மதுரை: ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாட்டில் பழைய வரலாற்றை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

13 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

4 1946: மதுரை திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலத்தில் இரட்டைக் குதிரை சாரட்டில் தலைவர் பெரியார், தளபதி அண்ணா

அமர்ந்து வர, 20,000 கருப்புச் சட்டைத் தொண்டர்கள் வரிசை வரிசையாக அணிவகுத்து வந்தனர்!

4 ஊர்வலக்காட்சி மாற்றுக் கட்சித் தோழர்கள் மனதையும் கலக்கியது; மக்கள் காட்டிய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் கண்டு பொறாமை கொண்டு, மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்தனர், தோழர்களை ஆங்காங்கே தாக்கினர்!

சோதனைகளையெல்லாம் சாதனைகளாக்கி

வெற்றி பெற்ற இயக்கம் திராவிடர் கழகம்!

 

Contents

மதுரை, செப்.12   1946 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலத்தில் இரட்டைக் குதிரை சாரட்டில் தலைவர் பெரியார், தளபதி அண்ணாதுரை அமர்ந்து வர,  20,000 கருப்புச் சட்டைத் தொண்டர்கள் வரிசை வரிசையாக அணிவகுத்து நடந்தனர். பலர் பின் தொடர்ந்து வர கூட்டம் முன்னிலும் இரு மடங்கு அதிகரித்து விட்டது. ஊர்வலம் சுமார் 6 மைல் தூரத்திற்கு மேல் சென்று மாநாட்டுக் கொட்டகையை அடைந்தது. ஊர்வலக்காட்சி மாற்றுக் கட்சித் தோழர்கள் மனதையும் கலக்கியது; மக்கள் காட்டிய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் கண்டு பொறாமை கொண்டனர். மறுநாள் இவ்வெ திரிகளால் நிகழ்த்தப்பட்ட கலவரத்திற்கும், அட்டூ ழியத்திற்கும், நாசவேலைக்கும் இப்பொறாமைக் குணமே காரணமெனலாம். ஓர் இயக்கத்துக்கு ஏற்பட்ட சோதனை, எப்படி அந்த சோதனை சாதனையாக ஆக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு எப்படி வெற்றி வீரராக தந்தை பெரியார் இயக்கம் இருக்கிறது என்பதை எல்லாம் மக்களுக்கு, வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வதற்காகத்தான் 1946 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவூட்டினேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

மதுரையில் ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’
80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு!

்கடந்த 21.08.2026 அன்று மாலை 5.30 மணிக்கு, மதுரை மாநகர் – புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா திறந்தவெளி மாநாடு’’ மதுரை ஓபுளா படித்துறை அருகில் நடைபெற்றது. சுயமரியாதைச் சுடரொளிகளான கு.துரைராஜ், பே.தேவசகாயம், அன்னத்தாயம்மாள், வழக்குரைஞர்கள் சி.மகேந்திரன், மு.சித்தார்த்தன் ஆகியோர் நினைவாக மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

அடுத்தபடியாக இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி,  ‘குடிஅரசு’ பத்திரிகை – 1946, மாநாடு முடிந்து அடுத்த வாரம் எழுதுகிறார்  தந்தை பெரியார் அவர்கள். அப்பொழுது என்ன நடந்தது என்று வரலாறு அதில்தான் பதிவாகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில்,

‘குடிஅரசு’ தலையங்கம்

மே 11, 12 தேதிகளில் திராவிடர் கழக கருப்புச் சட்டைப் படை மாநாடு ஆடம்பரத்தோடும், ஆரவா ரத்தோடும், உற்சாகத்தோடும் நடைபெற்ற நடவடிக்கை விவரம்.

10.5.1946 காலையிலிருந்தே கருப்புச் சட்டைப் படை தொண்டர்களும், கழகத் தோழர்களும், பிறரும் மாநாட்டிற்காக குடும்பத்தோடு பல ஜில்லாக்களிலிருந்து ஆயிர்க்கணக்கில் வந்து குவிந்த வண்ணமிருந்தனர்.

மதுரை வைகையாற்றில் பாலத்தின் கீழ்ப்புறத்தில் பிரம்மாண்டமான பந்தல் 200×200 அடி அளவில் போடப்பட்டிருந்தது. இதுவல்லாமல் கடைகளுக்காக சிலவும், பெண்கள் தங்க தனிவிடுதிக்காக ஓர் பெரிய பந்தலும் அமைக்கப்பட்டிருந்தன. மாநாட்டுப் பந்தலின் எதிர்ப்புற தலைப்பில் பெரியார் உருவம் பொறிக்கப்பட்டும் மிகப் பெரிய திராவிடர் கொடி ஒன்று கம்பீரமாக பறந்து கொண்டிருந்தது. நக ரெங்கும், சாலைகளிலுள்ள உயர மரங்கள்மீதும், கடைகளிலும், வீடுகளிலும் திராவிடர் கழகக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. மாநாட்டுப் பந்தலுக்குள் 40×60 அடி அளவில் உயரமான மேடை அமைக்கப்பட்டு தலைவர்கள் அமரும் இடத்திற்குப்பின் இயக்கக் கொடியின் சின்னம் 40×30 அடி அளவு கருப்புத் துணியின் மத்தியில் சிவப்பு வட்டம் பொறிக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தது. பந்தல் முழுமையும் இயக்க லட்சிய சொற்கள் நிறைந்த அட்டைகள் பந்தல் கால் ஒவ்வொன்றிலும் கட்டப்பட்டிருந்தன. சிறு அளவில் தயாரிக்கப்பட்ட கழகக்கொடி தோரணங்கள் பந்தலை அலங்கரித்தன.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள்
தலைவர்களை வரவேற்றனர்!

10.5.1946 இரவும், 11.5.1946 காலை முதல் வண்டியிலும் தோழர்கள் இரா.நெடுஞ்செழியன், தி.பொ.வேதாசலம், பழையகோட்டை இளைய பட்டக்காரர்
என்.அர்ச்சுனன், க.அன்பழகன், சனார்த்தனம் முதலியோரும் மற்ற பிரதிநிதிகளும் வந்துவிட்டனர். 11.5.1946 காலை 8.15 மணிக்கு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வண்டியில், மாநாட்டுத் தலைவர் பெரியார், திறப்பாளர் சி.என்.அண்ணாதுரை, எஸ்.ஆர்.காந்தி அம்மையார், ஆ.திராவிடமணி முதலியோர் வந்தனர். இரயில்வே பிளாட்பாரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நின்று தலைவர்களை வரவேற்றனர்.

ஸ்டேஷனுக்கு வெளியே மங்கம்மாள் சத்திரத்திற்கு எதிரில் 20000 கருப்புச் சட்டை தொண்டர்கள் வட்ட மாக அணிவகுத்து நின்றனர். தோழர்கள் எம்.ஆர்.ராதா, பாவலர் பாலசுந்தரம் இருவரும் இராணுவ கருப்புச் சட்டை உடையில் குதிரைகள் மீது அமர்ந்து அணி வகுப்பை நடத்திக் கொண்டிருந்தனர். தொண்டர்கள் பலர் கழகக்கொடிகளையும், இயக்க லட்சிய சொற்கள் பொறித்த அட்டைகளையும் கையில் கொண்டிருந்தனர். தொண்டர்கள் யாவரும் பெரியார் வாழ்க, திராவிட நாடு திராவிடருக்கே என்ற வாழ்த்தொலிகளை முழங்கிக் கொண்டு ஊர்வலம் புறப்பட ஆயத்தமாகி பெரியார் வருகையை எதிர்பார்த்திருந்தனர்.

20,000 கருப்புச் சட்டைத் தொண்டர்கள் வரிசை வரிசையாக அணிவகுத்து நடந்தனர்

பெரியார் அவர்கள் வந்தவுடன் ஊர்வலம் ஆரம்பமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இரட்டைக் குதிரை சாரட்டில் தலைவர் பெரியார், தளபதி அண்ணாதுரை, தோழர்கள் பழையகோட்டை இளையபட்டக்காரர் என்.அர்ச்சுனன், எஸ்.ஆர்.காந்தி அம்மையார், இரா.நெடுஞ்செழியன் முதலி யோர் அமர்ந்திருந்தனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண் தொண்டர்கள் உள்பட 20,000 கருப்புச் சட்டைத் தொண்டர்கள் வரிசை வரிசையாக அணிவகுத்து நடந்தனர். குதிரைமீது அமர்ந்திருந்த இரு தளபதிகளும் படைவரிசையின் இருபுறமும் சென்றனர்.

ஊர்வலம் சுமார் 6 மைல்
தூரத்திற்கு மேல் சென்றது!

தோழர்கள் சம்பத், அன்பழகன், இளம்வழுதி மற்றும் பல ஊர் தொண்டர் படைத் தளபதிகள் படைவகுப்பை ஒழுங்குபடுத்தி நடத்திச் சென்றனர். தொண்டர்கள் அணிவகுப்பிற்குப் பின்னால் 20,000 மக்களுக்கு மேல் குழுமி ஊர்வலத்தோடு வந்தனர். தொண்டர்களும், பொது மக்களும், பெரியார் வாழ்க, திராவிட நாடு திராவிடருக்கே என்ற வெற்றி ஒலிகளை ஊதுகுழாய் மூலம் ஒலித்துச் சென்றனர். வழிநெடுக இடையிடையே ஊர்வலத்தை நிறுத்தி பல தோழர்கள் தலைவர்களுக்கு மாலையணிவித்து மகிழ்ந்தனர். பல முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலம் சுமார் 6 மைல் தூரத்திற்கு மேல் சென்று மாநாட்டுக் கொட்டகையை அடைந்தது.

தெருக்களின் இருபுறமும் மக்கள் ஏராளமாக குழுமியிருந்து ஊர்வலம் செல்லும் காட்சியைக் கண்டு களித்தனர். பலர் பின் தொடர்ந்து வர கூட்டம் முன்னிலும் இரு மடங்கு அதிகரித்து விட்டது. ஊர்வலக்காட்சி மாற்றுக் கட்சித் தோழர்கள் மனதைக் கலக்கியது; மக்கள் காட்டிய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் கண்டு பொறாமை கொண்டனர். மறுநாள் இவ்வெதிரிகளால் நிகழ்த்தப்பட்ட கலவரத்திற்கும், அட்டுழியத்திற்கும், நாசவேலைக்கும் இப்பொறாமைக் குணமே காரண மெனலாம்.

ஊர்வலம் வந்து சேருவதற்கு முன்பே பதினாயிரம் மக்களுக்குமேல் பந்தலில் குழுமியிருந்தனர். பந்தலுக்கு உள்ளும் வெளியே நான்குபுறமும் கேட்கும்படி நல்ல முறையில் ஒலிபெருக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல தோழர்கள் இயக்கப்பாடல்கள் பாடி மக்களை மகிழ்வித்த வண்ணமிருந்தனர்.

மக்கள் பெரும் ஆரவாரம் செய்யவும், வெற்றி ஒலிகள் இடியோசைபோல் முழங்கவும், தலைவர்கள் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைந்து மேடையில் அமர்ந்தனர். இசைக்குப்பின் மாநாடு ஒரு மணிக்கு தொடங்கியது.

பழையகோட்டை இளவல் இளையபட்டக்காரர் தோழர் என்.அர்ச்சுனன் அவர்கள் வீர உரையாற்றி கொடியேற்றி வைத்தார்கள்.

தளபதி அண்ணாதுரை
மாநாட்டைத் திறந்து வைத்தார்

தளபதி அண்ணாதுரை அவர்கள் அரிய சொற்பொழி வாற்றி மாநாட்டை திறந்து வைத்தார்கள். பிற கட்சிக்காரர்கள் தொடமுடியாதவை என்று தள்ளப்பட்ட, ஆனால் மக்களுக்கு ஜீவநாடியான சமூக சீர்திருத்த பிரச்சினைகளை நமது கழகம் கவனிக்கிறதென்றும், அவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் தொண்டாற்றவே கருப்புச் சட்டைப்படை அமைப் பக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்கள். இடைவேளை உணவிற்காக மாநாடு கலைந்து 3 மணிக்கு தொடங்கியது.

தோழர் பி.செங்குட்டுவன் அவர்கள் தம் வரவேற்புரையை நிகழ்த்தி பெரியார் அவர்களைத் தலைமை வகிக்கும்படி முன்மொழிந்தார். தோழர் அருப்புக்கோட்டை எஸ்.எஸ். பழனிச்சாமி, இரா.நெடுஞ்செழியன், காஞ்சி கலியாயணசுந்தரம், பெத்தாம்பாளையம் பழனிச்சாமி ஏ.பி. ஜனார்த்தனம் முதலியோர் ஆதரித்துப் பேசியபின் பெரியார் அவர்கள் மக்களின் பெரும் ஆரவாரத்துக்கிடையே எழுந்து தலைமையுரையை நிகத்தினார்கள். தொண்டர்களின் கடமையை விளக்கி, தலைவரின் கட்டுப்பாட்டிற்கு அடங்கி நடக்கவேண்டிய அவசியத்தை குறித்து விளக்கமாகப் பேசி, திராவிடர் கழகத்தின் எதிர்கால வேலையையும், திட்டங்களையும் பற்றி விரிவாகப் பேசினார்கள். தோழியர் எஸ்.ஆர்.காந்தி, திராவிட நாடு தனித்திருக்க வேண்டிய அவசியத்தை விளக்கி அரிய சொற்பொழிவாற்றி திராவிட நாட்டுப் படத்தைத் திறந்து வைத்தார்.

தோழர் சம்பத் அவர்கள் கருப்புச் சட்டைப்படை அமைக்கப்பட்டதின் நோக்கங்களை விளக்கிப் பேசியபின், தளபதி அண்ணாதுரை அவர்கள் திரா விட நாட்டுப் பிரிவினை திட்டத்தை விளக்கி நீண்ட நேரம் அரிய சொற்பொழிவாற்றினார். இதோடு இரவு உணவிற்காக மாநாடு கலைந்தது.

பொன்மலை திராவிட நடிகர் கழகத்தாரால் 11.5.1946 இரவு “அவன் பித்தனா” என்ற நாடகம் தோழர் தி.பொ.வேதாசலம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பெரியார் தலைமையில் தொடங்கிய மாநாடு!

12.5.1946 காலை 9.30 மணிக்கு மாநாடு மீண்டும் பெரியார் தலைமையில் தொடங்கியது. தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் இந்தி எதிர்ப்பில் சிறைசென்று உயிர்நீத்த தமிழர் மணிகள் தாலமுத்து, நடராசன் இவர்கள் தொண்டையும், தியாகத்தையும், விளக்கி ஓர் உணர்ச்சிமிக்க சொற்பொழிவாற்றினார். தோழர் அன்பழகன் அவர்கள் கருப்புச் சட்டைப்படையின் அவசியத்தை விளக்கிப் பேசினார். பின்னர் தோழர் அழகிரிசாமி அவர்கள் சுயமரியாதை இயக்கத் தத்துவத்தை விளக்கி அரிய சொற்பொழிவாற்றினார். இதற்கிடையே நகருக்குள் குழப்பம் நடந்து கொண்டிருப்பதாவும் கருப்புச் சட்டைத் தொண்டர்களை காலிகள் தாக்கி துண்புறுத்துவதாகவும் அரைகுறை செய்தி நகரிலிருந்து வந்து கொண்டிருந்தது.

இதோடு கருப்புச்சேலை உடுத்திக் கொண்டு தெருவில் வந்துகொண்டிருந்த திராவிடர்த் தாய்மார்க ளையெல்லாம் காங்கிரஸ் காலிகள் அவதூறாகப் பேசுவதாகவும், பல இடங்களில் பறந்து கொண்டிருந்த திராவிடர் கழகக் கொடிகளையெல்லாம் இறக்கி காங்கிரஸ்காரர்கள் கொளுத்துவதாகவும் செய்தி வந்தது.

தந்தை பெரியாரின் அறிவுரையும்
தோழர்களின் அமைதியும்!

இவற்றைக் கேட்டு ஆத்திரங்கொண்டு பந்த லுக்கு வெளியே அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்த தொண்டர்களுள் சுமார் 100 பேர் வரை புறப்பட்டு ஊருக்குள் இருக்கும் கருப்புச் சட்டைத் தொண்டர்களை ஆபத்தில்லாமல் கொண்டு வருவதென சென்றுவிட்டனர். இது தெரிந்ததும் பெரியார் அவர்கள் நம் தொண்டர்கள் யாரேனும் அடிபட்டிருந்தால் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமே தவிர, எதிர்க்கக் கூடாது என்றும், ஆத்திரப்பட்டுச் சென்றவர்களும் உடனே திரும்பி விடவேண்டுமென்றும் பேசவே. மேல்கொண்டு தொண்டர்கள் யாரும் போகவில்லை. எல்லோரும் மாநாட்டில் அமைதியாக இருந்தனர்.

நகருக்குள் சென்ற தொண்டர்களையும் காலிகள் தாக்கவே இவர்களும் திருப்பித் தாக்க இருதரப்பில் சில காயமுற்றதாகத் தெரிகிறது. அக்கிரமமாக தாக்கிய காலிகளை அடக்காது போலீஸ்காரர்கள், சென்றிருந்த கருப்புச்சட்டைத் தொண்டர்கள் அனைவரையும் ஓர் பங்களாவிற்குள் பூட்டி வைத்துவிட்டனர். இதனால் காலிகளுக்கு இன்னும் இடமாகி மாநாடு நடக்கும் இடத்திற்கும் போவோம் என்ற துணிவு ஏற்பட்டு விட்டது.

போலீசார் அடைத்து வைக்கப்பட்டிருந்த தொண்டர்களை அழைத்து வர குதிரை வண்டியில் சென்ற மத்திய திராவிடர் கழகச் செயலாளர் தோழர் ஆ.திராவிடமணி அவர்களை காலிகள் வழிமறித்து பலமாகத் தாக்கினர். சில முஸ்லிம் தோழர்கள் உதவியால் தோழர் திராவிடமணி அவர்கள் சிறிதுநேரம் அவர்கள் வீட்டில் இருந்து பின்னர் திரும்பி வந்தார்.

கருப்புச் சேலை உடுத்தி இருந்த தாய்மார்களையெல்லாம் அவதூறாகப் பேசினர்!

முன்னாள் நடந்த மாபெரும் ஊர்வலத்தையும், வெற்றிகரமாக மாநாடு நடைபெறுவதையும் கண்ட எதிரிகள் எப்படியேனும் அடுத்தநாள் கலவரம் செய்து மாநாட்டை கலைப்பதென்ற முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. முதல் நாள் இரவு ஆங்காங்கு நகருக்குள் காங்கிரஸ்காரர்கள் கூடி அதற்கான சதியாலோசனை நடத்தி, வேண்டிய ஏற்பாடுகளையும் செய்ததாகத் தெரிகிறது. மறுநாள் கடையடைப்பு இருந்தாலும் காங்கிரஸ் கூட்டங்களும், ஓட்டல் தொழிலாளர் கூட்டமும் நடைபெற ஏற்பாடு செய்திருந்தாலும் காலித்தனத்திற்கு அதிக சாதகமாக இருக்கும் என எதிரிகள் கருதி காலிகளுக்கு எல்லாம் கூலி கொடுத்து குடித்துவிட்டு வரச்சொல்லியதாகத் தெரிகிறது. இவற்றையெல்லாம் உண்மையாக்கும் முறையிலே மறுநாள் காங்கிரஸ்காரர்களின் போக்கும், நடத்தையும் இருந்தது. காலிகளோடு சேர்ந்து கொண்டு காங்கிரஸ்காரர்களும் மாநாட்டிற்கு வந்து தெருவில் சென்று கொண்டிருந்த கருப்புச் சேலை உடுத்தி இருந்த தாய்மார்களையெல்லாம் அவதூறாகப் பேசினர். திராவிடர் கழகக் கொடிகளைக் கொளுத்தும் வேலையிலும், காலிகளோடு இவர்களும் கலந்திருந்தனர், காலிகள் தொண்டர்களைத் தாக்கும்பொழுதும் காங்கிரஸ்காரர்கள் உடனிருந்து தாக்கப்பட்டனர். ‘ஜெயஹிந்த்’, ‘வந்தேமாதரம்’, ‘கோயிலில் பெண்களை அவமானப்படுத்தினர், காங்கிரஸ் கொடியை கருப்புச் சட்டைப் படையினர் கொளுத்தி விட்டனர். அதனால் ஒன்று திரண்டு அவர்களை எதிர்க்க வேண்டும்” என்று காங்கிரஸ்காரர்களே ஊரெங்கும் பறையடித்து அன்று காலையிலே பிரச்சாரம் செய்ததாகவும் செய்தி கிடைத்தது. இவ்வளவு காரியமும் செய்துவிட்டு, கோயிலில் பெண்களை அவதூறாகக் கருப்புச் சட்டைப் படையினர் பேசியதாலேயே கலகம் ஏற்பட்டதென காங்கிரஸ்காரர்கள் கட்டுப்பாடாக வெளியே பேசியிருக்கின்றனர்.

உண்மைக்கு மாறாக எழுதிய பத்திரிகைகள்!

தேசிய பத்திரிகைகளும் காங்கிரஸ்காரர்களின் சதி யைப் பற்றியே அவர்களின் தூண்டுதலால் நடைபெற்ற அட்டுழியங்களைப் பற்றியோ ஒரு வார்த்தையும் சொல்லாமல், போலீசுக்குச் சென்ற பெண்களை அவதூறாகப் பேசியதால் கருப்புச் சட்டைப் படையினர் மீது பொதுமக்கள் ஆத்திரங்கொண்டனர். அதனால் அவர்களை கண்ட இடத்திலெல்லாம் விரட்டியடித்தனர் என்று எழுதினர். அசோசியட் பிரஸ் நிருபராலும் உண்மைக்கு மாறாக காங்கிரஸ்காரர்களின் பித்தலாட்டப் பேச்சை செய்தியாக அனுப்பப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகத்தைப் பற்றிக் கனவில் கூட நினைத்தறியாத அகில இந்திய ரேடியோக்காரராலும் திராவிடர் கழகத்தின் மீது திடீரென்று கவலை ஏற்பட்டதுபோல் பார்ப்பனர்களும், காங்கிரஸ்காரர்களும் சொன்ன பித்தலாட்டப் பேச்சே ஒலிபரப்பப்பட்டது.

போலீசின் கண் முன்பே
நாசவேலைகள் நடைபெற்றன!

மதுரை நகர் தெருக்களில் கருப்பு உடையோடு சென்ற தாய்மார்களை அவதூறாகப் பேசியதோடும், தனித்து வந்து கொண்டிருந்த தொண்டர்களை, ஆங்காங்கு தாக்கி, அவர்களிடமிருந்த கருப்புச் சட்டை, பணம் முதலியவற்றைக் கொள்ளையடித்ததோடும் இல்லாமல், அநேக இடங்களில் திராவிடர் கழகக் கொடிகளை இறக்கிக் கொளுத்தினர். மாநாட்டுப் பந்தலை நெருங்குவதற்கு  முன்பே தனியாக போடப்பட்டிருந்த சாப்பாட்டுப் பந்தல், கடைப்பந்தல் இவற்றையெல்லாம் கொளுத்தினர். போலீசின் கண் முன்பே இத்தகைய  நாசவேலை நடைபெற்றது. போலீஸ், ரிசர்வ் படை இவ்வளவும் இருந்துகொண்டே,  முதலில் ஆற்றங்கரை மீதிருந்த காலிகளை வரவர மாநாட்டுப் பந்தலுக்கு அருகே வரும்படி செய்துவிட்டனர். தாங்கள் பார்த்துக் கொள்வதாகக் கூறி, பந்தலுக்குக் காவலாக இருந்த தொண்டர்களையும் போலீஸ்காரர்கள் அனுப்பிவிட்டனர். தொண்டர்கள் வெளியேறியதால் கால் மணிநேரத்திற்கு எல்லாம் பெரிய பந்தலுக்கும் நெருப்பு வைக்கப்பட்டது. போலீசார் அதையும் தடுக்கமுடியவில்லை.

இறுதியாக எஞ்சிநின்ற இடம் தலைவர்களும், தொண்டர்களும் இருந்த மாநாட்டுப் பந்தலுக்கருகிலிருந்த பங்களாதான். அங்கும் காலிகள் நெருங்க ஆரம்பித்தனர். காலிகளை எதிர்த்து தாக்காதிருக்கும்படி முன்போலவே போலீஸ் அதிகாரிகள் கருப்புச்சட்டைத் தொண்டர்களை கேட்டுக் கொண்டபோதும், தொண்டர்கள் இம்முறை எதிர்த்துத் தாக்குவதே என துடித்துக் கொண்டிருந்தனர். பெரியார், தொண்டர்களை அமைதியாக இருக்க வேண்டுமென்றும், போலீஸ் அதிகாரிகள் இஷ்டம் போலவே காரியம் நடக்கட்டும் என்றும் சொல்லிவிடவே தொண்டர்கள் கொதிப்பை அடக்கிக் கொண்டு எதற்கும் தயாராக இருந்தது. மாலை 7 மணி வரையில் காலிகள் தொல்லை இருந்து கொண்டே இருந்தது.

இரவு 7 மணி முதல் ஊரடங்குச் சட்டம், 144 தடை உத்தரவு!

போலீசார் பலமுறை சுட்டும் காலிகளை துரத்திக் கொண்டிருந்தனர்.  டி.அய்.ஜி., டி.எஸ்.பி., டிஸ்டிரிக்ட் மாஜிஸ்ட்ரேட், சிட்டி மாஜிஸ்ட்ரேட் முதலிய அதிகாரிகள் பெரியாரிடம் வந்து தொண்டர்களையும், பிறரையும் அவரவர்கள் ஊருக்கு அனுப்புவது பற்றிக் கலந்தாலோசித்துவிட்டு, இரவு 7 மணி முதல் ஊரடங்குச் சட்டமும், 144 தடையுத்திரவும் போடப்பட்டிருப்பதாக கூறிச் சென்றனர். 7.30 மணி முதல் பஸ்களில் பங்களாவிடமிருந்த அவ்வளவு பேரையும் வெளி ஸ்டேஷன்களுக்கு போலீஸ் ஏற்பாட்டின்படியே கொண்டு போய்ச் சேர்த்தனர். டவுனுக்குள் போலீசார் அடைத்து வைத்திருந்த சுமார் 120 தொண்டர்களையும் மறுநாள் பகல் 12 மணிக்கு தான் கொண்டுவந்து விட்டதாகத் தெரிகிறது.

கருப்புச்சட்டைப் படையினரை ஏற்றிச் சென்ற பஸ்களை எல்லாம் கல்லாலடித்திருக்கிறார்கள்.

வெளியூர்களில் இருந்து வந்த பல காலிகளால் கொள்ளையடிக்கப்பட்டதால் பிரயாணச் செலவுக்குக் கூட பணம் இல்லாமல் அல்லலுற்றனர்.

ஆரம்ப முதல் கடைசி வரையில் இக்கலவரத்திலும், காலித்தனமான கொடூரச் செயல்களிலும், பொது ஜனங்களோ சிறிதாவது நாணயமுள்ளவர்களோ ஒருவரும் கலந்து கொள்ளவில்லை. பிடிப்பட்ட இரண்டொரு காலிகளை விசாரித்தபொழுது, தங்களுக்குக் கூலிக்கொடுத்தவர்களையும், ஏவிவிட்டவர்களையும் கூடச் சொன்னதாகத் தெரிகிறது. காலிகள் பந்தலைக் கொளுத்தியபொழுதும், கொடிகளைக் கொளுத்திய பொழுதும் வந்தேமாதரம், ‘காந்திக்கி ஜே’ எனக் கூச்சல்விட்டு தம்மை ஏவிவிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். தோழர் வைத்தியநாத அய்யரைக் கண்டவுடன் அவர் காலில் விழுந்து மரியாதை செய்து “கிரமமாக நடத்திவிட்டோம்” என்பதைக் காட்டிக் கொள்வது போலிருந்தது.

மதுரைச் சம்பவத்தைக் கண்ணுற்ற ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முன்னேற்பாட்டோடும், எவ்வளவு கூலி கொடுத்தும் காலித்தனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது விளங்காமற் போகாது.’’ (‘குடிஅரசு’, 18.5.1946).

சோதனைகள் எல்லாம் இன்றைக்குச் சாதனைகளாக மாற்றப்பட்டு இருப்பது எப்படி?

இந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களை ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்னாலே அழைத்துப் போனோம். அதைக் கவனமாக எண்ணிப் பாருங்கள். இந்த மதுரைக்கு என்ன சிறப்பு? திராவிட இயக்கம் எப்பேர்பட்ட காலகட்டங்களை எல்லாம் தாண்டி இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். ஓர் இயக்கத்துக்கு ஏற்பட்ட சோதனை, எப்படி அந்த சோதனை சாதனையாக ஆக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு எப்படி வெற்றி வீரராக தந்தை பெரியார் இயக்கம் இருக்கிறது என்பதை எல்லாம் மக்களுக்கு வருங்கால தலைமுறையினருக்கு உணர்த்த இது மிக முக்கியமாக எடுத்துக் காட்டப்பட வேண்டும்.

 

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *