பழங்குடியினத் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்ஸா முண்டா பிறந்தநாள் நவம்பர் 15 அன்று பா.ஜ.க. டில்லி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது
அப்போது பாஜகவைத் தொடங்கிய தீன தயாள் உபாத்தியாயா மற்றும் சியாமா பிரகாஷ் முகர்ஜி படங்களோடு, பாரத மாதா படம் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், பிறந்தநாள் நாயகரான பிர்ஸாமுண்டா படத்தை ஒரு மூலையில் வைத்திருந்தனர்.
முகர்ஜி, உபாத்யாயா இருவருமே பார்ப்பனர்கள். அவர்கள் படத்திற்கு இணையாக பெரிய அளவில் வைத்தால், தீட்டாகிவிடுமாம். ஆகவே சிறிய அளவில் ஒரு மூலையில் பிர்ஸாமுண்டா படம் வைக்கப்பட்டிருந்தது
இவர்கள் தான் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கி பழங்குடியின மக்களுக்குப் பெருமை சேர்க்கிறார்களாம்.
இது ஒன்றும் இவர்களுக்குப் புதுமையானதல்ல!
குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த், குடும்பத்தாருடன் ஒடிசா பூரி ஜெகந்நாத் கோயிலுக்கும் (18.3.2018), ராஜஸ்தான் புஷ்கர் பிரம்மா கோயிலுக்கும் (15.5.2018) சென்றபோது, தடுத்து நிறுத்தப்படவில்லையா?
தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்கோ, திறப்பு விழாவுக்கோ அழைக்கப்பட்ட துண்டா?
பீகாரில் முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார், அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, முதலமைச்சர் பதவியிலிருந்து, பதவி விலகி, அந்த இடத்தில், முசஹர் மகாதலித் சமூகத்தைச் சேர்ந்த ஜிதன் ராம் மாஞ்சி முதலமைச்சராகப் பதவி ஏற்றார் (20.5.2014 – 9 மாதங்கள் முதலமைச்சராக இருந்தார்). முதலமைச்சராக இருந்தபோது, பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள பரமேஸ்வரி கோயிலுக்குச் சென்றார். அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால், கோயில் தீட்டாகி விட்டது என்று கூறி, (28.9.2014) கோயிலையும், சாமி சிலையையும் கழுவி சுத்திகரிப்பு வேலையைப் பார்ப்பனர்கள் செய்தார்களே!
பார்ப்பனீயத்தை எது கொண்டு சாத்தினாலும், அதன் புத்தி மட்டும் மாறவே மாறுவதில்லை – இது கல்லின் மேல் எழுத்து!
ஊரை ஏமாற்ற, ‘பாருங்கள், பாருங்கள் எங்கள் (பா.ஜ.க.) ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை இந்தியாவின் குடிமகன்(ள்)களாக ஆக்கியிருக்கிறோம். சமூக நீதி மீது எங்களுக்கு இருக்கும் ‘‘பக்தி’’யைப் பார்த்தீர்களா?’ என்று தம்பட்டம் அடிப்பதற்குத் தான் இவர்களின் படங்களைக் காட்டுகிறார்களே தவிர, உண்மையில் இவர்கள் சமூகநீதி மீது அக்கறை கொண்டவர்கள்தானா?
உண்மையில் சமத்துவம், சமநிலை, சமூகநீதிக் கண்கள் இவர்களுக்கு இருக்குமேயானால், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரட்டுமே பார்க்கலாம்.
அயோத்தியில் இராமன் கோயில் திறப்பு விழாவுக்கே குடியரசுத் தலைவர் மாண்பமை திரவுபதி முர்முவை அழைக்கவில்லையே! காரணம், அவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் – கணவனை இழந்தவர் என்ற இந்துத்துவ ஸநாதனப் பார்வைதானே!
பழங்குடி இனத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்ஸா முண்டா பிறந்த நாள் நவம்பர் 15(1875).
பழங்குடி இன மக்களின் உரிமைக்காகப் போராடிய மாவீரர். அதற்காக ஆங்கிலேயர்களையும், நிலப் பிரபுக்களையும் எதிர்த்து முண்டா தட்டியவர்!
பழங்குடி இன மக்களால் ‘‘தர்த்தி ஆபா’’ (அதாவது பூமியின் தந்தை) என்று அழைக்கப்பட்டவர்.
இப்படிப்பட்டவர்க்குப் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்கூட பி.ஜே.பி.யினருக்கு அரசியல் ஆதாயப் பார்வைதான்!
பிறந்த நாள் என்று கூறி, உயர்ஜாதித் தலைவர்களின் படத்தைப் பெரிய அளவில் மாட்டி, விழாவுக்குரிய நாயகர் பிர்ஸா முண்டாவை கண்ணுக்குத் தெரியாத வகையில் ‘குட்டியோண்டு’ வைத்திருக்கிறார்கள்.
எது கொண்டு விளக்கினாலும், இவர்கள் விளங்க மாட்டார்கள்.
