இலங்கை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், பல நாடுகளிலும் போராடி வந்தவருமான தோழர் சிவாஜிலிங்கம் (வயது 69) அவர்கள் உடல்நலன் குன்றி பருத்தித் துறையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு (14.11.2026) காலமானார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
டெலோ போராளிக் குழுவில் இருந்து, பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயலாற்றியவர். இலங்கை இனவழிப்பு நடைபெற்ற காலத்தில் அதைத் தடுப்பதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொள்பவர். தமிழ்நாடு வரும் காலங்களில் நம்மைச் சந்தித்து ஆலோசிக்கக் கூடியவர். 2024-இல் யாழ்ப்பாணத்திற்கு நாம் சென்றிருந்த போதும், அமிர்தலிங்கனார் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்றுத் தன் உணர்வை வெளிப்படுத்தியவர்.
அவரது மறைவு ஈழத் தமிழர் நலனுக்குப் போராடும் நம்மைப் போன்றோருக்கு முக்கியமான இழப்பு ஆகும். அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் ரீதியாக அவருடைய ஈழத் தமிழர் உரிமை மீட்புப் பயணத்தில் உடன் பங்கேற்ற ஈழத் தமிழர்கள், உலகத் தமிழர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
