தமிழ்நாடு, பெரியாரின் சமூக நீதி மண் – இதை மற்றொரு பீகாராக்க முடியாது!

5 Min Read
* தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சி தொடர்வது – அனைத்து முற்போக்குச் சக்திகளுக்கும் 
பெருத்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகின்ற செய்தி!
* ‘உருவத்தால் பலரே, உள்ளத்தால் ஒருவரே’ என்ற நல்ல ஒருங்கிணைப்பு – தேர்தல் வெற்றிக்கு நல்ல அச்சாரப் பணி!
2026 இல் தி.மு.க. கூட்டணி வெற்றிக் கனி பறிப்பது உறுதி!

தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சி தொடர்வது அனைத்து முற்போக்குச் சக்திகளுக்கும் பெருத்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகின்ற செய்தியாகும். ‘உருவத்தால் பலரே, உள்ளத்தால் ஒருவரே’ என்ற நல்ல ஒருங்கிணைப்பு – தேர்தல் வெற்றிக்கு நல்ல அச்சாரப் பணியாகும். திட்டமிட்டபடி 2026 இல் தி.மு.க. கூட்டணி வெற்றிக் கனி பறிப்பது உறுதி! தமிழ்நாடு, பெரியாரின் சமூக நீதி மண் – இதை மற்றொரு பீகாராக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தந்தை பெரியார் கொள்கைவயப்பட்டு, அவர்க ளுக்குக் காணிக்கையாக்கப்பட்ட திராவிடர் ஆட்சி – பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரால் சாதனை சரித்திரம் படைத்ததையொட்டி,  முதலமைச்சராகப் பொறுப்பேற்ற –  சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், ‘திராவிட மாடல்’ ஆட்சி என்ற ஒப்பற்ற ஆட்சியை கடந்த அய்ந்து ஆண்டுகளாகச் சிறப்பாக நடத்தி, உலகத்தாரின் நன்மதிப்பையும், சிறப்பையும் பெற்று வருகிறார்!

தி.மு.க. தலைமையிலான
கொள்கைக் கூட்டணி, புதிய பெருஉரு!

தன் சக்திக்கு மீறி உழைப்பதையே அன்றாட வாழ்வாகக் கொண்ட நமது முதலமைச்சர் – நெருப்பாற்றில் நீந்தி, ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி தந்த பல செயற்கை நெருக்கடிகளைத் தனது அரசியல் மதியூகத்தாலும், பதற்றமற்ற அணுகுமுறைகளாலும் வென்று காட்டுகிறார்; அச்சுறுத்தலுக்கும், அவதூறு களுக்கும் ஆட்படாது – அவற்றை அலட்சியப்படுத்தி, ‘தானும் தலைகுனியமாட்டேன், தமிழ்நாட்டு மக்களையும் தலைகுனிய விட மாட்டேன்’ என்று சூளுரைத்து, சுயமரியாதை முழக்கமிடும் முதலமைச்சர் அவர்கள், கடந்த பல ஆண்டுகளாக, கொள்கைக் கூட்டணியாகவே தொடரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை கட்டிக் காத்து, அன்பால் அரவணைத்து, அக் கூட்டணியில் மேலும் பலப்பல அரசியல் கட்சிகளும் இணையும் ஒரு பெருமைக்குரிய கூட்டணியாகவே நடத்தி வருகிறார். மீண்டும் தி.மு.க. தலைமையிலான கொள்கைக் கூட்டணி, புதிய பேருருவம் (விஸ்வரூபம் என்பார்களே) எடுத்து, வரும் 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் களம் காண, திட்டமிட்ட பல வியூகங்களுடன் களம் காண ஆயத்தமாகியுள்ளது!

எப்படியாவது தி.மு.க. கூட்டணியை உடைத்து, அதில் இடம்பெற்றவர்களை, அடித்தளமற்ற  வேறு கட்சிகளுடன் பிணைத்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியைப் பலவீனப்படுத்திட, கடந்த சில ஆண்டுகளாகவே ஊடகங்கள், தொலைக்காட்சிகள், திட்டமிட்டு அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவதைத் தொடர் முயற்சியாகவே வைத்துள்ளன!

அரசியல் எதிரிகளுக்கும்,
ஆரியம் உள்பட லட்சிய எதிரிகளுக்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது!

தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை உடைக்க முடியவில்லை என்றாலும், காங்கிரசைப் பிரிக்க சிலர் ‘‘தூண்டில்களைத் தூக்கிக் கொண்டு’’ அலைந்து திரிந்த முயற்சி, கருச்சிதைவுற்று, ‘அப்படியே நடந்துவிடாதா?’ என்ற ஆசையுடன், ஆவலுடன் எதிர்பார்த்த அரசியல் எதிரிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. –  ஆரியம் உள்பட நம் லட்சிய எதிரிகளுக்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது!

அனைத்து முற்போக்குச் சக்திகளுக்கும் பெருத்த மகிழ்ச்சியையும்,
மன நிறைவையும் தருகின்ற செய்தி!

தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சி முன்பு போலவே தொடருகிறது என்பது ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி, சமதர்மம் என்ற லட்சியப் பயணத்துடன் பயணிக்கும் அனைத்து முற்போக்குச் சக்திகளுக்கும் பெருத்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகின்ற செய்தியாகும்!

எந்த அடிப்படையும் இல்லாமல், வெறும் வாண வேடிக்கை, ஒப்பனை, ரசிகர் மன்றத்தின் தலைமை – ஜனநாயக  இலக்கணமோ, இலட்சயத்தையோபற்றி ABC கூட அறியாத ஓர் அரசியல் அமெச்சூர் – நடிகரிடம், பாரம்பரியமிக்க ஒரு மூத்த கட்சி, அதுவும் 22 ஆண்டுகால நட்பை முறித்துச் சென்றால், அது வெறும் ‘கானல் நீர் வேட்டையாக’த்தான், சோக முடிவாகவே ஆகியிருக்கக் கூடும்.

நல்வாய்ப்பாக தப்பித்தார்கள்! அதோடு, அகில இந்திய அளவில், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினை எதிர்க்கும் ‘இந்தியா கூட்டணி’யின் ஆற்றல், ஆளுமை வளருவதற்குப் பதிலாக, தேய இடந்தரும் அரசியல் பிழைக்கு அது காரணமாகவும் ஆகியிருக்கும்.  இப்பொழுது எல்லாம் காப்பாற்றப்பட்டு விட்டது!

தி.மு.க. தலைமையின் நீக்குப் போக்கு, அரவணைப்பு அணுகுமுறை, மிகவும் பக்குவமும், பொறுப்புணர்ச்சியும் உடையதாக அமைந்து, பதற்றமின்றி நம்பிக்கை தருவதாக அமைந்ததைப் பாராட்டி வரவேற்கின்றோம்!

2026 இல் வெற்றிக் கனி பறித்து
வரலாறு படைப்பார் என்பது உறுதி!

அதுபோலவே, தொகுதிகள் பங்கீட்டிலும் எல்லா தரப்புக்கும் ஒரு மன நிறைவை ‘Win – Win Situation’ என்பதை நமது தி.மு.க. கூட்டணித் தலைவர் நிச்சயம் உருவாக்கி, திட்டமிட்டபடி 2026 இல் வெற்றிக் கனி பறித்து, வரலாறு படைப்பார் என்பது உறுதி!

இதற்காகத் தொடர்ந்து முயற்சிகளில் நம்பிக்கை யுடனும், நல்லெண்ணத்தோடும் ஈடுபட்டு, சிறப்பாக முடிவுகள் அமைந்ததன் காரணமாக, அனைத்துத் தரப்பினருக்கும் குறிப்பாக, தி.மு.க. தலைவருக்கும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கும் நமது மகிழ்ச்சி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற கூட்டணி ஒன்றிணைந்து மதவாதத்தை எதிர்க்கும் பணி தொடரும் என்று இந்த நேரத்திலும், இலட்சிய உணர்வோடு அழுத்தமாகக் கூறியிருக்கும் நமது முதலமைச்சர் வெளிப்படுத்தியுள்ள கருத்து – இந்தியாவுக்கே வழி காட்டும் அவரது கொள்கை உணர்வின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தக் கூடியதாகும்.

மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் காத்து, பண்பாட்டுத் திணிப்புக்கு எதிர்ப்புக் காட்டவேண்டிய கட்டத்தில், சிறு கீறல் கூட இன்றி, ‘உருவத்தால் பலரே, உள்ளத்தால் ஒருவரே’ என்ற நல்ல ஒருங்கிணைப்பு ஏற்பட்டிருப்பது, தேர்தல் வெற்றிக்கு நல்ல அச்சாரப் பணியல்லவா!

எத்தனையோ முறை தமிழ்நாட்டிற்குப் பிரதமர் மோடியும், அமித்ஷாக்களும், வந்து போவது, வடக்கே இருந்து இறக்குமதி செய்யப்படும் தம்பிரான்களும் வந்தாலும், “தமிழ்நாடு, பெரியாரின் சமூக நீதி மண் – இதை மற்றொரு பீகாராக்க முடியாது” என்ற சுவ ரெழுத்தை இந்தக் கூட்டணியின் வலுவான பெருக்கம் காட்டுகிறது; இதை எதிர்க்க நிர்ப்பந்தக் கூட்டணி அமைத்தவர்கள், அரசியல் களத்தின் கத்துக்குட்டிகளின் வெற்று ஓசைகளும் எடுபடாது என்பதற்கு, இது முதல் எச்சரிக்கை மணியோசை போன்றதாகும்.

‘‘திராவிடம் நிச்சயம் வெல்லும் – வரலாறு அதனை எத் திக்கும் சொல்லும்!’’

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை   

5.3.2026     

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *