இரு சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி சிறப்புரை!

11 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

* சென்னை மாநிலக் கல்லூரியில் ஒரு காலத்தில் சாதாரணமானவர்கள் உள்ளே நுழைய முடியாது!
* பெரிய பெரிய ஆட்கள்தான் உள்ளே போவார்கள்; ஒன்று உயர்ஜாதியாக இருக்க வேண்டும்; அல்லது உயர் வர்க்கமாக இருக்க வேண்டும்!
அப்படிப்பட்ட நிலையை மாற்றி, நீதிக் கட்சி காலத்தில் எல்லோருக்குமான கதவு திறக்கப்பட்டது!

தஞ்சை, ஜன.29 சென்னை மாநிலக் கல்லூரி, ஒரு காலத்தில் அந்த மாநிலக் கல்லூரியில்  சாதாரணமானவர்கள் உள்ளே நுழைய முடியாது; பெரிய பெரிய ஆட்கள்தான்  உள்ளே போவார்கள்; ஒன்று உயர்ஜாதியாக இருக்க வேண்டும்; அல்லது  உயர் வர்க்கமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையை மாற்றி, நீதிக் கட்சி காலத்தில் எல்லோருக்குமான கதவு திறந்தார்கள். என்றார் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி அவர்கள்.

இரு பெரும் விழாக்கள்!

கடந்த 26.12.2025 அன்று காலையில், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வளாகத்தில் உள்ள அய்ன்ஸ்டீன் அரங்கத்தில், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் மொழிகள் துறை ஒருங்கிணைப்பில், இரு நூல்களுக்கு விருதுகள் வழங்கும் விழா –  புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

சிறப்பான மூன்று விழாக்கள்!

மிகக் குறுகிய காலத்தில் வெகு சிறப்போடு, பெரு மிதத்தோடு நடைபெறக்கூடிய சிறப்பான விழா என்று நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய விழாக்களாக இந்த மூன்று விழாக்கள் அமைந்திருக்கின்றன. இந்தச் சிறப்பான மூன்று விழாக்கள்  அமைவதற்குக் காரண மானவர்கள் மூவர்.

அருப்புக்கோட்டை துரை கைலாசம் நினைவு டி.கே.சுப்பிரமணியம் அறக்கட்டளை

அருப்புக்கோட்டை துரை கைலாசம் நினைவு டி.கே.சுப்பிரமணியம் என்ற ஓர் எளிய ஆசிரியர் – அவருடைய சேமிப்பின் மூலமாகத் தந்த ஓர் அறக்கட்டளை –  அந்த அறக்கட்டளையின் சார்பாகவும்,

டாக்டர் ஜஸ்டிஸ் பி.எஸ்.சோமசுந்தரம்
நூற்றாண்டு அறக்கட்டளை!

அதேபோல  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிலே தலைசிறந்த நீதிபதி என்ற முத்திரை பதித்த பெரு மைக்குரிய அய்யா டாக்டர் ஜஸ்டிஸ் பி.எஸ்.சோமசுந்தரம் அவர்களுடைய பெயரால் நூற்றாண்டு அறக்கட்டளை,

பேராசிரியர் சி.வெள்ளையன் – பொறியாளர் சுந்தரி வெள்ளையன் அறக்கட்டளை!

அதுபோலவே பேராசிரியர் சி.வெள்ளையன் – பொறியாளர் சுந்தரி வெள்ளையன் ஆகியோர், இந்த நிறுவனம் இவ்வளவு பெரிய அளவிற்கு வளர்வதற்குத் தன்னுடைய மிகப்பெரிய பங்கை ஆற்றியவர் நம்முடைய சுந்தரி வெள்ளையன் அவர்கள். இந்த நிறுவனத்திலேயே (பாலிடெக்னிக்கில்) பிரின்சிபலாக இருந்தவர்,  தொடர்ந்து அறக்கட்டளையினுடைய பொறுப்பாளராக இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட அவருடைய வாரிசுகள் ஏற்பாடு செய்து தந்த அறக்கட்டளைகள் சார்பாக விழாக்கள் நடைபெறுகின்றன.

‘பெரியவன்’ புதினம்!

இவ்வாண்டு, இரண்டு சிறந்த நூல்களுக்கு விருது கள் வழங்கும் விழா என்ற பெயரால், இரண்டு நூல்கள்; ஒரு நூல் இங்கே நம்முடைய அருமை நண்பரும், சிறந்த எழுத்தாளருமான சுந்தரபுத்தன் அவர்கள் எழுதிய ‘பெரியவன்’ என்ற புதினம். இது ஒரு வித்தியாசமான  தனித்தன்மை நிறைந்த ஒரு புதினம்.

புதினம் என்று சொன்னால், நாவல்.  நாவல் என்றால், அதைக் கற்பனைகளில்தான் எழுதுவார்கள். அந்தக் கற்பனைகளில்,  ஊர் இருக்கும்; ஆனால் நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்காது.  அப்படி உண்டானவை தான் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாம். ஆனால், இப்போது என்ன செய்கிறார்கள்? ஊர் இருக்கின்ற காரணத்தினாலேயே அது நடந்தது என்று, அதை வரலாறு ஆக்க வேண்டிய முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வரலாற்றை அப்படியே நாவலாக்கிவிட்டார் எழுத்தாளர் சுந்தரபுத்தன்!

அப்படிப்பட்ட நிலையிலே, தன்னுடைய குடும்பம், தன்னுடைய தந்தையார், அவர் கொண்ட கொள்கை; ஓர் எளிய கிராமிய சூழல்; அதில் எப்படிப்பட்ட நிகழ்வுகள் என்பதைச் சொல்லி, எதார்த்தமாக – கொஞ்சம் கூட ஒப்பனை இல்லாமல், ஏனென்றால், எழுத்துகளுக்கு ஒப்பனை உண்டு; கற்பனைதான்  மிக முக்கியம் என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நிலையில்லாது, அவர்கள் குடும்பத்தில் நடந்ததை அப்படியே ஒரு நாவல் ஆக்கிவிட்டார் எழுத்தாளர் சுந்தரபுத்தன்.

சிறந்த எழுத்தாளர், ஆற்றலாளர் சுந்தரபுத்தன்

அது எவ்வளவு இலக்கிய செறிவு உள்ளது. ‘‘பெரியவன்’’ என்ற தலைப்பில் இருக்கக்கூடிய புதினத்தை எழுதிய நம்முடைய சிறந்த எழுத்தாளர், ஆற்றலாளர் சுந்தரபுத்தன் அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். அவர் நம் குடும்பத்து பிள்ளை.

இந்த இருவருடைய புத்தகத்தையும் பாராட்டுவது என்பது, வெறும் அவர்களுக்கான பாராட்டு மட்டுமல்ல!

நம்முடைய சுந்தரபுத்தன் அவர்களுடைய ஊர் விடயபுரம். இந்த நாவலுக்கு ‘பெரியவன்’ என்று பெயர் வைத்திருக்கிறார். அவர் சொன்னார், அவருடைய வீட்டில், இவருடைய பாட்டி, இவருடைய தாயார் ஆகியோர் இவரை  எப்படி கூப்பிடுவார்கள் என்றால், சின்ன கிராமத்தில் இருந்து வந்திருக்கின்ற  பிள்ளைகளுக்குத் தெரியும். பெரியவன் ஊர்ல இருக்கானா? சின்னவன் இருக்கானா? என்றுதான் கேட்பார்கள். ஏனென்றால், அப்போதெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு என்பது பல குடும்பங்களில் கிடையாது.  உதாரணத்திற்குச் சொல்கிறேன், ஒரு வீட்டில், பிள்ளைகள் எல்லாம் சைஸ்வாரியாக இருப்பார்கள். அதனால், அந்தப் பிள்ளைகளுடைய பெயரை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அதே நேரத்தில், ஒரே வீட்டில் உள்ள குடும்பத்தினர், தாத்தா பெயரை வைப்பார்கள்.  அந்தப் பெயரை  பெண்கள் உச்சரிக்கக் கூடாது; அப்படி என்று ஒரு நியதி – ஏனென்றால், பெண்களுக்குச் சுதந்திரம் கிடையாது.  உங்கள் வீட்டுக்காரர் பெயர் என்னவென்று கேட்டால், ‘‘அதுதாங்க, அந்தப் பக்கம் போனா சாமி இருக்கிறதே, அந்தப் பெயர்தான்’’ என்பார்கள்.

‘‘சாமிதான் எல்லா பக்கமும் இருக்கிறதே, எந்த சாமி பெயர் எழுதுவது?’’ என்று கேட்டால்,

‘‘அதாங்க, வேல் எல்லாம் வச்சிட்டு இருப்பாரே?’’ என்பார்.

ஓ! அந்த முருகனா, முருகன் என்பது அப்பெண்ணின் கணவன் பெயர்.

அன்போடும், ஆசையோடும், வாஞ்சையோடும் கூட ‘‘பெரியவனே’’ இங்கே வா! நடுவுலவனே இங்க வா! என்று அழைப்பார்கள். இந்த அனுபவம் இங்கே உள்ளவர்களுக்கு நிறைய இருக்கும். ‘அது கடைக்குட்டிங்க’, எங்கள் வீட்டில் ரொம்ப செல்வாக்கு உள்ளதுங்க’ – அது கடைக்குட்டிங்கறாங்க அதுக்கு முன்னால் பிறந்தது எல்லாம் பிள்ளைகள். அதற்கப்புறம் கடைசியாக வந்தது பாருங்க, அதுதான் குட்டி. அதனால் உங்களுக்கு ஏதாவது  பிள்ளை உண்டா? எத்தனை பிள்ளைக் குட்டிங்க? முதலில் பிறந்தது எல்லாம் பிள்ளை; இரண்டாவது பிறந்தது எல்லாம் குட்டி. ஏனென்றால்,  கட்டுப்பாட்டுக்கு அடங்காது.

ஒளிச்செங்கோ மகன் சுந்தரபுத்தன்!

ஆகவே அப்படிப்பட்ட பிள்ளை, குட்டி என்றெல்லாம் இருக்கக்கூடிய சூழ்நிலைகள் இப்போது மாறிவிட்டது. அவருடைய தந்தையார் ஒளிச்செங்கோ அவர்கள் எனக்கு மிக நெருக்கமான நண்பர். இப்புத்தகத்தில் ‘பெரியவன்’  என்று எழுதியிருப்பவர், என்னிடத்தில ரொம்பப் பாசம் உள்ளவர், மரியாதை உள்ளவர், ஆய்வாளர். மாலைப் பத்திரிகையின் செய்தியாளராக இருந்தவர். கிராமத்தில் அங்கே கொலை நடந்தது, இங்கே திருட்டு நடந்தது – என்ன சம்பவம் நடந்தது என்பதைத் திரட்டிக் கொடுப்பார்.  கூட்ட செய்திகளையும் எழுதுவார். அதுதான் செய்தி. ஆகவே, அவற்றைத் திரட்டிச் சொல்றதுக்கு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டுபோய்,  பல கிராமங்களுக்குச் சென்று, பல செய்திகளையெல்லாம்  பத்திரிகைக்கு அனுப்பியிருக்கிறார்.

அப்படிப்பட்டவர், திராவிடர் கழகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.  ஒரு சாதாரண ஒரு வேட்டி, நான்கு முழ வேட்டி;  ஒரு அரைக்கச் சட்டை, கம்பீரமான மீசை; ‘வாயா மீசை, வாயா!’’ என்றுதான் கூப்பிடுவேன். அவருடைய தந்தை எனக்கு மிக நெருக்கம். நிறைய படிப்பார், இது மாதிரி தேடிப் பிடித்து பழைய புத்தகங்களாக  இருந்தால் வாங்கிக் கொண்டு வருவார்.  அவருக்கு வசதி குறைவு; அந்தப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து, உங்களுக்காகதான் வாங்கி வைத்திருக்கிறேன். இந்தப் புத்தகம் உங்களுக்குக் கிடைக்காது. இதில் இருக்கின்ற விஷயத்தை நீங்கள் பேசிருக்கிறீர்கள். அதற்கு ஆதாரம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது என்று சொல்லுவார்.

உடனே நான், எவ்வளவு கொடுத்து இந்தப் புத்த கங்களை வாங்கியிருக்கிறீர்கள்  என்று கேட்கும்போது, பரவாயில்லை என்று சொல்லிவிடுவார்.

அந்த வட்டாரத்திற்கு நான் போனால், அவரை தேடிக் கண்டுபிடிப்பேன்.   எல்லோரும் அவரை ‘புலவர்’ என்று கூப்பிடுவோம். தந்தை பெரியாருக்கு, அன்னை மணியம்மையார் ஆகியோருக்குச் செல்லப் பிள்ளை போன்றவர்.

1932 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் ரஷ்யாவுக்குச் சென்றபோது,   அங்கே இருக்கிற ரஷ்யா அதிகாரிகளுக்கு எழுதி,  என்னென்ன ஆதாரங்கள் இருக்கிறது என்று திரட்டினார்.  விடயபுரம் என்ற ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் அவர்.  அவர் கல்லூரி படிப்பை படித்தவர் இல்லை.  ஆனால், அவர் நல்ல கூர்த்த மதியினர், ஆய்வாளர், சிந்தனையாளர், கொள்கை யாளர். வறுமையில் இருந்தாலும்கூட நேர்மையை, சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டார். அப்படிப்பட்டது அவருடைய குடும்பம். அவருக்கு ஒத்துழைத்த தாயார் உள்பட அத்தனை பேரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  நல்ல குடும்பம், ஒரு கொள்கைப் பல்கலைக்கழகம் என்பதற்கு அடையாளம் – அந்த நாவல், அந்த ஊர்.

ஆகவேதான், வெறும் கற்பனைகளை மட்டும் எழுதவேண்டும் என்கிற அவசியம் இல்லை. நடை முறையை எழுத வேண்டும்.  நடைமுறையை எழுது வதற்கு முதலில்  வழிகாட்டியவர் புதுமைப்பித்தன். அவர்தான், எதார்த்தத்தை அப்படியே நடைமுறையைச் சொல்லி இருக்கிறார். ஆனால், நடைமுறைகளில் கூட எல்லாவற்றையும் பச்சையாக சொல்ல முடியாது. ஆனால், அதை என்னுடைய நண்பர் பச்சையாவே சொல்லிட்டார். அவர்தான் ஜெயகாந்தன்.

நாங்கள் இரண்டு பேரும் ஒருமையில் பேசிக் கொள்ளக்கூடிய அளவிற்கு, ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தவர்கள்; ஒரே தெருவில் இருக்கக்கூடிய நண்பர்கள். நல்ல எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும்.

அவர்களைப் பாராட்ட வேண்டிய அளவிற்குப் பாராட்ட வேண்டும். நல்ல நூல்களை, நம்முடைய பல்கலைக் கழகத்தில் முக்கியமான  இதுபோன்ற விழாக்களில்,  இந்த அறக்கட்டளைகளில் நூல்களைப் பாராட்ட வேண்டும்.

‘‘ஸநாதனம் அறிவோம்!’’

இன்னொருவர் இங்கே வர வாய்ப்பில்லை. இந்தப் புத்தகம் ‘‘ஸநாதனம் அறிவோம்’’ என்பது.   இப்போது  இந்த வார்த்தை, அதாவது ‘ஸநாதனம்’ என்ற வார்த்தை எல்லா இடங்களிலும் புழங்குகிறது. புதிதாக இப்போது ஒரு படையெடுப்பு – ஓர் ஆக்கிரமிப்பு வந்தி ருக்கிறது. ஆனால், அதைப் பற்றிச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்ற வர்களுக்கு, ஆதாரப்பூர்வமாக –  செ. தினகர ஞான குருசாமி என்ற எழுத்தாளர் மிகவும் கடுமையாக பல ஆண்டுகள் உழைத்து, இதுவரையில் வெளிவராத பல செய்திகளைத் திரட்டி, ஆதாரப் பூர்வமாகத் தந்திருக்கிறார். இதற்காகவே  அவருக்கு இரண்டு ‘‘டாக்டர்’’ பட்டம் கொடுக்கலாம். ஏனென்றால், ஆய்வுகள் என்பது சாதாரணம் இல்லை. அவர் எந்தக் கருத்தையும், சொந்தக் கருத்தையே சொல்லவில்லை. இருப்பதை அப்படியே எடுத்துக் காட்டுகிறார் –  ஸ்கேன் ரிப்போர்ட் மாதிரி  எடுத்து காட்டுகிறார். இந்தப் புத்த கத்தினுடைய சிறப்பு என்னவென்றால், முதலில், ஒவ்வொரு விளக்கமாக சொல்லிக்கொண்டே வந்து, மிகக் கடினமான அளவிற்கு முயற்சித்து, இதற்காக அவர்கள் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தி ருக்கிறார். நாம் பிறப்பதற்கு முன்னால் இருக்கிற புத்தகங்களை எல்லாம் கண்டுபிடிக்க முடியாது. மிகக் கடினம் அது.  அதை எல்லாம் கண்டுபிடித்து,  ஒவ்வொரு இடத்திலும் இருந்து இங்கே மிகப்பெரிய அளவிற்கு எந்தெந்த நூல்களில் இருந்து எடுத்தார்கள் என்பதை, அப்படியே நகல் எடுத்து, அந்த நூல்களைத் திரட்டி, அந்தப் புத்தகங்களே இப்போது கிடைக்காது. அதை அப்படியே ஆதாரப்பூர்வமாக, சான்றாவணமாக இதை அத்தனையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். அதனால் தலைப்பு என்ன கொடுத்திருக்கிறார் என்றால்,  ‘ஸநாதனம் அறிவோம்’ என்று.  ஆங்கிலத்தில ‘ஸநாதனா லீக்ஸ்’ முதல் பாகம் என்று தெளிவாக எழுதி இருக்கிறார். மிக ஆய்வான ஒரு கட்டுரை; செறிவான கட்டுரை.  இதில் எல்லா விஷயங்களுமே மிக முக்கியமாக இருக்கும்; எதுவும் அவருடைய சொந்தக் கருத்து கிடையாது. நடைமுறையில் படிப்பதற்குச் சுவையாகக் கொடுத்திருக்கிறார்.  எதில் இருந்து எடுத்தார் என்பதை  அப்படியே எடுத்துப் பதிவு செய்திருக்கிறார்.

200 ஆண்டு கால வரலாற்றைத்
திரட்டி எழுதியிருக்கிறார்!

இது இரண்டாவது பாகமாகவும் வந்திருக்கிறது. எந்த ஆண்டெல்லாம் எடுத்துக் கொடுத்திருக்கிறார் என்பதற்கு ஆச்சரியமாக உங்களுக்கு இருக்கும். மிகப் பழைய ஆண்டு  1800, 1900, 1924, 1929 இந்த ஆண்டுகளில் மிக முக்கியமாக எங்கெங்கே யாரிடத்தில் திரட்ட முடியுமோ, அவ்வளவையும் திரட்டி எழுதி இருக்கிறார்கள்.  அதற்காகத்தான் அவருக்குப் பாராட்டு. இன்றைக்கு அவர் நேரில் வர இயலவில்லை. அவர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இருந்தாலும் அவருக்குப் பாராட்டு என்று, இரண்டையும் கொடுத்திருக்கிறோம்.

நீதிக் கட்சி காலத்தில்தான் எல்லோருக்கமான கதவு திறந்தது!

சென்னை மாநிலக் கல்லூரி, ஒரு காலத்தில் அந்த மாநிலக் கல்லூரியில்  சாதாரணமானவர்கள் உள்ளே நுழைய முடியாது; பெரிய பெரிய ஆட்கள்தான்  உள்ளே போவார்கள்; ஒன்று உயர்ஜாதியாக இருக்க வேண்டும்; அல்லது  உயர் வர்க்கமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையை மாற்றி, நீதிக் கட்சி காலத்தில் எல்லோருக்குமான கதவு திறந்தார்கள். அப்படிப்பட்ட அந்தப் பல்கலைக் கழகத்தில், பொதுவாக மாணவர்கள்  விரும்பக்கூடிய ஒரு முதல்வராக, மாணவர்களை ஈர்க்கக்கூடிய ஒரு முதல்வராக ராமர் உள்ளார். இங்கேயே பாருங்கள், ‘‘ராமன் எத்தனை ராமனடி’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு  இருக்கிறார்கள், சுற்றி சுற்றி.  ராமன்  இரண்டு பொறுப்பு வகிக்கிறார்.  கல்லூரிகளுக்கு எல்லாம் இணை இயக்குநராகவும் இருக்கிறார். அதனால், மாண வர்கள் அவரை விடுவதாக  இல்லை. அவர் மாநிலக் கல்லூரியை ஒழுங்கு படுத்தி இருக்கிறார். அங்கே நிகழ்ச்சி நடத்தினால், மிக  அற்புதமாக இருக்கும். நிறைய படிக்கட்டுகள் அந்தக் கல்லூரியில். ஏறி, இறங்கி – ஏறி, இறங்கித்தான் போக வேண்டும்.  நான் ஒருமுறை அங்கே சென்றபோது, ‘‘படி படி படி படி படிங்க என்று என் கூட வருகின்றவர்கள்  சொல்லிக் கொண்டே வந்தார்கள்.  அவர்களிடம், ஏற்கெனவே நான்  படித்துக்கொண்டுதான் இருக்கிறேன் நான் என்றேன்’’ என்று குறிப்பிட்டேன்.

அப்படிப்பட்ட ஒரு முறையில், அவ்வளவு சிறப்பான வகையில், பல படிகளில் இருந்து  உயர்ந்து வருவது என்பதற்கு அடையாளமாகத்தான், சிறப்பாக மாணவர்களை நல்வழிபடுத்தக் கூடிய ஓர் அருமையான பேராசிரியர், ஆற்றலாளரான ஆளுமையர் இரா.இராமன் அவர்களாவார்.

நம்முடைய பல்கலைக்கழகத்தின்
மேனாள் மாணவர் முத்துமணி நன்னன்!

அதேபோல நம்முடைய முத்துமணி நன்னன் அவர்கள், கருநாடக தமிழ் பத்திரிக்கை சங்கத்தினுடைய தலைவர். இதில் ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் என்ற நம்முடைய பட்டயப் படிப்பில்,  முதுகலைப் படிப்பில் நம்முடைய பல்கலைக்கழகத்தின் மாணவராக வந்து, அந்த ஆய்வில் வெற்றி பெற்று, இங்கேயே பட்டம் பெற்றவர்.  அதுவும் என்னுடைய கையால் பட்டம் வாங்கியதை இங்கே குறிப்பிட்டார்.

நம்முடைய மாணவர் ஒருவரை, நாம் அழைக்கின்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றார் என்றால், அந்த அளவிற்கு வந்திருக்கின்றார் என்றால், இந்தப் பல்கலைக்கழகம், இது ஒரு மோட்டிவேஷன் சென்டர். உங்களை எல்லாம் ஊக்கப்படுத்துவது. ஒவ்வொன்றுக்கும் செயலி இருக்கா? செயலி இருக்கா? என்று பார்ப்போம். இது ஓர் ஆக்கபூர்வமான ஒரு செயலி. இந்த அரங்கத்தில் நல்ல மகிழ்ச்சியாக அனைவரும் அமர்ந்திருக்கின்றீர்கள்.

(தொடரும்)

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *