இண்டியா கூட்டணி சார்பில் தேர்தல் மோசடி மன்னன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி விலகக்கோரி நடந்த ராம் லீலா மைதானப் பேரணியில், ஒரு வித்தியாசமான காட்சி!
தேர்தல் ஆணையத்தால் இறந்து போனவர்கள் என்று கூறப்பட்டவர்கள், ‘‘நாங்கள் பேயாக மாறி விட்டோம்; காரணம், தேர்தல் ஆணையம் எங்களை இறந்து போனவர்கள் என்று கூறி, வாக்காளர்ப் பெயர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது’’ என்று கூறி, வித்தியாசமான ஒப்பனையில், வெள்ளை ஆடையோடு முகத்தை மறைத்துக் கொண்டு, டில்லிப் பேரணியில் கலந்துகொண்டனர்.
‘பேய்’ இருக்கிறதா, இல்லையா? என்பது வேறு பிரச்சினை. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்திருக்கக் கூடிய அண்டத்தையே குலுங்கச் செய்த பித்தலாட்டத்தை மய்யப்படுத்தி, இப்படியொரு ஊர்வலத்தை இந்தியத் துணைக் கண்டத்தின் தலைநகரான டில்லியில் நடத்தியுள்ளனர். ‘‘நாங்கள் உயிரோடு இருக்கிறோம்; ஆனால், தேர்தல் ஆணையம் எங்களை வாக்காளர்ப் பட்டியலிலிருந்து நீக்கி விட்டது’’ என்று அறிவிக்கும் வகையில், கையில் வாக்காளர் அட்டையையும், ஆதார் அட்டையையும் பொது மக்களிடம் காட்டியவண்ணம் முகத்தில் நீல நிற வண்ணம் பூசியும், வெள்ளை உடை அணிந்தும் (நாங்கள் ‘பேயாகி’விட்டோம் என்று காட்டுவதற்காம்!) பேரணியில் பங்கேற்றனர்.
உலகப் பந்து முழுவதும் இந்தியாவின் யோக்கியதை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது இதன்மூலம் அம்பலமாகும்; கைதட்டி, கேலி செய்யக்கூடிய அவலம்தான் அரங்கேறப் போகிறது!
பி.ஜே.பி. ஆட்சி எத்தகைய ஒருவரை தேர்தல் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்திருக்கிறது என்று எள்ளி நகையாடப்படும்; இவரை நியமனம் செய்த மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி எத்தகைய முறைகேடானது என்பது நிர்வாணமாகத் தெரியப் போகிறது.
ஒருவர் , இருவர் அல்லர்; 13 கோடி வாக்காளர்கள் உயிரோடு இருந்தும், இறந்துவிட்டதாகக் காட்டுகிறது தேர்தல் ஆணையம் என்றால், இதன் பின்னணி என்ன?
நீக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் என்று தெரிய வரும்போது, இதன் பின்ணியில் பி.ஜே.பி. புகுந்து விளையாடியிருக்கிறது என்பது கோவணம் கட்டாத சிறுவர்களுக்கும் தெரிந்துவிட்ட செய்தியாகும்.
தேர்தலில் வெற்றி பெற, ஆர்.எஸ்.எஸ். நரி பெற்றெடுத்த பி.ஜே.பி. எந்த எல்லைக்கும் செல்லும் என்பது பொதுமக்கள் மத்தியில் அன்றாடம் பேசப்படும் சர்வ சாதாரணப் பேச்சாகும்.
அமெரிக்கா போன்ற நாடுகளில்கூட, காகித வாக்கு அடையாளச் சீட்டு இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் ஏன் EVM (மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்) முறை என்ற குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறதே!
வெகுமக்களின் குரலை மதிக்காத பாசிச பா.ஜ.க. ஆட்சியில், ஜனநாயகத்தின் குரல், ‘செவிடர் காதில் ஊதப்படும் சங்கு’ என்று வழக்கில் சொல்லப்படும் பழமொழிதான் நினைவிற்கு வருகிறது!
