அயோத்தி ராமன் கோயிலைப் புறக்கணிக்கும் பக்தர்கள் கோயிலில் காணிக்கைத் திருட்டால்தான் இந்த நிலை! துறவி ராம்தாஸ் பால் யோகி புலம்பல்!

3 Min Read

புதுடில்லி, ஜூன் 30– உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டால், சாதுக்கள், மடாதிபதிகள் கோபம் அடைந்துள்ளனர்.
அயோத்திக்கு வரும் பக்தர்கள் அதைச் சுற்றியுள்ள கோயில்கள், மடங்களிலும் வழிபாடு செய்து காணிக்கைகளை அள்ளி வழங்குவது வழக்கம். ஆனால், ராமன் கோயில் காணிக்கை திருட்டால், பக்தர்கள் வருகை மற்றும் காணிக்கைகள் குறைந்துள்ளன.
இதுகுறித்து மூத்த துறவி ராம்தாஸ் பால் யோகி மகாராஜ் கூறியதாவது:
“பக்தர்கள் கோபத்தில் உள்ளனர். பக்தர்கள் வருகையின் எண்ணிக்கை, காணிக்கைகள் குறைந்துள்ளது. இது அயோத்தி முழுவதையும் பாதிக்கிறது. ராமன் கோயிலுக்கு வருபவர்கள் எங்கள் கோயிலுக்கும் வருவார்கள். நாங்கள் சரயு நதிக் கரையில் இருப்பதால், மாலை நேர ஆரத்திக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
ஆனால் இப்போது அயோத்தியில் வருகை குறைந்துள்ளது. திருடினால் எப்படி காணிக்கை கிடைக்கும்? ஒட்டுமொத்த அயோத்தியும் இதற்கான தண்டனையை அனு பவிக்கிறது. பகவான் ராமன் இந்தத் திருடர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் இந்த விஷயத்தை வெளிப்படுத்திய போதுதான் அனைவரும் அறிந்தனர். ஆனால், ராமன் கோயில் நிர்வாகி சம்பத் ராய், “கணக்கு சரியாக இருக்கிறது. அப்படிப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை. குழப்பம் ஏற்படுத்துகின்றனர்” என்று கூறி கோயிலில் நடப்பதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.
இதற்கு முன்பு மிகப்பெரிய நில மோசடி நடந்துள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் 25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. அப்போதும் கூட இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் சிறிய மீன்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பெரிய மீன்கள் தப்பிக்க விடப்பட்டுள்ளனர்.
இன்றும் கூட, அரசு ஆதரவு பெற்ற சாமியார்கள், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் வலம் வரும் சாமியார்கள் இது குறித்துப் பேசத் தயாராக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆதாரங்கள் அழிப்பு

ராமன் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் ஆதாரங்களை அழித்தது தெரிய வந்துள்ளது. முக்கியக் குற்றவாளியான டின்னு (எ) ராம் ஷங்கர் உள்ளிட்ட 8 பேர் இந்த வழக்கில் கைதாகினர். கடந்த ஜூன் 6ஆம் தேதி திருட்டு விவகாரம் வெளிவந்த பின்னர், அறக்கட்டளை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
அதற்குள் குற்றம் சாட்டப் பட்டவர்கள், வாட்ஸ்- அப் போன்ற செயலிகளில் இருந்த தகவல்களை அழித்துள்ளனர். கைப்பேசிகளை ‘பார்மட்’ செய்து தரவுகளை அழித்துள்ளனர். இந்நிலையில், அயோத்தி காவல் துறையினர் 28.6.2026 அன்று சம்பந்தப்பட்டவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில், 28.6.2026 அன்று மாலை வரை ரூ.79 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.
டின்னுவும் அவரது கூட்டளி களும் ராமன் கோயிலில் செல்வாக் குடன் இருந்துள்ளனர். இந்த வழக்கில் வங்கி அதிகாரிகளும் விசாரணையில் உள்ளனர். கடந்த 45 நாட்களில் அனைத்து சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளையும் காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
அதில் குற்றம் சாட்டப் பட்டவர்கள், கோயிலில் திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. எனினும், எவ்வளவு காலமாக இந்த காணிக்கைப் பணம் திருடப்பட்டது என்று தெரியவில்லை. ஏனெனில் 45 நாட்களுக்கு முந்தைய கேமரா பதிவுகள் சேமிப்பில் இல்லை.
இதற்கிடையில், அறக்கட்டளை நிர்வாகிகள், குற்றம் சாட்டப்பட்ட வர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பது குறித்து உத்தரப் பிரதேச அரசின் எஸ்அய்டி தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்தப் பரபரப்பான சூழ்நிலை யில் சிறீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் அடுத்த கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் புதிய பொதுச்செயலாளர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *