திருக்குவளை, மார்ச் 14 மறைந்த பெரியார் பெருந் தொண்டர் திருக்குவளை அய்யா ரங்கநாதன் அவர்கள், கொள்கையாக என்றைக்கும் இருப்பார். எனவே, அவருடைய கொள்கைப் பாதையில், என்றைக்கும் நாம் பயணிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (14.3.2026) காலை திருக்குவ ளைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மறைந்த பெரியார் பெருந்தொண்டர் திருக்குவளை ரங்கநாதன் இல்லத்திற்குச் சென்று, அவருடைய படத்தினைத் திறந்து வைத்து, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நினைவுரையாற்றினார்.
அவரது நினைவுரை வருமாறு:
பெரியார் பெருந்தொண்டர் தோழர் ரங்க நாதன் அவர்கள், எங்கே நான் கூட்டத்திற்குச் சென்றாலும், தவறாமல் வருவார். அப்படி வருவது மட்டுமல்ல, ஓர் அன்பளிப்பையும் இயக்கப் பணிகளுக்காகக் கொடுப்பார்.
எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி
அப்படிப்பட்ட ஆர்வம் மிக்க ஒருவரை நாம் இழந்துவிட்டோம். அவருடைய இறப்புச் செய்தி வந்தபோது, நான் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்தேன். அந்தச் செய்தியைக் கேட்டதும் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
அவர் மிகவும் துணிவானவர். அவருடைய பிள்ளைகளை நல்ல அளவிற்கு ஆளாக்கி யிருக்கிறார். இந்தப் பகுதிக்கு வரும்போது, அவருடைய இல்லத்திற்கு வந்து, அவருடைய படத்திற்கு மரி யாதை செலுத்தவேண்டும் என்று நினைத்தேன். அதேபோன்று, இன்று வந்திருக்கின்றேன்.
ஊர் மக்கள் இவ்வளவு பேர் இங்கே திரண்டு, கட்சி வேறுபாடு, கருத்து மாறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு வந்திருக்கிறீர்கள். அதற்காக உங்க ளுக்குத் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அய்யா ரங்கநாதன் அவர்கள், கொள்கையாக என்றைக்கும் இருப்பார். எனவே, அவருடைய கொள்கைப் பாதையில், எல்லோரும் என்றைக்கும் பயணிப்போம் என்பதுதான் அவருக்கு நாம் செய்யும் சிறப்பு.
இயக்கத்திற்கும், இந்தக் குடும்பத்திற்கும் என்றைக்கும் தொடர்பு இருக்கும்
இந்தக் குடும்பத்தில் அய்யா ரங்கநாதன் இருந்த போது, இந்தக் குடும்பத்தில் ஒருவராக எப்படி நாங்கள் இருந்தோமோ, அதுபோன்றே, அவர் மறைந்தாலும், இந்தக் குடும்பம் என்றைக்கும் இயக்கக் குடும்பமாக இருக்கும். இயக்கத்திற்கும், இந்தக் குடும்பத்திற்கும் என்றைக்கும் தொடர்பு இருக்கும் என்று கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவுரையாற்றினார்.
