நெரிசலான சாலையின் மய்யத்தடுப்பில் சிறிது இடைவெளி இருந்தாலும்போதும்; அதை பாதசாரிகள் வழியாக பயன்படுத்த தொடங்கி விடுவர். டில்லி மங்கோல்புரியில் பல்லாண்டுகளாக இப்படி நடப்பதை கண்ட வாலிபர், அதற்கு முடிவு கட்ட நினைத்தார். சாலை இடைவெளியில், வட்டம் போட்டதுபோல குங்குமத்தை கொட்டினார்; கிண்ணத்தில் கொஞ்சம் குங்குமத்தையும் வைத்து விட்டார்.
‘பில்லி சூனியமோ’ என பயந்த பாதசாரிகள், அதில் செல்வதை தவிர்த்து ஒழுங்கான சாலையில் சென்றனர். வீடியோவை பார்த்த பலரும், ‘அரசு உத்தரவால் முடியாத ஒன்றை, மூடநம்பிக்கை செய்திருக்கிறது’ என பதிவிட்டனர். இன்னொருவர், ‘இந்தியப் பிரச்னைகளுக்கு தேவை இந்திய தீர்வுகளே’ என்று பதிவிட்டார்.
– ‘தினமலர்’
19.11.2026, பக்கம் 10
‘பரம மூடர்கள்’ என்ற சொலவடை உண்டு. அதை எங்கும் தேட வேண்டிய அவசியமில்லை. ‘தினமலர்’, ‘துக்ளக்’ போன்ற ஏடுகளைப் புரட்டினாலே தெரிந்து கொள்ளலாம்.
சாலையின் மய்யத் தடுப்பு எதற்குப் போடப்பட்டுள்ளது? மக்களின் நன்மைக்காகத்தானே – அவர்களின் உயிரைக் காப்பாற்றத்தானே – அந்த நிலையை விளக்கிச் சொல்லி, அறிவு ரீதியாகத் திருத்துவதற்குப் பதிலாக, சாலைத் தடுப்பின் இடைவெளியைப் பயன்படுத்தி, சாலையைக் கடப்பதைத் தடுக்க, அந்த இடத்தில் வட்டம் போட்டது போல குங்குமத்தை ஒருவர் கொட்டியதால், அது ‘சாமி சமாச்சாரம்’ என்று நம்பி, அந்த இடத்தில் நுழைந்து, சாலையைக் கடந்து செல்லமாட்டார்களாம்!
பூட்டை உடைத்து கோயில்களுக்குள்ளேயே நுழைந்து, சாமி சிலைகளையும், சாமியின் நகைகளையும் ‘அபேஸ்’ செய்கிறவர்கள் எல்லாம் நாத்திகர்களா? இல்லையே! நெற்றி நிறைய பட்டை அடித்து, குங்குமத்தை அப்பிக் கொண்டே, அந்தத் திருட்டு வேலையைச் செய்வதில்லையா!
‘‘நாத்திகர்களுக்கும், சாமி சிலைகள் திருட்டுக்கும் சம்பந்தம் இல்லை’’ என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஒரு பேட்டியில் சொல்லவில்லையா?
காஞ்சிபுரம் மச்சேந்திர நாதர் கோயில் கருவறைக்குள்ளேயே அர்ச்சகர்ப் பார்ப்பான் தேவநாதன், பெண் பக்தர்களைப் பாலியல் சீரழிப்பு வேட்டையை நடத்தவில்லையா?
சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் பத்ரிநாத் என்ற அர்ச்சகர்ப் பார்ப்பான் பாலியல் லீலைகளை நடத்தவில்லையா?
‘‘பக்தி வந்தால், தவறு செய்யமாட்டார்கள்’’ என்பதுபோல, ஒரு ஜோடனையை ‘தினமலர்’ கதையளக்கிறது.
தந்தை பெரியார் ஒன்றைச் சொல்வார், ‘‘குழந்தைப் பருவத்திலிருந்தே நல்ல புத்தியைச் சொல்லிக் கொடுக்கவேண்டும். நெருப்பைத் தொடாதே, அது சுட்டுவிடும், காயத்தை ஏற்படுத்திவிடும் என்று அறிவியல் ரீதியாகச் சொல்லிக் கொடுக்கவேண்டுமே தவிர, நெருப்பைத் தொடாதே, சாமி கண்ணைக் குத்தும் என்று முட்டாள் தனத்தையே முளையிலேயே குழந்தைகளின் மூளையில் ஏற்றக் கூடாது!’’
– மயிலாடன்
