சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
- செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
- சமூகநீதி காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காகத்தான்…
- தி.மு.க. கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் கட்சி வெளியேறவேண்டும் என்று நினைக்கிறார்கள்!
- யார் வெற்றி பெறவேண்டும்? என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்!
- கொள்கைக்கு ஏற்படுகின்ற நட்டமாகும்!
- பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். எண்ணம் ஈடேற இடம் கொடுக்கக் கூடாது, காங்கிரஸ்!
- இப்போது நான்காவது, அய்ந்தாவது முனைகளைப் பயன்படுத்துகிறார்கள்!
சென்னை, மார்ச் 4 – யார் வெற்றி பெறவேண்டும்? என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்! தி.மு.க. கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் கட்சி வெளியேறவேண்டும் என்று பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. அவர்களுடைய எண்ணம் ஈடேற இடம் கொடுக்கக் கூடாது, காங்கிரஸ் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்
தமிழர் தலைவர் ஆசிரியர்
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். ஆகிய பதவி நியமனங்களில் பார்ப்பன உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தைக் கண்டித்து நேற்று (3.3.2026) காலை சென்னை சாஸ்திரிபவன் அலுவலகத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
சமூகநீதி காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காகத்தான்…
ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்குள்ள சட்டப்படிக்கான உரிமையை மறுக்கின்ற காரணத்தினால், அவற்றை புள்ளி விவரத்தோடு, ஆதாரத்தோடு எடுத்துக்காட்டி, உடனடியாக இவை சரி செய்யப்பட வேண்டும், சமூகநீதி காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம் இன்றைக்கு இங்கே நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில், கன்னியாகுமரி தொடங்கி, திருத்தணி வரையில் இந்தப் போராட்டம் திராவிடர் கழகத்தின் சார்பாக எல்லா மாவட்டங்களிலும் நடைபெறுகிறது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு தொடக்கமே தவிர, முடிவல்ல.
தி.மு.க. கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் கட்சி வெளியேறவேண்டும் என்று நினைக்கிறார்கள்!
செய்தியாளர்: தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறதே?
தமிழர் தலைவர்: அதைப்பற்றி இரண்டு கட்சித் தலைவர்களும் நல்ல வண்ணம் யோசித்து, அநேகமாக இன்று அவர்கள் முடிவை அறிவிப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
பொதுவாக காங்கிரஸ் கட்சியினுடைய நிலைப் பாட்டைப்பற்றி நினைக்கின்ற நேரத்தில், இதுவரை அவர்கள் தெளிவாக இருந்து வருகின்றனர். அதே நேரத்தில், குழப்பம் ஏற்பட வேண்டிய அவசியமே கூடாது என்பதுதான், எங்களைப் போன்றவர்களுடைய கருத்தாகும்.
காரணம் என்னவென்றால், முழுக்க முழுக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். எதை விரும்புகிறது என்றால், தி.மு.க. கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், அதற்கு இடந்தரக்கூடாது என்று, முதலமைச்சர் அவர்கள், முழு முயற்சி எடுத்து, இருக்கின்ற எதார்த்த சூழ்நிலையில், என்ன செய்யவேண்டுமோ, அதைத் தெளிவாக செய்திருக்கிறார். மற்றவர்களை அரவணைத்துத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
கூட்டணியில் இருப்பவர்கள், கொள்கைக்காகத் தான் இருக்கின்றோம். பதவிக்காக அல்ல, இடங் களுக்காக அல்ல என்று தெளிவாகச் சொல்லுகின்ற நேரத்தில், அதை நன்றாக, காங்கிரஸ் நண்பர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
யார் வெற்றி பெறவேண்டும்? என்பதைவிட,
யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்!
யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்!
ஏற்கெனவே தி.மு.க. கூட்டணியிலிருந்து அதிகமான இடங்களைப் பெற்றவர்கள்கூட, தங்களுடைய இடங்களைக் குறைத்துக் கொண்டி ருக்கின்றார்கள். ஏனென்றால், அக்கூட்டணியில் பல கட்சிகள் புதிதாக வந்திருக்கின்றன.
யார் வெற்றி பெறவேண்டும்? என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.
கொள்கைக்கு ஏற்படுகின்ற நட்டமாகும்!
பா.ஜ.க.வினுடைய பாசிச அரசியல், மதவாத அரசியல் தமிழ்நாட்டில் காலூன்ற இடம் கொடுக்கக்கூடாது என்பதற்காகத்தான் இத்தனை முயற்சிகளையும் அரும்பாடுபட்டு செய்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ், இதனைத் தெளிவாக உணரவேண்டும். அப்படி இல்லையென்றால், அதனுடைய நட்டம், கொள்கைக்கு ஏற்படுகின்ற நட்டம்.
இந்தியா கூட்டணி போன்ற ஒரு பலமான கூட் டணியை உடைப்பதற்கு பா.ஜ.க. மகிழ்ச்சி அடையும். காங்கிரஸ் அதற்குப் பலிகடாவாகத் தன்னை ஆக்கிக் கொள்ளக்கூடாது என்பது எங்களைப் போன்றவர்களுடைய கருத்தாகும்.
நல்லெண்ணத்தோடு சொல்லுகிறோம், இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதைப் பிடிக்கலாம் என்பது சாதுரியம் அல்ல.
பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். எண்ணம் ஈடேற இடம் கொடுக்கக் கூடாது, காங்கிரஸ்!
ஆகவேதான், இருப்பது தெளிவாக இருக்கிறது; இருப்பது கொள்கையாக இருக்கிறது. பறப்பது பலவகையாக இருக்கலாம், கனவாக இருக்கலாம். ஆகவே, நிச்சயம் பக்குவம் உள்ள தலைவர்கள் அவர்கள்; இன்னமும் காலம் இருக்கிறது. சிந்தித்து, எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல், ஆர்.எஸ்.எஸ்.சுக்கோ, பா.ஜ.க.விற்கோ, அல்லது மோடி அரசுக்கோ வாய்ப்பாக, அவர்களுடைய எண்ணங்கள் நிறைவேறாமல் செய்யவேண்டும் என்பதைத்தான் உங்கள் மூலமாக, காங்கிரஸ் நண்பர்களுக்குத் திராவிடர் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.
இப்போது நான்காவது, அய்ந்தாவது
முனைகளைப் பயன்படுத்துகிறார்கள்!
முனைகளைப் பயன்படுத்துகிறார்கள்!
செய்தியாளர்: திருப்பரங்குன்றப் பிரச்சினையை தேர்தலுக்குப் பயன்படுத்தலாம் என்று பா.ஜ.க. நினைக்கிறதா?
தமிழர் தலைவர்: பா.ஜ.க.வினர் திருப்பரங் குன்றத்தை முழுக்க முழுக்க, அந்தக் களத்தை எங்கே கொண்டு போயிருக்கிறார்கள் என்றால், நீதிமன்றம் வரையில் கொண்டு போயிருக்கிறார்கள்.
இதுவரையில், திரிசூலத்தை – சி.பி.அய்., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை என்கின்ற மூன்று முனைகளாகப் பயன்படுத்தினார்கள். இப்போது நான்காவது முனை, அய்ந்தாவது முனை என்று தேர்தல் ஆணையம் உள்பட கொண்டு போகிறார்கள். அதற்கு மக்கள் தெளிவாகத் தீர்ப்பளிப்பார்கள், தேர்தலின் மூலமாக!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
