ஒற்றைப்பத்தி

- Advertisement -

பார்ப்பனர்களின் நோக்கம்…!

கேள்வி: பெண்ணாடம்  அருகேகோயிலில் அம்மன் கண்களைத் துணியால் கட்டிவிட்டு, நகையை கொள்ளை அடித்திருக்கிறாரே ஒருவர்?

பதில்: கடவுளுக்குப் பயந்த கொள்ளையன் என்று தெரிகிறது. அவனது சிறுவயதில் அவனது அம்மா, ‘தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்’ என்று கூறியிருப்பார் போலும்!

‘தினமலர்’, அந்துமணி பதில்கள்,
30.10.2026

எப்படி சமாளிக்கிறது ‘தினமலர்’ வகையறா என்பதைப் பார்த்தீர்களா?

தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்துமாம். அப்படியா?

அம்மன் சாமியின் கண்களைத் துணியால் கட்டுவது குற்றமில்லையா? அதைத் திருடன் செய்தபோது சாமி அவன் கண்களைக் குத்த வேண்டியதுதானே!

சாமியின் நகைகளையும் திருடியிருக்கிறான். கோயில் உண்டியல் பணத்தையும் கொள்ளை அடித்திருக்கிறான்; அதோடு அவன் நிற்கவில்லை; உண்டியலைத் தூக்கி ஆற்றில் வீசி இருக்கிறான். அவையெல்லாம் குற்றச் செயல் இல்லையா?

திருடனின் கண்களை சாமி குத்தாதது ஏன்?

‘‘நட்ட கல்லைத் தெய்வமென்று

நாலு புட்பம் சாத்தியே

சுற்றிவந்து முணமுணென்று

சொல்லு மந்திரம் ஏதடா?

நட்டகல்லும் பேசுமோ

நாதனுள் ளிருக்கையில்!

சுட்டசட்டி சட்டுவம்

கறிச்சுவை அறியுமோ?’’ என்று சிவ வாக்கியர் பாடினாரே!

‘‘ஓசையுள்ள கல்லைநீ

உடைத்திரண்டாய் செய்துமே

வாசலிற் பதித்தகல்லை

மழுங்கவே மிதிக்கின்றீர்

பூசனைக்கு வைத்த கல்லில்

பூவும் நீரும் சாத்துகிறீர்

ஈசனுக்குகந்த

கல்லெந்தக் கல்லு

சொல்லுமே!’’

இந்தப் பாடலையும் சித்தர் சிவ வாக்கியரே பாடியுள்ளார்.

சிவ வாக்கியர் ஈரோட்டார் சீடர் அல்லர். ‘குடிஅரசு’ வாசகரும் அல்லர்.
9 ஆம் நூற்றாண்டிலேயே இப்படிப் பாடியிருக்கிறார்.

இதற்கெல்லாம் ‘தினமலர்’ வகையறாக்கள் பதில் வைத்துள்ளார்களா?

ஏன் பார்ப்பனர்கள் ஒரு குழவிக் கல்லுக்காக (சாமிக்காக) வக்காலத்து வாங்குகிறார்கள்?

இதைப்பற்றி தந்தை பெரியார் கூறுகிறார்,
‘‘ஒரு சிறிய குட்டிக் கடவுள் இருக்கும்வரை நாம் சூத்திரர்கள்தான்.’’

(‘விடுதலை’, 3.2.1956,
பக்கம் 4).

இதைப் புரிந்து கொண்டால், பார்ப்பனர்கள் கற்களைக் கடவுள் என்று கட்டிக் கொண்டு அழுவதன் நோக்கம் உள்ளங்கை நெல்லி எனப் பளிச்சென்று, தெள்ளத் தெளிய விளங்குமே!

– மயிலாடன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *