வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழக வளாகத்தில்
உற்சாகத்துடன் தொடங்கியது… ‘பெரியார் பிஞ்சுகள்’ பழகு முகாம்!

தஞ்சை, ஏப்.28 பெரியார் பிஞ்சுகளுக்கான ‘பழகு முகாம்’ தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர் நிலை பல்கலைக்கழகம்) வளாகத்தில் நேற்று (27.4.2026) பகல் 12.30 மணியளவில் தொடங்கியது.
‘பெரியார் பிஞ்சு’ மாத இதழ் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இரண்டும் இணைந்து, குழந்தைகளுக்கான பழகு முகாம், 27.04.2026 முதல் 1.5.2026 வரை ஏற்பாடு செய்துள்ளது. இதன் தொடக்க விழா, தஞ்சை வல்லத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கட்டடவியல் துறையின் கன்பியூசியஸ் மன்றத்தில் சிறப்பாகத் தொடங்கி, நடைபெற்றது. இதில் மொத்தம் 90 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆண்கள் 57, பெண்கள் 33 ஆவர். மாணவர்களுக்கு அடையாள அட்டைக்கான ஒளிப்படம் எடுக்கப்பட்டது. 9 குழுக்கள் தெரிந்தெடுக்கப்பட்டு, அதில் தலா 10 மாணவர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவுக்கும் கல்வியியல் துறை மாணவர் ஒருவர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கல்வியில் துறையின் இரண்டாம் ஆண்டு மாணவர் அகிலா, அனைவரையும் வரவேற்றார். திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை ஏற்று உரையாற்றினார். அவர் தனது உரையில், ‘‘இந்தப் பழகு முகாம் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? பெற்றோர்கள் உங்களை எதற்காக இங்கே அனுப்பியுள்ளனர்?’’ என்று கேள்வி கேட்டு, ‘‘உங்கள் சிந்தனைகளை கூர்தீட்ட; பக்குவப்படுத்த; எதையும் கூர்மையாக கவனித்து அதன்படி செயலாற்ற’’ என்றெல்லாம் பதில் அளித்து, தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
அதைத்தொடர்ந்து, திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பழகு முகாமில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்; வழிமுறைகளைப் பற்றி விளக்கி, ‘‘மாணவர்கள் அதை கடைப்பிடிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, முன்னிலை ஏற்று வாழ்த்துரை வழங்கினார், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை
இரா.ஜெயக்குமார். தொடர்ந்து, அரசியல் அறிவியல் துறை மாணவி நசீமா நன்றி கூறி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார். கல்வியில் துறையின் நான்காம் ஆண்டு மாணவர் வேல்முருகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தமிழ்வாணன், சத்யா, இளங்கோவன், சந்திரகுமார் பீட்டர், ஆர்த்தி, இளங்கோ மற்றும் கல்வியியல் துறை மாணவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
