அதானி வழக்கு விசாரணையை வேகப்படுத்த அமெரிக்க நீதிமன்றம் புதிய உத்தரவு!

viduthalai
1 Min Read

வாசிங்டன், ஜன.3 அதானி லஞ்ச புகார் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வு விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதானிக்கு எதிராக வழக்கு

2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கவுதம் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதானி மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை குற்ற வழக்கு தொடுத்துள்ள நிலையில், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையம் தரப்பில் இரண்டு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் புதிய உத்தரவு

இந்த மூன்று வழக்குகளும் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இவை அனைத்தையும் ஒரே நீதிபதி அமர்வுக்கு மாற்றி நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதித்துறை செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும், மூன்று வழக்குகள் வெவ்வேறு அமர்வில் விசாரிக்கப்படும் பட்சத்தில் விசாரணை தேதிகளில் முரண்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வழக்குகளையும் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் விசாரிப்பார் என்றும் அனைத்து வழக்குகளும் தனித்தனியே விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அதானி கிரீன் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையமும் பதிவு செய்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனக் கூறி அதானி குழுமம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *