காவல் நிலையத்திற்கு உள்ளேயும் மக்களுக்குப் பாதுகாப்பில்லை! கனிமொழி ராசாத்தி கருணாநிதி எம்.பி கண்டனம்

- Advertisement -

சென்னை, நவ.17- லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடிய அவரது உறவினர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

மதுரை அருகேயுள்ள செக்கானூரணி காவல் நிலையத்தில், ஏலக்காய் ஏற்றி வந்த தனது லாரி எரிந்துவிட்டதாக புகார் கொடுக்க வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் 14.11.2026 அன்று அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். தனது கணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, காப்பீடு பெறுவதற்கு குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அவரை துன்புறுத்தியிருக்கிறார்கள் எனவும் வழக்கை சிபிஅய்-க்கு மாற்ற வேண்டும் என்றும் அவரது மனைவி கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல்ராஜன், கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர். இந்த நிகழ்வு குறித்து சிபிசிஅய்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மேற்குறிப்பிட்ட மூவருக்கும் அழைப்பாணை அனுப்பியுள்ளனர். இதனிடையே பாலகிருஷ்ணன் உடற்கூராய்வு நடைபெற்ற நிலையில் அவரது உடலில் ரத்த காயங்கள், கழுத்து இறுக்கப்பட்டது, இதயம், மூளை, நுரையீரலில் வீக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாலகிருஷ்ணன் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று (16.11.2026) மதுரையில் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில்,

“மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலகிருஷ்ணன் உடற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு காவல் நிலையத்திற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை உள்ளும் பாதுகாப்பில்லை என கொடூர ஆட்சி நடத்துபவர்கள் பாலகிருஷ்ணன் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடிய அவரது உறவினர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் தவெக அரசு தனது அராஜகத்தை நிறுத்த வேண்டும். போராடியவர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *