மருத்துவக் கல்லூரியில் சேர தனக்கு உதவி செய்த பெரியாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் –
மருத்துவர் தமிழ்மணி, தன்னுடைய முதல் மாத ஊதியத்தை இயக்கத்திற்கு நன்கொடையாக பெரியாரிடம் வழங்கினார்!
மருத்துவர் தமிழ்மணி, தன்னுடைய முதல் மாத ஊதியத்தை இயக்கத்திற்கு நன்கொடையாக பெரியாரிடம் வழங்கினார்!
சாலியமங்கலம், நவ.19 மருத்துவக் கல்லூரியில் சேர தனக்கு உதவி செய்த பெரியாருக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில், நூற்றாண்டு விழா நாயகரின் அய்யா தருமராசனின் மகள் மருத்துவர் தமிழ்மணி, தன்னுடைய முதல் மாத ஊதியத்தை இயக்கத்திற்கு நன்கொடையாக அவரிடம் வழங்கினார். உதவி பெற்றவர்கள், அதை மறக்காமல் நன்றியோடு வாழ வேண்டும் என்பதற்கு அய்யா தருமராசன் குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
- மருத்துவக் கல்லூரியில் சேர தனக்கு உதவி செய்த பெரியாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் – மருத்துவர் தமிழ்மணி, தன்னுடைய முதல் மாத ஊதியத்தை இயக்கத்திற்கு நன்கொடையாக பெரியாரிடம் வழங்கினார்!
- சுயமரியாதைச் சுடரொளி ஆர்.தருமராசன் அவர்களின் நூற்றாண்டு விழா – கழகத் தலைவர் தலைமையுரை
- இயக்கக் கொள்கை உணர்வோடு வாழ்ந்தவர் அய்யா தருமராசன்
- உதவி பெற்றவர்கள், அதை மறக்காமல் நன்றியோடு வாழ வேண்டும் என்பதற்கு அய்யா தருமராஜன் குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு!
- கொள்கை உறவுகளால் இணைந்த குடும்பங்கள்!
- அரிய தகவல்கள் அடங்கிய நூற்றாண்டு விழா மலர்!
- நூற்றாண்டு விழா நாயகர் ஓர் அருமையான கொள்கை வைரம்தான்!
- நூற்றாண்டு விழா – கொள்கைக் குடும்ப விழா!
- தந்தை பெரியார் உருவாக்கிய – நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம்!
- சிலர் தெரிந்தே கேட்கிறார்கள்; சிலர் தெரியாமல் கேட்கிறார்கள்!
- ‘பெரியார் உலக’த்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை!
- ஆண்டுதோறும் தவறாமல் நன்கொடை வழங்குவார் தருமராசன்!
- நன்றி உணர்ச்சியோடு இயக்கத்திற்குத் தொடர்ந்து தொண்டு செய்து வருகிற குடும்பம!
- தந்தை பெரியார் கொடுத்த பரிந்துரைக் கடிதம்!
- மிகுந்த மரியாதையோடு வரவேற்றார்கள்!
- தந்தை பெரியாரிடம், முதல் மாத ஊதியத்தை நன்கொடையாகக் கொடுத்தார் தமிழ்மணி!
- இந்தக் குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு!
சுயமரியாதைச் சுடரொளி ஆர்.தருமராசன் அவர்களின் நூற்றாண்டு விழா – கழகத் தலைவர் தலைமையுரை
கடந்த 15.11.2026 அன்று காலை 11 மணிக்கு தஞ்சை சாலியமங்கலம் ஊராட்சியில் உள்ள வி.ஆர்.மகாலில் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளி
ஆர்.தருமராசன் நூற்றாண்டு விழா திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அவ்விழாவில் தலைமையுரையாற்றினார் கழகத் தலைவர்.
இயக்கக் கொள்கை உணர்வோடு வாழ்ந்தவர் அய்யா தருமராசன்
அவரது தலைமையுரை வருமாறு:
எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் இவ்விழா நடை பெறுகின்றது. தந்தை பெரியார் அவர்களின் அணுக்கத் தொண்டராக, எந்தப் பொறுப்பில் இருந்தாலும், தந்தை பெரியார்தான் தனக்கு அறிவு வழிகாட்டி; அவருடைய கொள்கைகள்தான் தனது குடும்பத்திற்கும் வழிகாட்டி என்ற உணர்வோடு வாழ்ந்தவர் அய்யா தருமராசன் அவர்கள்.
எந்தச் சூழ்நிலையிலும் சிறிதளவுகூட அசைவு, ஆட்டம், தடுமாற்றம் இல்லாமல், கண்ணை மூடிக்கொண்டு தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய சிறந்த தொண்டர்கள் குழுவில் அவர் ஒருவர். அப்படிப்பட்ட முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நாயகர், ஸ்டேஷன் மாஸ்டர் தருமராசன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று, அவருடைய மகள்கள், மகன், வழிவழியாக வந்த குடும்பச் செல்வங்கள் அனைவரும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
உதவி பெற்றவர்கள், அதை மறக்காமல் நன்றியோடு வாழ வேண்டும் என்பதற்கு அய்யா தருமராஜன் குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு!
கொள்கை உறவுகளால்
இணைந்த குடும்பங்கள்!
இணைந்த குடும்பங்கள்!
என்னுடைய குடும்பம் வேறு, அவருடைய குடும்பம் வேறு அல்ல. இந்த இரண்டு குடும்பங்க ளும் கொள்கை உறவுகளால் இணைந்தவை. பல்லாயிரக்கணக்கான, ஏன், பல லட்சக்கணக்கான குடும்ப உறவுகளைப் போன்றதுதான் இந்தக் கொள்கை உறவு.
இந்த நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்திய குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் என அனைவரின் சார்பாக வும் இந்தக் குடும்பத்தினரை வாழ்த்துகிறோம்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார் அவர்களே, இரா.குணசேகரன் அவர்களே, மாநிலத் தொழிலாளர் அணிச் செயலாளர் மு.சேகர் அவர்களே, தஞ்சை மாவட்டக் காப்பாளர் அய்யனார் அவர்களே, தஞ்சை மாவட்டத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன் அவர்களே, தஞ்சை மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் அவர்களே, ஒன்றியத் தலைவர் ஜவகர் அவர்களே, மேலும் இக்குடும்பத்தின் உற்றார் உறவினர்களே, தோழர்களே, பெருமக்களே, உங்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்கிறேன்.
அரிய தகவல்கள் அடங்கிய
நூற்றாண்டு விழா மலர்!
நூற்றாண்டு விழா மலர்!
இந்த நூற்றாண்டு விழா மலர் திருக்குறளைப் போன்று சிறிய அளவில் இருந்தாலும், பல அரிய தகவல்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது.
தந்தை பெரியாருடைய தொண்டர்கள் பல வகையாக இருப்பார்கள். கருப்புச் சட்டை அணிந்து நேரடியாகக் களத்தில் நின்று போராடக்கூடியவர்கள் ஒரு வகை. அதேபோல, தங்களுடைய பணிகளில், பொறுப்புகளில் இருந்துகொண்டு கருப்புச் சட்டை அணியாமல் இருந்தாலும், கருப்புச் சட்டை அணிந்த வர்களைவிட அதிகக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளக்கூடியவர்கள் இன்னொரு வகை.
நூற்றாண்டு விழா நாயகர் ஓர் அருமையான கொள்கை வைரம்தான்!
அப்படிப்பட்ட ஓர் அருமையான கொள்கை வைரம்தான் இங்கே நூற்றாண்டு விழா நாயகராகப் போற்றப்படும் அய்யா தருமராசன் அவர்கள்.
அவரைப் பற்றிய சிறு குறிப்பை இந்த மலரில் எழுதியிருக்கிறோம். தந்தை பெரியார் அவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்பு அளப்பரியது.
பொதுவாக, இந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில், திராவிடர் கழகம் ஏராளமான நூற்றாண்டு விழாக்களை நடத்தியிருக்கிறது. இயக்கத்திற்குத் தொண்டு செய்த வர்கள் அனைவருக்கும் நூற்றாண்டு விழாக்களை நடத்தி வருகிறோம். தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு தொடங்கி, அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு உள்ளிட்ட பல்வேறு நூற்றாண்டு விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.
அந்த வகையில், அய்யா தருமராசன் அவர்களின் நூற்றாண்டு விழா என்று சொன்னவுடன், சென்னையில் வழக்கம்போலப் பெரியார் திடலில் சிறப்பாக நடத்த வேண்டும் என்று கழகத்தின் சார்பில் நாங்கள் முடிவு செய்திருந்தோம்.
நூற்றாண்டு விழா –
கொள்கைக் குடும்ப விழா!
கொள்கைக் குடும்ப விழா!
ஆனால், அதற்குள் நம்முடைய தோழர் த.தமிழ்மணி, த. வீரசேகரன், அருமைக் கண்ணு மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து, இங்கே இல்லத் திறப்பு விழாவையும், அதே நேரத்தில் நூற்றாண்டு விழாவையும் குடும்ப விழாவாக நடத்த வேண்டும் என்று விரும்பி, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துவிட்டார்கள். இது ஒரு கொள்கைக் குடும்ப விழா.
குடும்ப உறவு என்பது நான் அடிக்கடி சொல்வது போல, இரத்த உறவு ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் இருக்கும். ஆனால், கொள்கை உறவு என்பது என்றென்றும் நீடிக்கக்கூடியது. அப்படிப்பட்ட கொள்கை உறவைத் தந்தை பெரியார் அவர்கள் சிறப்பாக உரு வாக்கியிருக்கிறார்.
அவருடைய சிறப்பான அணுக்கத் தொண்டர்களில் ஒருவர்தான் இந்த நூற்றாண்டு விழா நாயகர் தருமராசன் அவர்கள்.
ஓர் எளிய குடும்பத்தைச் சார்ந்தவர் அவர் ஒரு காலத்தில் நம்முடைய மக்களுக்குப் படிப்பு வராது என்று சொன்னார்கள். நம்முடைய ஜாதியைச் சொல்லி, ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒவ்வொரு வேறுபாட்டை உருவாக்கி, இந்த ஜாதிக்காரனுக்கு இது வராது; அந்த ஜாதிக்காரனுக்கு அது வராது என்று சொல்லக்கூடிய சூழ்நிலை இருந்தது.
எல்லோரும் மனிதர்கள்தான். ஆனால், அன்றைய சமூகச் சூழலில் நமக்கெல்லாம் கல்வி கற்கும் வாய்ப்பு கிடையாது. படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டோம்.
அன்றைய வகுப்பறைகளில் பார்ப்பன ஆசிரியர்கள், என்ன சொல்வார்கள் தெரியுமா?
தந்தை பெரியார் உருவாக்கிய –
நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம்!
நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம்!
‘உனக்கெல்லாம் படிப்பு வராது. நீ மாடு மேய்க்கப் போ. உனக்கு எங்கே படிப்பு வரும்? நீ செருப்புத் தைக்கப் போ. நீ இந்த வேலையைச் செய்’ என்று மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைக் கலக்கக்கூடிய வகையில் பேசுவார்கள். அந்த நிலைமையை மாற்றிய இயக்கம்தான், நூற்றாண்டு கண்ட தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம்.
இன்று இத்தனை பேர் பட்டதாரிகளாகவும், மருத்துவர்களாகவும், பல்வேறு துறைகளில் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்களாகவும் இருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்கள் ஏற்படுத்திய சமூகப் புரட்சிதான்.
அன்றைக்கு ஜாதிப் பட்டங்களைப் பெருமையாக நினைத்தவர்கள், இன்று பெரியார் உருவாக்கிய சமூக மாற்றத்தின் பயனை அனுபவித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
சிலர் தெரிந்தே கேட்கிறார்கள்;
சிலர் தெரியாமல் கேட்கிறார்கள்!
சிலர் தெரியாமல் கேட்கிறார்கள்!
‘பெரியார் என்ன செய்தார்?’ என்று இன்றும் சிலர் கேட்கிறார்கள். சிலர் தெரிந்தே கேட்கிறார்கள்; சிலர் தெரியாமல் கேட்கிறார்கள்; இன்னும் சிலர் விஷமத்தனமாகக் கேட்கிறார்கள்.
இந்த நூற்றாண்டு விழாவில் பங்கேற்றிருக்கும் குடும்பத்தினரையும், இந்த மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கும் பெருமக்களையும் பார்த்தாலே, அவர்களுக்குப் பதில் தெரியும்.
அதனால்தான் நம்முடைய கொள்கை வீரர்களான ரங்கசாமி போன்றவர்களும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்களும், எந்தக் கட்சியில் அவர்கள் இருந்தாலும் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வாழக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், இந்தக் குடும்பத்தினர் அனை வரையும் அழைத்து நாங்கள் சிறப்புச் செய்தோம். ஏனென்றால், கழகத்தின் சார்பில் நாங்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நீங்கள் குடும்பத்தினராக ஏற்றுக்கொண்டு, புதுமனைப் புகுவிழாவையும், நூற்றாண்டு விழாவையும் மிகச் சிறப்பாக நடத்தி யிருக்கிறீர்கள்.
கரும்பு தின்னக் கூலி கேட்பது போன்ற மகிழ்ச்சிதான் இது!
‘பெரியார் உலக’த்திற்கு
ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை!
ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை!
அய்யா தருமராசன் அவர்களின் பிறந்த நாளையொட்டியும், ‘பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்’ என்ற நம்முடைய இலட்சியத்தைச் செயல்படுத்தும் வகையிலும், இந்தக் குடும்பத்தினர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள்.
இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் ஏற்கெனவே பலமுறை நன்கொடைகள் வழங்கியிருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் தவறாமல்
நன்கொடை வழங்குவார் தருமராசன்!
நன்கொடை வழங்குவார் தருமராசன்!
தருமராசன் அவர்கள் தன்னுடைய பெற்றோர் பெயரிலும், அவருடைய வாழ்க்கைத் துணைவியார் மணியம்மாள் பெயரிலும் அறக்கட்டளைகளை வைத்திருந்தார். எந்த நிகழ்ச்சி வந்தாலும், ஆண்டுதோறும் தவறாமல் தொடர்புகொண்டு நன்கொடை வழங்குவார்.
அவை எங்களுடைய கழகத்திற்கு ஒரு வங்கியைப் போன்றவை. அந்த அளவுக்கு அவருடைய உழைப்பும், உணர்வும் இயக்கத்தோடு இணைந்திருந்தன.
அவருக்கு இந்த உணர்வை யார் ஊட்டியது? என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
நன்றி உணர்ச்சியோடு இயக்கத்திற்குத் தொடர்ந்து தொண்டு செய்து வருகிற குடும்பம!
நாம் நன்றியை எதிர்பார்த்துச் செயல்படுபவர்கள் அல்ல. ஆனால், இந்தக் குடும்பம் நன்றி உணர்ச்சியோடு இயக்கத்திற்குத் தொடர்ந்து தொண்டு செய்து வருகிறது.
அய்யா தருமராசன் அவர்கள் தன்னுடைய பிள்ளை களை எப்படியெல்லாம் வளர்த்தார் இந்தக் கொள்கை ரீதியாக என்பது மிகவும் முக்கியமானது.
கொள்கை அடிப்படையில் அவர்களுக்குக் கல்வி யைக் கொடுத்தார். அவர்கள் அனைவரும் நன்றாகப் படித்து, மருத்துவர்களாகவும் பல்வேறு துறைகளில் சிறந்தவர்களாகவும் உயர்ந்திருக்கிறார்கள்.
இதற்கு ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன்.
தமிழ்மணி அவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவராக வேண்டும் என்று விரும்பினார். அன்றைய காலத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தன.
அப்போது தந்தை பெரியார் அவர்கள் பரிந்துரைக் கடிதம் கொடுத்தார். அத்தகைய கடிதங்களை ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமி இருந்தால் அவரிடம் கொடுப்பார். அவருக்குப் பிறகு, நான் ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றேன். அவ்வளவு சீக்கிரத்தில் அய்யா அவர்கள், நேரிடையாகப் பரிந்துரைக் கடிதம் கொடுக்க மாட்டார்.
தந்தை பெரியார் கொடுத்த
பரிந்துரைக் கடிதம்!
பரிந்துரைக் கடிதம்!
பெரியார், யாருக்குப் பரிந்துரை செய்தார், யாரிடம் பேசினார், யாரைச் சந்தித்தார் என்பதையெல்லாம் அவர் வெளியே சொல்லிக்கொண்டிருக்க மாட்டார். உதவி தேவைப்படுபவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்துவிட்டு அமைதியாக இருப்பார்.
தருமராசன் அவர்கள் நேரிடையாக அய்யாவைச் சந்தித்துப் பரிந்துரைக் கடிதம் வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தில், ‘இவர்கள் மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவராக விரும்புகிறார்கள். சம்பந்தப்பட்ட வர்களிடம் தாங்கள் சொல்லி, இயன்ற உதவியைச் செய்யுங்கள்’ என்று பெரியார் அவர்கள் எழுதியிருந்தார்.
மிகுந்த மரியாதையோடு வரவேற்றார்கள்!
அந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு நான் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்தேன். பெரியார் அனுப்பியிருக்கிறார் என்று தெரிந்தவுடன், அவர்கள் மிகுந்த மரியாதையோடு வரவேற்றார்கள்.
அந்த ஆண்டில் மூன்று பேருக்குப் பரிந்துரை செய்யப்பட்டதில், இரண்டு பேருக்கு அந்த ஆண்டே வாய்ப்புக் கிடைத்தது. இன்னொருவருக்கு அடுத்த ஆண்டு வாய்ப்புக் கிடைத்தது. அவர்களில் தமிழ்மணி யும் ஒருவர்.
இப்படி மருத்துவக் கல்வி கற்க வாய்ப்புப் பெற்றவர்கள் நூற்றுக்கணக்கான பேர் இருக்கலாம். ஆனால், யாரும் செய்யாத ஒரு வியப்பான செயலைத் தமிழ்மணி செய்தார்.
தந்தை பெரியாரிடம், முதல் மாத ஊதியத்தை நன்கொடையாகக் கொடுத்தார் தமிழ்மணி!
அவர் படித்து முடித்து, அரசுப் பணியில் சேர்ந்து மருத்துவரானார். முதல் மாத ஊதியத்தைப் பெற்றவுடன், அந்த ஊதியத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய தந்தை தருமராசன் அவர்களுடன் பெரியார் மாளிகைக்கு வந்தார். அங்கே தந்தை பெரியார் அவர்களையும், அன்னை மணியம்மையார் அவர்களையும் சந்தித்தார்.
மருத்துவக் கல்லூரியில் சேர தனக்கு உதவி செய்த பெரியாருக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில், தன்னுடைய முதல் மாத ஊதியத்தை இயக்கத்திற்கு நன்கொடையாக அவரிடம் வழங்கினார்.
இந்தக் குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு!
அதேபோல, உதவி பெற்றவர்கள் அதை மறக்காமல் நன்றியோடு வாழ வேண்டும் என்பதற்கு இந்தக் குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு.
இது சாதாரணமான நிகழ்வு அல்ல.
(தொடரும்)
