சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் மொழித் துறை நடத்திய கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தலில் – தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இயற்கையின் கோணல் புத்தி, பறிக்கக் கூடாதவர்களைப் பறித்திருக்கிறது; இழக்கக் கூடாதவர்களை,
நாம் இழந்திருக்கிறோம்! நாம் மனமுடைந்து விடக்கூடாது; நாம் செயலற்றுப் போய்விடக்கூடாது!
எந்த இலக்கை வைத்து உழைத்தார்களோ, அந்த இலக்கை நாம் அடைவதற்கு, மற்றவர்களையும் இணைத்துப் பணி செய்வதுதான், நாம் அவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய மரியாதை!

சென்னை, பிப். 18 இயற்கையின் கோணல் புத்தி, பறிக்கக் கூடாதவர்களைப் பறித்திருக்கிறது; இழக்கக் கூடாதவர்களை, நாம் இழந்திருக்கிறோம். ஆனால், அதற்காக நாம் மனமுடைந்து விடக்கூடாது; நாம் செயலற்றுப் போய்விடக்கூடாது. அவர்கள் எந்தப் பணியை, எந்தத் தொண்டை, எந்த இலக்கை வைத்து உழைத்தார்களோ, அந்த இலக்கை நாம் அடைவதற்கு, மற்றவர்களையும் இணைத்துப் பணி செய்வதுதான், அவர்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய மரியாதை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

சென்னை பல்கலைக் கழகத்தில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல்

சென்னை பல்கலைக் கழக பவள விழா கலை யரங்கில், கடந்த 3.2.2026 அன்று காலை, தமிழ் மொழித் துறை சார்பில் நடைபெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல் நிகழ்வில், அவரது படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது சிறப்புரை வருமாறு:

நெஞ்சில் இருக்கிறார், நிறைந்திருக்கிறார்,
நம் இரத்த நாளங்களில் உறைந்திருக்கிறார்!

சென்னை பல்கலைக்கழகத்தினுடைய தமிழ் மொழித் துறை சார்பாக, நம்முடைய ஒப்பற்ற ஒப்புவமையற்ற கவிஞரான மகாகவி என்று எல்லோராலும், உலகம் முழுவதும் பாராட்டப்படக்கூடிய ஓர் அற்புதமான கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்ற அந்த தமிழைச்  சுழற்றிச் சுழற்றி வாழ்ந்து மிகப்பெரிய அளவிற்கு மற்றவர்களுக்குப் பாடத்தை இறுதி நாள் வரை கற்றுக் கொடுத்து, நம்மிடம் மறைந்தும் மறையாமல், நம் நெஞ்சங்களிலே நிறைந்தவராக இருக்கக்கூடிய புரட்சிக்கவிஞருடைய வார்ப்படமாக, புலவர் இராம நாதனுடைய எதிரொலியாக, எல்லாவற்றுக்கும் மேலாக சுயமரியாதைக் கவிஞராக வாழ்ந்து, வழிகாட்டிக் கொண்டிருக்கக்கூடியவருடைய நினைவேந்தல் – படத்திறப்பு, அவர்கள்  பெயரால் அய்வர் அறக்கட்டளை ஆகிய சிறப்பான இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஏற்பாடு செய்து, ஒரு நல்ல அறிவார்ந்த அரங்கத்திலே நடைபெறுகின்றது. இவை எல்லாம் நம்முடைய துன்பங்களைத் துயரங்களை எல்லாம் நீக்கக் கூடிய வையாகும். இந்த உலகம்  – ‘‘அவர் இல்லை என்று நினைக்க வேண்டியதில்லை; அவர் இருக்கிறார், நெஞ்சில் இருக்கிறார், நிறைந்திருக்கிறார், நம் இரத்த நாளங்களில் உறைந்திருக்கிறார்’’ என்று சொல்லக்கூடிய அளவிலே வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அத்தகைய கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுடைய  நினைவேந்தல் நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய அருமைத் தோழர் முனைவர் வாணி அறிவாளன் அவர்களே,

தமிழ்த்துறைப் பேராசிரியர்  மணிகண்டன்

நம்முடைய கவிஞர் ஈரோடு தமிழன்பனால் முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டவர் என்பது மட்டுமல்ல, அந்த நன்றி உணர்ச்சியை என்றும், எப்போதும், எங்கும் குறைவில்லாமல் காட்டக்கூடியவராக இருக்கக்கூடிய, இந்நிகழ்விற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய ஆற்றல் மிக்க தமிழ்த்துறைப் பேராசிரியர்  மணிகண்டன்  அவர்களே,

இந்த நிகழ்ச்சியிலே சிறப்பாக நினைவேந்தல் உரையினை நிகழ்த்தி உள்ள நீதிபதி அய்யா, நீதிபதி என்று சொன்னால் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள். உள்ளபடியே  நீதிபதியாக இருக்கக்கூடிய நீதியரசராக இருக்கக்கூடிய, மனதில் பட்டதைக் கொஞ்சம் கூட ஒளிவில்லாமல், விளைவைப்பற்றி கவலைப்படாமல், வினையாற்றும் ஆற்றல் வாய்ந்த உண்மையை மட்டுமே பேசக்கூடிய அருமை அய்யா அரி பரந்தாமன் அவர்களே,

அதேபோல பேராசிரியர் இராம.குருநாதன் அவர்கள், மூத்த பேராசிரியர்; பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரி யர் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பெருமை படைத்தவர்.

நம்முடைய ஈரோடு தமிழன் அவர்களுக்குப் பெறாத பிள்ளையாக, வளர்ப்பு மகளாக, அண்ணாமலை – சரசு ஆகியோருக்குப் பிறந்தவராக, அவ்விருவரும் அவரது  பெற்றோராக இருந்தாலும், உற்றோர் யார் என்றால், அது ஈரோடு தமிழன்பன்தான் என்று மிகப்பெரிய அளவிற்கு இருக்கக்கூடிய பெருமை படைத்து, அந்த உணர்வை இன்றைக்குக் கொட்டிக் கொண்டிருக்கக்கூடிய எங்கள்  கழகத்தினுடைய பிரச்சாரச் செயலாளரும், உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான அருமைத் தோழர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களே,

ஈரோடு தமிழன்பனும், கவிஞர்களும் பிரிக்கப்பட முடியாதவர்கள் –
மறக்கப்பட முடியாதவர்கள்!

அதேபோல, எல்லோரும் பாப்லோ  நெருடா அவர்களைப் பார்க்க பல ஆண்டுகளுக்கு முன் போகவேண்டும்; ஆனால், இந்தப் பாப்லோ நெருடா அவர்கள், மிகப்பெரிய அளவுக்குப் பெரு மையைப் பெற்றிருக்கிறார். பாரதிதாசனும்  ஈரோடு தமிழன்பன் வீட்டுக்குள்ளே இருக்கிறார்; பாப்லோ  நெருடாவும் அவர் வீட்டுக்குள்ளே இருக்கிறார்; எனவே, ஈரோடு தமிழன்பனும், இந்தக் கவிஞர்களும் பிரிக்கப்பட முடியாதவர்கள், மறக்கப்பட முடியாதவர்கள். அவருடைய பயணத்தில் என்றைக்கும் நிற்கக் கூடியவர்கள் என்று சொல்லக்கூடிய பெருமையைப் படைத்திருக்கக்கூடிய அன்பிற்குரிய சகோதரர் பாப்லோ  நெருடா  அவர்களே,

விழிகள் என்ற பெயரில், அந்த விழிகள் அதிகமான அளவிற்குக் கண்ணீரைச் சிந்தி இருக்கின்றன என்றால், அது நம்முடைய ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு. அதற்குக் காரணம் இணைபிரியாத நட்பு. அப்படிப்பட்ட அய்யா திரு.வேணுகோபால் அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் எனக்கு அடுத்து, கவிதை மூலமாக நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளக்கூடிய கவிஞர் திரு.அமிர்த கணேசன் அவர்களே, கவிஞர் கவிமுகில் அவர்களே, கவிஞர் விழிகள் திரு.நடராஜன் அவர்களே, கவிஞர் தமிழமுதன் அவர்களே, நன்றி உரை கூற இருக்கக்கூடிய முனைவர் கே.நிர்மலா செல்வி அவர்களே,

நமக்கெல்லாம் அவருடைய இழப்பு என்பது ஈடற்ற இழப்பு என்று சொன்னாலும், எல்லாவற்றையும் விட, உள்ளபடியே மிகப்பெரிய ஓர் இழப்பை நேரடி யாகச் சந்தித்து கொண்டு, அதிலே இருந்து, மெல்ல மெல்ல, ஆனால், உறுதியாக வெளியே வந்து கொண்டி ருக்கக்கூடிய அவருடைய வாழ்விணையர் அன்பிற்குரிய அம்மா அவர்களே மற்றும் இந்தக் குடும்பத்துச் சகோதர, சகோதரிகளே, நண்பர்களே, உறவுகளே!

அய்வர் அறக்கட்டளை!

இவர்கள் எல்லோருக்கும்  ஆறுதல் சொல்லி, ‘‘நீங்கள் கவலைப்படாதீர்கள், உலக மக்கள் மத்தி யில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்றைக்கும் வாழு கிறார்’’ என்று அப்படிப்பட்ட அந்த வாழ்க்கையை நிலைநாட்டிக் காட்டுவதற்கு, அய்வர் அறக்கட்டளை என்பதன் மூலமாக, மிகச் சிறப்பாக இங்கே அவரோடு பழகியவர்களை வைத்து, ஒரு நல்ல அறக்கட்டளை ஆக்கப்பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது. வெறும் புகழுரைகளை மட்டும் பேசிவிட்டு, ஒரு நாள் நிகழ்ச்சியாக இதை நடத்தாமல், என்றைக்கும் அவருடைய நினைவை, அவருடைய தொண்டை, தொண்டறத்தினுடைய சிறப்பை எடுத்துச் சொல்வதற்காகப் பயன்பட வேண்டும் என்று சொல்லக்கூடிய வகையில், அய்யா ஈரோடு தமிழன், புலவர் அண்ணாமலை, சேலம் புலவர் வேள்நம்பி, புலவர் அய்யாத்துரை, புலவர் பெரியசாமி ஆகிய அய்வரும், தஞ்சையில் உள்ள கரந்தை தமிழ்க் கல்லூரியில் பயின்றவர்கள். அவர்கள், பெரும்புலவர் ந. இராமநாதன் அவர்களின் மாணவர்கள். தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இருவரோடும் தங்கள் கொள்கைப் பயணத்தைத் தொடர்ந்தவர்கள்.

தமிழினத்தின்
மேன்மைக்காக உழைத்த…

ஈரோடு தமிழன்பனின் அன்பிற்குரிய தோழர்கள் நால்வரையும் நினைவில் கொண்டு, ஓர் அறக்கட்டளையைத் தொடங்கப்பட்டுள்ளது. அது பெண்களுக்காகச் செயல்படும் என்பதுதான்  மிக முக்கிய மானது. ஏனென்றால் பாரதத்திலே மனுதர்மப்படி பார்க்கும்போது, பெண்கள் என்பவர்களை எங்கே வைத்திருக்கிறார் என்றால், நான்காவது ஜாதிப் பிரிவுக்குக்  கீழே அய்ந்தாவது ஜாதிப் பிரிவு, அதற்கும் கீழே ஒன்று இருக்கிறது என்றால், அத்துணை ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்,  ்அது முற்போக்குச் ஜாதிகள் என்றால் கூட, முன்னேறிய வகுப்பில் இருந்தாலும் கூட, சமபகுதியாக இருக்க வேண்டிய, சம உரிமைக்குரிய பெண்களை, அதற்குத் தகுதியற்றவர்கள் என்று ஆக்கிக் கொண்டிருக்கின்ற நேரத்திலே, யார் மிகவும் அடித்தளத்தில் இருக்கிறார்களோ, அவர்களுடைய முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தான் எங்களுடைய வாழ்வு என்று காட்டக்கூடிய வகையில், அவர்கள் தெரிவித்துச் சென்ற அந்த எண்ணத்தின்படி, தமி ழினத்தின் மேன்மைக்காக உழைத்த இப்பெருமக்க ளுடைய குடும்பத்தினர் இணைந்து அய்வர் அறக்கட்ட ளையை உருவாக்கியுள்ளோம் என்று அழகாகச் சொன்னார்கள்.

அமெரிக்கா,  சிகாகோவில் தமிழ்ப் பணியைத் தொடர்ந்து செய்யக்கூடியவர்!

அந்த அறக்கட்டளையைச் சிறப்பாக மேற்கொண்டு நடத்தக்கூடிய ஆற்றல் படைத்தவர் அமெரிக்காவிலே தமிழ்த் தொண்டு புரிந்து கொண்டிருக்கிற நம்முடைய அய்யா வேள்நம்பி அவர்களுடைய அருமைப் புதல்வர், நம்முடைய கால்டுவெல்  அவர்கள் இங்கே வந்திருக்கிறார். இது ஒரு பெரிய பெருமை நமக்கு. கால்டுவெல் அவர்கள், அமெரிக்கா,  சிகாகோவில்  தமிழ்ப் பணியைத் தொடர்ந்து செய்யக்கூடியவர்கள். ‘தான் உண்டு, தன் குடும்பம் உண்டு’ என்று அவர் கருதாமல், தமிழ்த்தொண்டு என்பதுதான் மிக முக்கியம் என்பதற்காக, ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்று சொல்வதற்கு இணங்க சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய பணி தனித்தன்மையான பணியாகும்.  புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏராளம் இருக்கிறார்கள். நல்ல வசதியாக இருப்பார்கள். ஆனால், தொடர்புகள் ஒரு குடும்ப வட்டத்துக்குள் இருக்கும்.

மனுதர்மம்தான் அதிகமாக
திராவிடம்பற்றிச் சொல்லியிருக்கிறது!

ஆனால், உலக தமிழ் குடும்பம், என்னுடைய குடும்பம் உறவுக் குடும்பம் சொல்லக்கூடிய அளவுக்கு நல்ல தொண்டறச் செம்மலாக இருந்துகொண்டு, அருமையான தமிழ்த் தொண்டை செய்து கொண்டி ருக்கக்கூடிய அய்யா கால்டுவெல் – பெயரே கால்டு வெல்தான், அவரைத்தான் எல்லாரும் இன்றைக்குச் ‘சபிக்கிறார்கள்.’ தமிழ்நாட்டில் போராட்டமே நடக்கிறது. கால்டுவெல்தான், திராவிடத்தையே சொல்லிக் கொடுத்தவர் என்று நினைக்கிறார்கள். அந்தப் பைத்தி யக்காரர்களுக்குத் தெரியாது மனுதர்மம்தான் அதிகமாக திராவிடம்பற்றிச் சொல்லியிருக்கிறது என்று.

 ‘‘இன்னும் இருக்கின்றன பக்கங்கள்;
இன்னும் இருக்க வேண்டாம் துக்கங்கள்!’’

ஆகவேதான்,  திராவிடம் என்ற சொல்லுக்கு, மனுதர்மத்திலே ஆதாரம் இருக்கிறது; பாகவதம், புராணத்திலே ஆதாரம் இருக்கிறது என்று தந்தை பெரியார் ஆதாரத்தோடு சொன்னார்.  இது ஒரு நல்ல அறிவார்ந்த அரங்கம். நல்ல முடிவுகள். அய்யா நம்முடைய ஈரோடு தமிழன்பன் அவர்களைப்பற்றிக் கூறுவதைக் கேட்கும் போதெல்லாம்  நம்முடைய துன்பங்கள் விலக வேண்டும். அம்மா அவர்களுக்கு ஓர் அருமையான வேண்டு கோள், சகோதரர்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள், இங்கே ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தி னுடைய தலைப்பு, ‘‘இன்னும் இருக்கின்றன பக்கங்கள்; இன்னும் இருக்க வேண்டாம் துக்கங்கள்’’ என்பதுதான்.  அப்படிப்பட்ட ஓர் அற்புதமான வழிகாட்டி இருக்கிறார் அவர்.

நாம் செய்கின்ற மிகப்பெரிய மரியாதை!

தந்தை பெரியார் அவர்கள், இழக்கக் கூடாதவர்களை எல்லாம் இழந்தால், அவர் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்தினார் – ‘‘இயற்கையின் கோணல் புத்தி’’ என்று சொன்னார். இயற்கையின் கோணல் புத்தி, பறிக்கக் கூடாதவர்களைப் பறித்திருக்கிறது; இழக்கக் கூடாதவர்களை, நாம் இழந்திருக்கிறோம். ஆனால், அதற்காக நாம் மனமுடைந்து விடக்கூடாது; அதற்காக நாம் செயலற்றுப் போய்விடக்கூடாது. அவர்கள் எந்தப் பணியை, எந்தத் தொண்டை, எந்த இலக்கை வைத்து உழைத்தார்களோ, அந்த இலக்கை நாம் அடைவதற்கு, மற்றவர்களையும் இணைத்து அழைத்துப் போவதுதான், அவர்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய மரியாதை. அதைத்தான் சிறப்பாக இந்த நேரத்திலே நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

ஈரோடு தமிழன்பன், அவருடைய  இயற்பெயர் எனக்கு நீண்ட நாள்களாகத் தெரியாது. பிறகு அருள்மொழி,  மணிகண்டன் அவர்கள் மூலமாகத்தான் சில நிகழ்வுகளில் தெரியக்கூடிய வாய்ப்பு வந்தது. ஈரோடு, சென்னிமலை ஜெகதீஷ். ஆனால், சென்னிமலை என்று சொன்னாலும் ஈரோட்டுக்குள்ளேதான். அதே மாதிரி அவர் ஈரோடு தமிழன்பனாகி விட்டார். மற்றவர்கள் எல்லாம் தங்கள் பெயரோடு, எதெதற்கோ ஊரைச் சொல்லவேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், அவர் ஈரோடு தமிழன்பனாக ஆகி, அதன் மூலமாக எல்லோராலும் ஈர்க்கப்படக்கூடிய அளவுக்கு வந்தார்.

புரட்சிக்கவிஞரோடு அவர் புரிந்த அற்புதமான ஒரு செயலைப் படித்தேன். புரட்சிக்கவிஞரோடு இணைந்து பத்தாண்டு தொண்டு செய்வது, அவருடன் இருப்பதென்பது வித்தியாசமானதாகும். அது அவரோடு பழகும் போதுதான் தெரியும். வேகமாக இருப்பார், விவேகமாக இருப்பார், சில நேரங்களில சிங்கம் போல இருப்பார். சில நேரங்களில் குழந்தை போல இருப்பார். இவை எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால், இருவரிடமிருந்துதான் புரட்சிக்கவிஞரைப்பற்றி தெரிந்து கொள்ள முடியும். ஒன்று, அய்யா நம்முடைய  புலவர் பேராசிரியர் ராமநாதன் அவர்கள், அதேபோல ஈரோடு தமிழன்பன் அவர்கள்.

ஈரோடு தமிழன்பன்தான் இங்கேயும்
கை கொடுக்கிறார்!

புரட்சிக்கவிஞருடைய எழுதுகோல், அவர் ஒவ்வொரு முறையும் எழுதுகின்ற அந்தக் கவிதைகளை எப்படி எழுதுகிறார் எப்படி எல்லாம் அவருடைய உணர்வுகள் இருக்கும் என்று பார்க்கும்போது, உண்மையிலேயே ‘ஈரோடு’ என்பதற்கு அதுதான் பொருத்தமானது. ஈரோட்டு உணர்வுகள் அதில் மிக முக்கியமாக  இருக்கும்.

இங்கே தமிழன்பனுடைய கவிதைகளை எல்லாம் தொகுத்து, நண்பர் அமிர்த கணேஷ் அவர்கள், ஒரு புத்தகத்தைத் தயாரித்து வைத்திருக்கிறார். என்னுடைய பேச்சுக்கு, உயரமாக அடித்தளமாக இருப்பது அந்த நூல்தான். ஒன்று, மிகக் குறைவாக இருக்கிறது,  அதற்கு உயரம் வேண்டும் என்றால், ஈரோடு தமிழன்பன்தான் இங்கேயும் கை கொடுக்கிறார். அவருடைய படைப்பு மிகப்பெரிய ஓர் அடையாளமாக இருக்கிறது. அப்படிப்பட்ட பெருமையாளர் தமிழன்பனுக்குரிய இந்த நிகழ்வு என்பது, அது சாதாரணமானது அல்ல.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *