ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஜாதி அடிப்படையில் பின்தங்கிய மக்களின் வாழ்நிலை கணக்கெடுக்கத்தானே தவிர, பல்லாயிரக்கணக்கான உட்பிரிவுகள் உள்ளது என்றும், அதனை கணக்கெடுப்பது எப்படி எனவும் குழப்புவதற்கல்ல.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை உயர்த்த அண் ணல் அம்பேத்கர் அவர்கள் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளான ஜாதிகள் அனைத்தையும் பட்டியலிட்டு அதனை ஒடுக்குமுறைக்கான பட்டியல் ஜாதிகள் என்று ஒரே குறியீட்டின் கீழ் கொண்டுவந்தார். அதுபோல பார்ப்பனர்கள், மேல் ஜாதி என்று தங்களை அடையாளம் காட்ட விரும்பும் ஜாதிகளை தவிர்த்து, மற்ற அனைத்தும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரையும் இதர பிற்படுத்தப்பட்டோர் என்ற குறியீட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். இதை விடுத்து உட்பிரிவுகளை காட்டி ஒரே ஜாதியில் ஆயிரம் கூறுகள் என்று பிற்படுத்தப்பட்ட மக்களை கூறுபோடுவது, ஜாதி ஆதிக்க பிளவு வாத அரசியலே தவிர பின்தங்கிய மக்களை உயர்த்த திட்டம் இல்லாத ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி செய்த குழப்பம் போன்றது.
பின் தங்கிய மக்களின் ஜாதி கணக்கை எடுத்து சமூக, கல்வி அடிப்படையில் அடித்தட்டு மக்களின் வாழ்நிலையை உயர்த்த திட்டமிடு!
இந்திய சமூகம் என்பது ஜாதிய அடுக்குகளால் கட்டப்பட்ட ஜாதிய கட்டமைப்பு. இந்த கட்டமைப்பில் உச்சியில் அமர்ந்து உழைக்கும் மக்களின் உழைப்பை உறிஞ்சி உயிர் வாழ்கிறது பார்ப்பனியம். ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் படிக்கக்கூடாது எழுதக்கூடாது என்பதே பார்பனியம் உருவாக்கிய வாழ்க்கை நெறி. அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமை, பெண்கள் உரிமை, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசு அதிகாரத்தில் பங்கு என்று சனநாயக உரிமைக்காக போராடினார்கள். கல்வியில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தார்கள். எந்த ஜாதியால் நம்மை பார்ப்பனியம் வீழ்த்த திட்டமிட்டதோ, அதே ஜாதியால் சம உரிமை கேட்கிறோம். ஒவ்வொரு ஜாதியும் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக எவ்வளவு பின்தங்கியுள்ளார்கள் என்பதை கண்டறியவே ஜாதிவாரி கணக்கீடு, இந்த உரிமையை பெறுவதற்காக போராடுவதே சமூக சனநாயகத்தை நேசிக்கும் நாம் முன்னெடுக்கும் போராட்டம். இதுவே அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் நமக்கு காட்டிய வழி.
நாள் : 27-11-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.16 மணிக்கு
இடம் : எல்.அய்.சி. கட்டடம், அண்ணாசாலை, சென்னை
தலைமை: தோழர் ச.அய்யனார்
(பொதுச் செயலாளர், தென்மண்டல எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் கூட்டமைப்பு)
கண்டன உரை: ச. பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
