ஒரு மேதையின் விடைபெறல்
2018-ஆம் ஆண்டு, மார்ச் 14-ஆம் தேதி கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் அமைதியாகக் காலமானார். தற்செயலாக, ஸ்டீபன் ஹாக்கிங் கடவுள் மற்றும் பிரபஞ்சத்தின் உருவாக்கம் குறித்து மிகவும் தெளிவான மற்றும் துணிச்சலான கருத்துகளைக் கொண்டிருந்தார். கருந்துளைபற்றிய தெளிவான அறிவியலை எடுத்துரைத்தவர்.
“கடவுளுக்கு இடமில்லை”
தனது புகழ்பெற்ற புத்தகமான ‘தி கிராண்ட் டிசைன்’ (The Grand Design – 2010) என்பதில், பிரபஞ்சம் உருவாவதற்கு ஒரு கடவுள் தேவையில்லை என்று கூறினார்
“ஈர்ப்பு விசை (Gravity) போன்ற ஒரு விதி இருப்பதால், பிரபஞ்சம் தன்னைத்தானே எதிலிருந்தும் உருவாக்கிக்கொள்ள முடியும். இந்தத் தன்னிச்சையான உருவாக்கமே நாம் இருப்பதற்குக் காரணம்.”
இப்பெருவெளியை உருவாக்க தொடங்கி வைக்க ஒரு கடவுள் என்ற ஒன்று ‘(மத நூல்களில் உள்ளதைப்போல்) கட்டளையிட அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
“மரணத்திற்குப் பின் வாழ்வு
என்பது ஒரு கதை”
மரணத்திற்குப் பின் சொர்க்கம் அல்லது நரகம் உண்டு என்பதை அவர் ஒரு கற்பனை என்றே கருதினார்.
“மூளை என்பது பாகங்கள் செயலிழக்கும்போது நின்றுவிடும் ஒரு கணினி (Computer) போன்றது. பழுதடைந்த கணினிகளுக்குச் சொர்க்கமோ அல்லது மறுவாழ்வோ கிடையாது; அது இருளைப் பற்றிய பயம் கொண்டவர்களுக்காகச் சொல்லப்படும் ஒரு தேவதைக் கதை,” என்று ஒரு பேட்டியில் கூறினார்.
அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அவர் இவ்வாறு விளக்கினார்:
“மதம் என்பது அதிகாரத்தின் (Authority) அடிப்படையில் அமைந்தது, அறிவியல் என்பது கவனிப்பு மற்றும் தர்க்கத்தின் (Observation and Reason) அடிப்படையில் அமைந்தது. இறுதியில் அறிவியலே வெல்லும், ஏனெனில் அது உண்மையானது.”
விதியின் மீதான எதார்த்தமான பார்வை
விதியை நம்புபவர்களைப் பற்றி அவர் ஒருமுறை கிண்டலாகக் குறிப்பிட்டார்:
“எல்லாம் விதியின்படி தான் நடக்கும், அதை மாற்ற முடியாது என்று சொல்பவர்கள் கூட, சாலையைக் கடக்கும்போது இருபுறமும் பார்த்துவிட்டுத்தான் கடக்கிறார்கள்.”
அவரது இறுதிப் புத்தகமான ‘பெரிய கேள்விகளுக் கான சுருக்கமான பதில்கள்’ (Brief Answers to the Big Questions) என்பதில் மிக நேரடியாகப் பதிலளித்தார்:
“கடவுள் இல்லை. யாரும் இப்பெருவெளியை வழி நடத்தவில்லை.”
அவரைப் பொறுத்தவரை, பெருவெளி என்பது அறிவியலின் விதிகளால் (Laws of Physics) இயங்கும் ஒரு நுட்பமான கட்டமைப்பு. மனித இனம் அந்த விதிகளைப் புரிந்து கொள்வதே உண்மையான அறிவொளி என்று அவர் நம்பினார்.
