு திருஅண்ணாமலையார் திருக் கோயில்” திருவண்ணாமலையில் உள்ளதொரு சிவன் கோயிலாகும். அருணாசலேஸ்வர் கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. இக் கோயில் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட ஆரம்பிக்கப்பட்டதாம். பின்னர், இக்கோயிலைப் பல்லவர்கள், சோழர்கள், ஹொய்சால மன்னர்கள், விஜயநகரப் பேரரசர்கள் ஆட்சிக் காலங்களில் பல கட்டங்களாக விரிவுபடுத்திக் கட்டினார்களாம்!
நினைத்தாலே முக்தி கிட்டுமாம்!
சிவன் – பார்வதி இருவரும் அண்ணா மலையார் – உண்ணாமுலையம்மன் என இங்குக் கோயில் கொண்டுள்ளார்களாம். ‘நினைத்தாலே முக்தித் தருகின்ற தலம்’ எனப் பக்தர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குப் பொருளும், பொருத்தமும் எவையேனும் உண்டா என்றால் – அவையென்றுதான் எவையும் இல்லை!
மலையை எவராவது, எவை பொருட்டாவது உரிய வழிமுறைகளைக் கொண்டு அழிப்பதற்கு முனைந்தாலன்றி, மலையானது தானாகவே சிதைவுற்று, அழிந்து அடையாளம் இல்லாது போகுமா? இதனை மறைத்துவிட்டு இங்குள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகக் கதைவிட்டு, இம்மலையானதே சிவபெருமான் என்று அளந்து விட்டுள்ளனர். இம்மலையைச் சுற்றிவந்து வழிபடுவதைத்தான் ‘கிரிவலம்’ என்கின்றனர்.
இங்கு சிவனை வழிபட்டு, மலையைச் சுற்றி ‘கிரிவலம்’ வந்தால் பாவமெல்லாம் பறந்துபோகும் என்று, ஒவ்வொரு பவுர்ணமியின்போதும் – அதிலும் சித்திரைப் பவுர்ணமியிலும், கார்த்திகை தீபம், சிவராத்திரி எனப்படுகின்ற நாள்களிலும் இங்குத் திரண்டு வருகின்ற ‘பக்தப் பெருமக்களால்’ இந் நகரமே திண்டாடித் திக்குமுக்காடிப் போகின்றது.

மக்கள் தொகைப் பெருக்கம்
வடமாநிலங்களில் இருந்து வருகின்றவர்களைத் தவிர்த்து, தற்போது சில ஆண்டுகளாகத் தென் மாநிலங்களிலிருந்து அதிலும் குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா ஆகியவற்றிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் அந் நகரத்திலேயே மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இடம் வாங்கி, வீடு கட்டிக் குடியேறுகின்றனராம். இதனால் திருவண்ணாமலையில் மக்கள் தொகைப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. இப்படியொரு ‘திடீர்’ பெருக்கத்தால் இந் நகரின் கதி என்னவாகும் என்கின்ற கலக்கமே பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
‘கிரிவலம்’ வந்தால் பாவங்கள் மாய்ந்து, பலன் பொங்கிக் கொட்டும் என்று மலையைச் சுற்றி வருகின்றனர். எல்லா நாள்களிலும் வலம் வரலாம் என்றாலும், பவுர்ணமி, கார்த்திகை தீபம், சிவராத்திரி நாள்களில் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி அங்கு வந்து போக்குவரத்து நிலைகளைச் சீர்குலைத்துப் பெரும் பாடாய்ப் படுத்துகின்றனர்.
அங்கு வழிபாடு முடித்துத் திரண்டு வந்த மக்கள் ஒருசேரத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கு அடைகின்ற அவதியும், துன்பமும், பேருந்து, ரயில்களில் இடம் பிடிப்பதற்கு முட்டி மோதிக் கொள்கின்ற அவலக் காட்சிகளும் ஏராளமாய்த் தென்பட்டு – அவைகட்குப் பஞ்சம் என்பதே இருக்காது.
மலையெனக் குப்பைக் கூளங்களின் குவியல்
14 கிலோ மீட்டர் கொண்ட அந்த மலைப்பாதையில் ஆங்காங்கு குப்பைக் கூளங்கள், அம் மக்கள் சற்றும் கவலைப்படாது வீசியெறிகின்ற சகல விதமானப் பொருள்கள் மலையெனக் குவிந்து கிடக்கும். கழிப்பறைப் பற்றாக்குறையாலும், சிறுநீர் கழிப்பதற்கும் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளையும் தாண்டி அதற்கென அந்த மலைப்பாதையின் ஓரங்களையே அவற்றிற்குப் பயன்படுத்துவர். இதனால் துர்நாற்றக் கொடுமைதான் அங்கு கோலோச்சும்! இவ்வளவு மக்களும் எப்படி இவற்றைச் சகித்துக் கொண்டு நடையாய் நடக்கின்றார்கள் என்று வியப்படையத்தான் வேண்டும்.
மலைப் பாதையின் ஓரங்களில் பல கோயில்களை உருவாக்கி வைத்துள்ளார்கள். ஆங்காங்கு பல சாமியார்கள் மடங்களை நடத்தி வருகின்றனர். நடந்து செல்கின்றவர்கள் வழிபாடு என்று அக் கோயில்களில் தேங்காய் உடைத்தல், கற்பூரம் கொளுத்துதல், நேர்த்திக் கடன் என்று அச் சாலைகளைக் குப்பை மலையாக்குவர்.
சாலையோரங்களில் வரிசையாக இருக்கின்ற உணவகங்களில் சுகாதாரம் என்பதே துளியும் இருக்காது. இடப் பற்றாக்குறையினாலும், பரிமாறுகின்ற பணியாளர்கள் போதுமான அளவுக்கு இல்லாமையாலும், உணவுப் பொருள்கள் தீர்ந்து விடுகின்ற சூழலில் பசித் துன்பத்தால் முக்தி பெற்று விடலாம் என்றுப் பேரார்வம் பொங்க – பெரும் நம்பிக்கையோடு வந்தவர்களின் நிலையோ அங்கும் பரிதாபம்தான்!

கஞ்சா, மது, பாலியல் அத்துமீறல்கள் நடப்பில்…
கஞ்சா, மதுப் புழக்கமும் தாராளமாய் இங்குண்டு! பாலியல் தொழிலும், பாலியல் வன்கொடுமைகள், அத்து மீறல்களும் நடப்பில் உள்ளனவாகும். கஞ்சா போதைப் பொருள்கள், அதைச் சாப்பிடுகின்ற சில சாமியார்கள் போடுகின்ற போதை ஆட்டங்கள் பற்றிக் காவல்துறைக்குப் புகார்கள் வரிசை கட்டுகின்றன. டாஸ்மாக்கின் மதுபானங்களை வீடுகளில் பதுக்கிக் கொண்டு அதிகாலை நேரத்திலே கூட அதிக விலைக்கு விற்பதும் நடக்கின்றதாம். இவை பற்றியப் புகார்களும் பல உள்ளன.
அண்மையில் (27.7.2026) போதைப் பொருள்களின் புழக்கத்தைத் தடுப்பதற்கு, மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் திருவண்ணாமலையின் பல இடங்களில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். டிரோன் பறக்கவிட்டும் சோதனை நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஏராளமான கஞ்சா பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பலர் கைது செய்யப்பட்டனர்.
பக்தர்களுக்குத் தொந்தரவு
கிரிவலப் பாதையில் உடல் முழுதும் விபூதி மாவைப் பூசிக்கொண்டு, நெற்றியில் குங்குமத்தை அப்பிக்கொண்டு, மீசை, தாடியையும் ஆண்டுக் கணக்கில் வளர்த்து வருகின்ற ‘சாமி’யார்கள் பணம் கேட்டுப் பக்தர்களிடம் தொந்தரவு செய்வர். விதம் விதமாக வேடம் போட்டுக் கொண்டு அந்தப் பாதையின் நடுவில் பலரும் போட்டிப் போட்டு இடம் பிடித்துக்கொண்டு, கண்களை மூடி அமர்ந்தும், தூங்குவதைப் போன்று நடித்தும், போதையில் படுத்துக்கொண்டும் பக்தர்கள் தம்மைக் கடந்து நடந்து போவதற்குப் படும் சிரமத்தைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். இப்படிச் சீர்கேடுகளின் சிகரமாய்த் திகழுகின்ற இந்தத் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் திடீர் எச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது (27.7.2026).
அந்த அறிவிப்புப் பலகை கூறுவதுதான் என்ன? எதற்காக அந்த எச்சரிக்கை?
இடுக்குப் பிள்ளையார் கோயில்
கிரிவலப் பாதையில் உள்ளது “அருள்மிகு சிறீ இடுக்குப் பிள்ளையார் ஆலயம்!”. கிரிவலம் செல்பவர்கள் கண்டிப்பாக அக் கோயிலில் நின்று வழிபாடு செய்ய வேண்டுமாம்! இக் கோயிலில் பிள்ளையார் உருவச் சிலையும் இல்லை. சிறிய கோபுரத்துடன் கூடிய ஒரு மண்டபம் மட்டுமே!
அம் மண்டபத்தில் நேர்க்கோட்டில் இல்லாத மூன்று வாசல்கள் உள்ளன. பின்பக்க இடுக்கு வாசல் வழியாக நுழைந்து, நடு இடுக்கு வாசல் வழியாகத் தவழ்ந்து வந்து, முன் இடுக்கு வாசல் வழியாக வெளியே வர வேண்டுமாம்.
இந்த நம்பிக்கையின் பின்னணியில் நடக்கும் அசம்பாவிதங்களும், அதற்குத் தரப்படும் தீர்வுகளும் மூடநம்பிக்கை மற்றும் பகுத்தறிவு சார்ந்த பல கேள்விகளை எழுப்புகின்றன.

உள்ளே சென்று
வெளியே வருவதால் என்ன பலனாம்?
வெளியே வருவதால் என்ன பலனாம்?
இப்படி உள்ளே சென்று வெளியே வருவதால், எல்லா நோய்களும் பறந்து போய் விடுமாம். பில்லி சூன்யம் தம்மை விட்டு அகன்று விடுமாம். உடல் வலியும் தீருமாம். குழந்தைப் பேறு இல்லாதவர்கட்கு அக் குறை அகன்று குழந்தைப் பிறந்து விடுமாம். இவ்வாறெல்லாம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், ஏராளமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று மக்களை ஏங்க வைத்துள்ளனர்.
ஆபத்தை அறியாத மூடநம்பிக்கை
மனித உடல் அமைப்புக்கும், இயற்பியல் விதிகளுக்கும் அப்பாற்பட்ட எந்த அற்புதமும் பாறை இடுக்கில் நடப்பதில்லை. பாறையின் இடைவெளி மிகக் குறுகியது; அதில் நுழையும் ஒரு மனிதரின் உடல் அளவு, மூச்சுக்காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தே அவர் வெளியே வர முடியும்.
இதன்படி ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியைச் சேர்ந்த பக்தர் 36 வயது கொண்ட மணிகுமார் இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்கு வந்துள்ளார் (24.7.2026).அன்று இரவு 11 மணிக்கு இந்த இடுக்குப் பிள்ளையார் கோயிலின் முன்வாசலில் நுழைந்து சென்றார். உள்ளே சென்ற அவரால் உடல் பருமன் காரணமாக வெளியே வர முடியவில்லை. சிக்கிக் கொண்டு விட்டார்.
மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட அவரை பொதுமக்கள் கடும் போராட்டம் நடத்தி மீட்டனர். 108 மருத்துவ அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். குழந்தைப் பேறுக்காகவே இத்தகைய வழிபாட்டை அவர் நடத்தினாராம்.
இந்த அதிர்ச்சி விலகுவதற்குள், இது நடந்த அடுத்த நாளே மற்றொரு பெண்மணி அதே இடுக்கில் புகுந்து சிக்கிக்கொண்டார். அவரை மத்து போன்ற பெரிய கட்டையைக் கொண்டு தள்ளி, பெரும் சிரமத்திற்கு இடையே அவரை வெளியே மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும், அறிவியல் பூர்வமற்ற மூடநம்பிக்கை மனித மூளையை எந்தளவுக்கு ஆக்கிரமித்துள்ளது என்பதற்குச் சான்றாக இந்தச் சம்பவம் அமைகிறது.
இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பும் கூட ஒரு பெண் உள்பட சில பக்தர்கள் அந்தச் சந்தில் சிக்கிக் கொண்டனராம். இதிலும் எவ்வளவு பெரிய உடம்பாக இருந்தாலும், அந்த வாசலில் சற்று நுழைந்ததும் அவ் உடல் தானாகவே இளகிச் சுருங்கி விடும் என்கின்ற குருட்டு நம்பிக்கையும் உள்ளது.
கோயிலில் அனுமதி எப்படி?
இதற்குப் பின்னர்தான் அக் கோயிலின் வாசல் அருகே இரும்புத் தடுப்புகளை அமைத்துள்ளனர். “உடல் பருமன் உள்ளவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், சுவாசக் கோளாறுகள் உடையோர், மாற்றுத் திறனாளிகள் கோயிலில் நுழைந்து செல்ல அனுமதி இல்லை” என்று அறிவிப்புச் செய்துள்ளனர். அக் கோயிலுக்குச் சற்று முன்பாக 2 கம்புகள் வைத்து – அக் கம்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் நுழைந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே இடுக்குப் பிள்ளையார் கோயிலில் நுழைவதற்கு அனுமதி உண்டாம்!
எப்படி இருக்கின்றது? கோயில் வழிபாட்டுக்கு வருகின்ற பக்தரை இப்படியும் வடிகட்டி, ஆய்ந்து பார்த்துக் கோயிலின் உள்ளே அனுப்பி வைக்கின்ற விசித்திரத்தை என்னவென்று சொல்வது! இத்தகைய வழிபாடு தேவையற்றது என்றாலும், கட்டாயமே எனக் கொண்டால், கோயிலின் அந்த வாசல்களைச் சற்று அகலப்படுத்தி விசாலமாக்கினால்தான் என்ன கெட்டுவிடப் போகின்றது?
பாதுகாப்பா? அல்லது
மூடநம்பிக்கைக்குத் துணையா?
மூடநம்பிக்கைக்குத் துணையா?
அடிக்கடி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதால், அங்கு நிர்வாகத்தின் சார்பில் இரண்டு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் பணிதான் விசித்திரமாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் உள்ளது:
ஆபத்தான செயலைத் தடுக்கத் தவறுவது ஏன்? பாறை இடுக்கில் இறங்குவதே ஆபத்தானது எனும்போதே, அதை முற்றிலும் தடை செய்வதே சரியான தீர்வாகும். ஆனால், அதைத் தடுக்காமல் அனுமதிப்பதே முதல் தவறு.
‘மெலிந்தவர்கள் செல்லலாம், பருமனானவர்கள் செல்லக்கூடாது’ என்ற அளவுகோல் எந்த அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டது? ஆபத்து என்பது உடல் எடையை மட்டும் பொறுத்தது அல்ல; பதற்றம், மூச்சுத்திணறல், இதயத் துடிப்பு மாறுபாடு எனப் பல காரணங்களால் மெலிந்தவர்களுக்கும் அங்கு ஆபத்து நேரலாம்.
சிக்கிய பின் தள்ளுவது: ஒருவர் சிக்கிய பிறகு கட்டையால் தள்ளி எடுப்பது அல்லது மீட்பது என்பன நிரந்தரத் தீர்வாகாது. அது மேலும் காயங்களையோ அல்லது உயிரிழப்பையோ தான் ஏற்படுத்தும்.
ஆபத்து எனத் தெரிந்த ஒரு செயலைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, “சிக்கினால் காப்பாற்றுகிறோம்” என்று ஆட்களை நியமிப்பது நெருப்பு எரியும் இடத்தில் விசிறியை பிடித்துக் கொண்டு நிற்பதற்குச் சமம்.
பகுத்தறிவுப் பார்வை: தேவை என்ன?
குறுகிய இடத்தில் உடல் மாட்டி மூச்சுத்திணறல் ஏற்படுவது ‘அடைபட்ட இட பயம்’ (Claustrophobia) மற்றும் ஆக்சிஜன் குறைபாட்டால் மரணத்தை விளைவிக்கும். ஆன்மீகம் என்பது உயிரைப் பணயம் வைக்கும் செயலல்ல என்பதை மக்கள் உணர வேண்டும்.
உயிர்ப்பலி வாங்கும் அளவுக்கு ஆபத்தான இந்த ‘பாறை இடுக்கு நுழைவு’ வழக்கத்தை முற்றிலுமாகத் தடை செய்து அந்த இடுக்கு வாசல்களை உடனடியாக அடைக்க வேண்டும் அல்லது பொதுமக்கள் செல்ல முடியாதபடி கம்பிகள் அமைத்துப் பூட்ட வேண்டும்.
தந்தை பெரியாரின் சிந்தனையே உண்மைப் பாடம்!
கடவுளின் மேல் மிகவும் நம்பிக்கை வைத்து, பக்திப் பெருக்கோடு அக் கோயிலுக்கு வந்தவரின் உயிர் பறி போயுள்ளது. “கடவுள் எதிலும், எப்படியும் நம்மைக் காப்பாற்றுவார்” என்ற நம்புகின்ற மக்களின் கண்கள் அறிவு வெளிச்சம் பெறுவதற்கு, பக்தியை விட்டொழித்து தன்னம்பிக்கைமிக்க மானமுள்ள மனிதனாக வாழுவதற்கு இந்தத் துயரச் சம்பவம் தந்துள்ள இப் பாடத்தையும் விஞ்சிய வேறு பாடம் ஏதேனும் வேண்டுமா?
தந்தை பெரியாரது சிந்தனை ஊற்றுகளே மனித வாழ்வைச் செம்மையாக்கும் என்பதுதானே உண்மைப் பாடம்!
