‘தமிழ்நாடு சுயமரியாதை மண்’ என்று அலங்காரத்திற்காகவோ, ஆடம்பரத்துக்காகவோ சொல்லப்படுவது அல்ல!
‘திராவிட மாடல்’ ஆட்சி, மீண்டும் வரும்!
மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்பார்!
சென்னை, மார்ச் 10 ‘தமிழ்நாடு சுயமரியாதை மண்’ என்று அலங்காரத்திற்காகவோ, ஆடம்பரத்துக்காகவோ சொல்லப்படுவது அல்ல! பொருளோடு சொல்லப்படு வது. ‘திராவிட மாடல்’ ஆட்சி, மீண்டும் வரும்! மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘மானமும் அறிவும் மகத்தானது!
மனிதநேயமே திராவிட மாடலானது!’’
கடந்த 6.3.2026 அன்று மாலை சென்னை கிழக்கு மாவட்டம் – துறைமுகம் தொகுதி தி.மு.க. சார்பில், மண்ணடியில் உள்ள தம்பு செட்டி தெருவில், ‘‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா – 2026’’ நிகழ்ச்சியில், ‘‘மானமும் அறிவும் மகத்தானது! மனிதநேயமே திராவிட மாடலானது!’’ எனும் கருத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
இந்தக் கொள்கை, இந்த ஆட்சி ஏன் மீண்டும் வரவேண்டும் என்று நினைக்கிறோம். இந்தக் கூட்டத்தில் உத்தரவாதம் எழுதப்பட்டுவிட்டது. அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடத்தினால், 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, மீண்டும் கோட்டைக்குள் அமர்ந்து ஆட்சி செய்யக்கூடிய காட்சி யைப் பார்ப்போம். இங்கே இடையூறு கொடுத்துக் கொண்டிருந்த ஆளுநரைக் காணவில்லை. அவர் இங்கே பல வித்தைகளைக் காட்டினார். அந்த வித்தை களை எல்லாம் தூக்கிச் சாப்பிடக்கூடியவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். இந்த அமைச்சர் போதாதா? அவர்கள் எல்லாம் சித்து விளையாட்டைக் காட்டினால், இவர் சித்தராகவே இருப்பார். அவர்களுக்குத் தெரிந்தது சித்து; இவர் சித்தர்.
அங்கே இருப்பது கூட்டணி அல்ல, பூட்டணி!
இங்கே இன்னொரு கூட்டணியைப் பார்த்தீர்களே யானால், அந்த வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் வண்டியில் இடம் இல்லை, இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள். அங்கே இருப்பது பூட்டணி; கூட்டணி அல்ல, பூட்டணியாகும். இங்கே நாளும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு என்ன காரணம், செயல், சாதனைதான். இப்போது நடைபெறவிருப்பது தேர்தல் அல்ல, நண்பர்களே! திராவிடத்திற்கும் – ஆரியத்திற்கும் நடைபெறுகின்ற போராட்டம்!
வடக்கே இருந்து நீங்கள் எத்தனை பேர்வந்தாலும் தமிழ்நாட்டை அவர்களால் பிடிக்க முடியாது!
தாய்மார்களே நீங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சொல்ல வேண்டும்; வாக்காளர் பட்டியலில் உங்களு டைய பெயர் இருக்கிறதா? என்பதைப் பாருங்கள். ஏனென்றால், எல்லா வித்தைகளையும் செய்யலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் என்னதான் செய்தாலும், தமிழ்நாட்டை அவர்களால் பிடிக்க முடியாது. காரணம், தமிழ்நாடு திராவிட மண், பெரியார் மண்! இதை அசைத்துப் பார்க்கலாம் என்றால், முடியவே முடியாது. வடக்கே இருந்து நீங்கள் எத்தனை பேர் வந்தாலும், அமித்ஷாவிற்கு இங்கே வீடு பார்க்கிறார்கள் என்று சொன்னார்கள், பரவாயில்லை, நிரந்தரமாவே இங்கே குடிவாருங்கள். நல்ல பாதுகாப்போடு இருக்க லாம். வடநாட்டுக்காரர்கள் இங்கே வந்தால், திரும்பிப் போக மாட்டேன் என்கிறார்கள். ஏனென்றால், இங்கே தான் எல்லா வசதிகளும் இருக்கிறது. அவர்களுடைய பிள்ளைகளுக்குப் படிக்கின்ற வசதி, வாய்ப்புக் கிடைக்கி றது. இதை நான் சொல்லவில்லை, அவர்களே தான் சொல்கிறார்கள்.
மக்களுக்கு அமைதியான வாழ்க்கை; மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதை அவர்கள் சாப்பிடலாம். வட மாநிலங்களில், விரும்புகிற உணவைச் சாப்பிட முடியாது; விரும்புகிற செயல் திட்டத்தைச் செய்ய முடியாது. பாதுகாப்பான இடம் கிடையாது. தமிழ்நாட்டில் கொஞ்சம் கூட வேறுபாடு இல்லாமல், மதம், ஜாதி, கட்சி வேறுபாடு இல்லாமல், ‘அனைவருக்கும் அனைத்தும்’ – இதுதான் சமூக நீதிமண்.
சமூக நீதி என்றால் என்ன?
சமூக நீதி என்றால் என்ன? பெரியார் சொன்னதை அப்படியே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தன்னு டைய உறுதிமொழியில் சொன்னார்.
‘அனைவருக்கும் அனைத்தும்’ இரண்டே வார்த்தை – இதுதான் சமூகநீதி. இப்போது போராட்டம் ஏன்?
ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. ஆகிய கட்சிகள் ஏன் அவர்கள் நம்மை எதிர்க்கிறார்கள்? ‘திராவிட மாடல்’ ஆட்சியை ஒழிப்பதற்காக ஏன் குறுக்கு வழியில் போகிறார்கள்.
தமிழ்நாட்டில், தாய்மார்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே, அவர்களை மகிழ்ச்சியாக இருக்க விடக்கூடாது என்பதற்காக மாநில அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தினார்கள்.
அலங்காரத்திற்காகவோ, ஆடம்பரத்துக்காகவோ சொல்லப்படுவது அல்ல!
மாதாமாதம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் பணம் வருகிறது. பணம் வருவது முக்கியமல்ல. அந்தத் திட்டத்திற்குப் பெயர் வைத்தார் பாருங்கள், அதை நன்றாக நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். தமிழ்நாடு சுயமரியாதை மண் என்று நாம் சொல்கிறோமே, அது ஏதோ அலங்காரத்திற்காக அல்ல; பெரியார் மண் என்று சொல்கிறோமே, அது ஏதோ ஆடம்பரத்துக்காக அல்ல, அழகுக்காக அல்ல நண்பர்களே, பொருளோடு சொல்லப்படுகிறது.
‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!’’
மகளிருக்கான திட்டத்தை, அண்ணா பிறந்த நாள் அன்று, கலைஞர் பெயரில் அந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. அந்தத் திட்டத்திற்கு என்ன பெயர் வைத்தார் என்றால், ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’’ என்றுதான்.
மகளிருக்குப் பணம் கொடுப்பது முக்கியமல்ல, அந்தத் திட்டத்திற்கான பெயர்தான் முக்கியம். இது உங்களுக்குள்ள உரிமை; அரசாங்கம் பிச்சை போடவில்லை. அரசாங்கம் உங்களுக்குச் சலுகைக் காட்டவில்லை. உங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டி யது. உழைக்கிறீர்கள், எண்ணற்ற உழைப்பு, வீட்டில் உழைப்பு – பெண்கள் மாதிரி கடுமையான உழைப்பை வேறு யாரும் கொடுக்கவில்லை. உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று சொன்னால், அதுதான் சுயமரியாதை – அதுதான் நிமிர்ந்து இருக்கக்கூடியது. ‘தலைகுனிய விடமாட்டேன்’ என்று சொன்னார் அல்லவா, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ‘தலைகுனிய விடமாட்டேன்’ என்று சொல்வதற்கு அதுதான் அடையாளம்.
பொய்ப் பிரச்சாரத்தை, ஒரு போலிப் பிரச்சாரத்தை செய்யலாம் என்று நினைத்தனர்!
எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கின்ற ஆர்.எஸ்.எஸ்.– பா.ஜ.க., மகளிருக்கு மாதா மாதம் கொடுக்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைத் தடுக்கவேண்டும்; இலவசங்கள் கொடுக்கிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுத்து, அந்தத் திட்டத்தை நிறுத்தலாம். அப்படி நிறுத்திவிட்டால், ‘‘பார்த்தீர்களா, பார்த்தீர்களா, மாதா மாதம் மகளிருக்கு 1000 ரூபாய் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, நிறுத்திவிட்டார்கள் பாருங்கள்; இனிமேல் உங்களுக்கு அந்தத் தொகை வராது என்று பொய்ப் பிரச்சாரத்தை, ஒரு போலிப் பிரச்சாரத்தைக் கூலிகளை விட்டுச் செய்யலாம் என்று நினைத்தார்கள். நிறைய கூலிகள் அவர்களுக்குக் கிடைப்பார்கள்; அதற்காகவே தமிழ்நாட்டில் சில பேர் இருக்கிறார்கள்.
நல்ல விலைக்காவது விற்றுக் கொள்ளலாம் அல்லவா! – தந்தை பெரியார்!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஒரு கவிதை எழுதினார், ‘‘உன்னை விற்காதே’’ என்று. அதாவது நிறைய பேர் தன்னை விற்று கொள்கிறான். வடநாட்டில் போய் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனுடைய விளைவு தான் வெளியே வர முடியவில்லை அவர்களால். ஒரு காலத்தில், தங்களை விற்றுக் கொண்டிருக்கிற தமிழர்களைப் பார்த்து பெரியார் சொன்னார், ‘‘உங்களை விற்றுக் கொள்வதைப்பற்றிக் கூட கவலை இல்லை. நல்ல விலைக்காவது விற்றுக் கொள்ளலாம் அல்லவா! அற்ப விலைக்கு உங்களை விற்றுக் கொள்கிறீர்களே?’’ என்று கேட்டார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நிறுத்த லாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அதை எப்படித் தெரிந்து கொண்டாரோ தெரியவில்லை; அவர்தான் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர். எந்த வியூகம் அமைத்து, எந்த சூழ்ச்சிப் பொறிகளை நீங்கள் வைத்தா லும், அந்த சூழ்ச்சிப் பொறிகளைத் தூள் தூளாக்கக் கூடிய ஓர் அற்புதமானவர்.
திடீரென்று ஒரு நாள், பெண்களின் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் வந்தது. எங்கள் வீட்டில் சமையல் செய்வதற்காக ஓர் அம்மா வழக்கமாக வருவார். அன்றைக்கு அந்த அம்மா, கொஞ்சம் தாமதமாக வந்தார். ஏம்மா, தாமதமாக வருகிறாய், வீட்டில் ஏதாவது பிரச்சினையா? என்று கேட்டேன்.
உடனே அந்த அம்மா சிரித்துக் கொண்டே, வீட்டில் எதுவும் பிரச்சினை இல்லீங்க அய்யா, என்னுடைய வங்கிக் கணக்கில் திடீர்னு 5000 ரூபாய் பணம் வந்தி ருக்கு என்றார்.
அப்படியா? யார் அனுப்பினார்கள்? என்றேன்.
ஏன், தெரியாதா? ஸ்டாலின்தான் என்றார்.
இன எதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை!
இதைத்தான் அவர்களால் (இன எதிரிகளால்) பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், நிதி நெருக்கடி கொடுக்கலாம் என்று நினைத்தார்கள். ராஜ்பவனிலிருந்து இன்றைக்கு ஒருவர் ஓடுகிறார் பாருங்கள், நேற்று வரையில் இங்கே இருந்தார். நாளைக்கு இங்கே இருக்கப் போவதில்லை. எங்களுக்கு அதில் ஒரு வருத்தம்தான்.
அமைச்சருக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கி றேன். கடந்த அய்ந்தாண்டுகளுக்கு முன்பு மே ஏழாம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவின்போது, எனக்குக் கூட நாற்காலியை கொடுத்த வர் நம்முடைய அமைச்சர்தான். அங்கே எல்லோரும் அமர்ந்திருக்கும்போது, ‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்’’ என்று சொல்லும்பொழுது, எல்லோரும் கைதட்டினார்கள். அப்போது பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநராக இருந்த
ஆர்.என்.ரவி.
வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தல் முடிந்து, எங்கள் முதலமைச்சரும், இவரும்தான் பதவியேற்க விருக்கிறார்கள். அன்றைக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த அவர் இப்போது இங்கே ஆளுநராக இல்லையே! அதுவரையாவது அவர் இங்கே இருந்தி ருக்கவேண்டுமா?
அப்படி அவர் இங்கே ஆளுநராக இருந்தால், ‘‘நான் பதவிப் பிரமாணம் செய்து வைக்கமாட்டேன்’’ என்று வெளிநடப்புச் செய்வாரா? என்றால், அப்படிச் செய்ய முடியாது.
அமைச்சருக்கு என்னுடைய வேண்டுகோள்!
அதனால், அமைச்சருக்கு என்னுடைய வேண்டு கோள் என்னவென்றால், பதவிப் பிரமாண விழா விற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்வார். அந்தப் பதவிப் பிரமாண விழாவிற்கான அழைப்பிதழை மேற்கு வங்காளத்தில் இருக்கும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். ஆனால், அதுவரையில் அங்கே இருப்பாரா? என்று தெரியாது. அங்கே ஒரு பெண் புலி இருக்கிறது.
ஒரு சிறப்பு அழைப்பிதழை அவருக்கு அனுப்பி, உங்களுக்குத் தனி இடம் முன்வரிசையிலேயே ஏற்பாடு செய்திருக்கின்றோம். எங்கள் முதல மைச்சர், ‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்’’ என்று அவர் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, நீங்கள் அந்தக் காட்சியைப் பார்க்கவேண்டும் என்பதற்காக அவரை பதவிப் பிரமாண விழாவிற்கு அழைக்கவேண்டும்.
கோடையினுடைய கொடுமையைக் கருத்தில் கொண்டு, ரூ.2000–மும், மூன்று மாதம் மகளிர் தொகை யான ரூ.3000–த்தையும் சேர்த்து ஒவ்வொரு மகளிர் வங்கிக் கணக்கிலும் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்று அறிவித்தவுடன், இது முடியுமா? என்று கேட்டார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொன்னபடியே செய்தார். பிறகு உடனே என்ன சொன்னார்கள், ‘‘இது எங்கள் திட்டம்தான்’’ என்று சொன்னார்கள். சரி, உங்கள் திட்டம்தானே, அதை நீங்கள் வரவேற்கவேண்டும் அல்லவா! ஏன் அதைத் தடுக்கிறீர்கள்? ஏன் அதைக் கொடுக்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள்? அப்படியென்றால், அது உங்கள் அற்ப புத்தியைத்தானே காட்டுகிறது.
ஆகவேதான், இதுபோன்று எல்லா திட்டங்களிலும் நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு வெற்றி பெறக்கூடிய நிலையில்தான், இன்றைக்கு, வெளிநாட்டில் இருக்கிற தமிழர்கள் சொல்லுகிறார்கள், ‘‘இப்படி ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கிறார்கள்’’ என்று.
நான், கருநாடகத்துக்குச் சென்ற வாரம் அங்கே நடைபெற்ற சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்தேன். மாநாட்டிற்கு வந்த முக்கியஸ்தர்கள் எல்லாம், என்னுடைய கையைப் பிடித்துச் சொன்னார்கள், ‘‘உங்கள் முதலமைச்சர் மாதிரி, அவருடைய ஆட்சி போன்று, எல்லா மாநிலங்களிலும் இருந்தால், ‘‘எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்’’ என்று சொன்னார்கள்.
கூட்டணியில் இருப்பவர்களும் சொல்கிறார்கள் – எதிர்த்து நின்றவர்களும் சொல்கிறார்கள்!
‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, யாருக்கும் ஒரு வித்தியாசம் பார்ப்பதில்லை. ஏன், எதிர்க்கட்சியா, ஆளுங்கட்சியா? என்று கூட பார்க்காமல், இவர்கள் எல்லாம் பேசினார்கள். நான் அதைக் கேட்டுக்கொண்டி ருந்தேன். அங்கே சொன்னார்கள், இவர்கள் முதல மைச்சருக்கு நன்றி சொன்னது முக்கியமல்ல; இவர்கள் ஆளுங்கட்சியில், தி.மு.க. கூட்டணியில் இருப்பவர்கள். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் சொன்னார்கள்; இன்னும் கேட்டால், எதிர்த்து நின்றவர்கள் சொன்னார்கள், ‘‘நீங்கள் எங்களிடத்தில் கூட வேறுபாடு காட்டியதில்லை என்று. அதுதான் ஜனநாயகம்.
மனிதநேயருடைய சிறப்பு என்னவென்று சொன்னால், பதவி ஏற்கும் போது சொன்னார்; நேற்று வரையில் தேர்தலில் போட்டியிட்டோம். சரி, நான் வெற்றி பெற்றேன், மற்றவர்கள் தோற்றார்கள் என்பதுதல்ல. இனிமேல், நான் எல்லோருக்கும் முதலமைச்சர்; எல்லோருக்கும் பணி செய்யக்கூடியவர். நான், இன்னாருக்குத்தான் பணி செய்பவன் என்று கிடையாது என்று சொன்னார் அல்லவா, அதுதான் மனித நேயம்.
‘திராவிட மாடல்’ ஆட்சி, மீண்டும் வரும்!
மனித நேயம் என்றால், என்ன? ‘‘எல்லாருக்கும் எல்லாம்’’ – அதைத்தான் செய்ய வேண்டும். ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சிறப்பான ‘திராவிட மாடல்’ ஆட்சி, மீண்டும் வரும்! மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வருவார்!! அதுதான் மிக முக்கியம்.
ரொம்ப மகிழ்ச்சி என்னவென்றால், செல்வப் பெருந்தகை அவர்களை இன்றைக்கு பார்க்கிறோம், அந்தச் செய்திக்குப் பிறகு. நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்.
கொஞ்ச பேருக்கு என்ன ஆசை என்றால், இந்தக் கூட்டணி உடையதா? இவர் வரமாட்டாரா? அவர் வரமாட்டாரா? என்று.
‘‘தி.மு.க. கூட்டணி நிலைக்காது’’ என்று ஆரூடம் கணித்தனர்!
ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கதை. மூன்று ஆண்டுகளாக இதைச் செய்து கொண்டு வந்தார்கள். ஊடகங்களும், ‘‘தி.மு.க. கூட்டணி நிலைக்காது’’ என்று ஆரூடம் கணித்தன.
பழமொழி ஒன்று உண்டு, ‘‘கடல்வற்றி கருவாடு தின்ன ஆசைப்பட்ட கொக்கு, குடல் வற்றி செத்துப் போனது’’ என்பதுதான் அது.
முதலமைச்சரின் தன்னலமற்ற உழைப்பு!
என்றைக்கு கடல் வற்றுவது; மீன், கருவாடு ஆவது? கொத்தி சாப்பிடலாம் என்று என்று கொக்கு ஆசைப்பட்டதுபோன்று, தி.மு.க. கூட்டணி உடையும் என்று நினைத்தவர்களுக்கு, இன்றைக்கு வேலையே கிடையாது; தமிழ் மக்கள் புரிந்து கொண்டார்கள். இந்தக் கூட்டணியை அசைக்க முடியாது. இந்தக் கூட்டணியினுடைய பலம் மேலும், மேலும், மேலும் பெருகிக் கொண்டிருக்கிறது. காரணம் தன்னலமற்ற உழைப்பு. காரணம் பொது உணர்வுகள் என்று சொல்லக்கூடிய, அந்த உணர்வுகளால்தான் தான் மிகப்பெரிய அளவிற்கு வந்திருக்கிறது.
இன்னும் சில பேர், எவ்வளவோ நிதி நெருக்கடியைக் கொடுத்தார்கள். ஆளுநரை வைத்து ஆட்டம் போட்டனர். ஆளுநர் தான் ஓடிப் போனாரே தவிர, முதலமைச்சர் இங்கேதான் இருக்கிறார்; நாளைக்கும் இங்கேதான் வரப்போகிறார்.
அவர்களுடைய தந்திரங்கள் பலிக்கவில்லை என்றதும், கடைசியில் என்ன செய்தார்கள் என்றால், புலி வேஷம் போட்டு, சில பேரை விட்டுப் பார்க்கலாமா? என்று நினைத்தார்கள். புலியையே சந்தித்தவர்களிடம், புலி வேஷம் காட்டினால் என்னாகும்? புலிவேஷம் போட்டு ஆடும்போது, சிலர் கொஞ்ச நேரம் ரசிப்பார்கள்; சின்ன பிள்ளைகள் எல்லாம் கைதட்டி ரசிப்பார்கள்.
ஆனால், புலிவேஷம் போட்டவரே அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாது. எவ்வளவு சீக்கிரம் வேஷத்தை கலைத்துவிட்டுப் போகலாம் என்று நினைப்பார். அதுபோல உங்களுக்குத் தெரியும் அந்த மின்மினிப் பூச்சிகள் இந்த மின்சாரத்தோடு போட்டிப் போட முடியுமா? வான வேடிக்கையை எல்லாம் விட்டு பார்க்கலாமா என்று நினைக்கிறார்கள். அது நடக்காது, மீண்டும் திராவிடல் மாடல் ஆட்சிதான்! மீண்டும் எங்கள் முதலமைச்சர்தான். அந்தத் தேதி உறுதி! எங்கள் தாய்மார்கள் அதிலே தெளிவாக இருக்கிறார்கள். எங்கள் தொழிலாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். எங்கள் இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள். எங்கள் மாணவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். எங்களுடைய சிறுபான்மைச் சமுதாய மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்று சொல்லி அணைத்துப் போகக்கூடிய ஆட்சி வரும், வரும், நிச்சயமாக வரும்! அந்தச் சூளுரையை உரைப்போம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
