பன்னாட்டுச் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வருபவர்கள் சூரிய உதயத்தைப் பார்த்து ரசிப்பார்களோ இல்லையோ, இனி இந்தப் பெயர்ப்பலகையைப் பார்த்தால் நிச்சயம் மயங்கி விழுந்துவிடுவார்கள். கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்திற்கு வைக்கப்பட்டுள்ள ஹிந்திப் பெயர்தான் இப்போது சமூக வலைதளங்களில் ‘சிரிப்பதா? அழுவதா?’ என்ற ரகத்தில் பரவலாகி வருகிறது.
பொதுவாக ஹிந்தியில் கழிப்பறையை கிழக்கு இந்தியாவில் சவுச்சாலயம் என்றும் மத்திய இந்தியாவில் சோச்சாலை என்றும் வடக்கு மாநிலமான ஹிமாச்சல், உத்தராகண்ட், உபியில் வடக்கு பகுதியில் ‘பிரயாக்’ என்றும் ராஜஸ்தான் குஜராத் மகாராட்டிராவில் பைகானா என்றும் என்று நாகரிகமாக அழைப்பார்கள். ஆனால், நவீனத் தொழில்நுட்பமான ‘ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ (AI) டிரான்ஸ்லேட் புண்ணியத்தில், ‘பொதுக் கழிப்பிடம்’ என்பது ஹிந்தியில் ‘சார்வஜனிக் டட்டியா’ (Sarvajanik Tattiya) என்று உருமாறியுள்ளது.
இந்த ‘டட்டியா’ என்ற சொல்லுக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் தெரிந்தால் எவருமே அந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டார்கள். ஏனெனில், ஹிந்தியில் ‘டட்டி’ (Tatti) என்பது மலத்தைக் குறிக்கும் மிகவும் கொச்சையான சொல். எளிமையாகச் சொன்னால், ‘பொதுக் கழிப்பிடம்’ என்பதற்குப் பதிலாக ‘பொது மலம்’ என்று போர்டு வைத்துப் பெருமை சேர்த்திருக்கிறது நிர்வாகம்!
கேரளா முதல் காஷ்மீர் வரை சுற்றுலாப் பயணிகள் குவியும் ஒரு இடத்தில், ஒரு வார்த்தையை மொழிபெயர்க்கும்போது குறைந்தபட்சம் ஒரு ஹிந்தித் தெரிந்த நபரிடமாவது கேட்டிருக்கலாம். அல்லது ஒரு ஹிந்தி அகராதியைப் புரட்டியிருக்கலாம். அதை விடுத்து, அதீத நம்பிக்கையில், ஏஅய் கொடுத்ததைக் அப்படியே அச்சுப் பிசகாமல் போர்டாக அடித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.
‘மொழிபெயர்ப்பு’ என்பது உணர்வுகளைக் கடத்துவது, ஆனால் இங்கே அது ‘உபாதையை’ தவறாகக் கடத்திவிட்டது. பெயர்ப்பலகை வைக்கும் காண்டிராக்டருக்கு ஹிந்தி தெரியாது சரி, அதைச் சரிபார்க்க வேண்டியவர்களுக்காவது ‘சவுச்சாலய்’ என்ற வார்த்தை காதில் விழுந்திருக்க வேண்டாமா?
தற்போது இந்த ‘கொடூர’ மொழிபெயர்ப்பு, வட இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரிய நகைச்சுவை விருந்தாக அமைந்துள்ளது. குமரிக்கு வரும் ஹிந்திக் காரர்கள் இயற்கை உபாதைக்காகத் தேடி வந்து, இந்தப் பெயரைக் கண்டு மிரண்டு ஓடுவதைத் தவிர்க்க முடியாது!
