தமிழ்நாடு அரசுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்!

- Advertisement -

குரியன் ஜோசப் தலைமையிலான குழுவுக்கு ஆயிரம் பாராட்டுகள்!
மறுபடியும் இக்குழுவை கொண்டுவர த.வெ.க. அரசு மறுபரிசீலனை செய்க!

திராவிடர் கழகம்

சென்னை, நவ.13 மாநில உரிமை களைப் பாதுகாக்கவும், ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகள் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் கட்டமைப்புகளை மறு சீரமைக்கவும், தி.மு.க. அரசு அமைத்த மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழுவை, த.வெ.க. அரசு கலைத்து உத்தரவிட்டுள்ளது குறித்து நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கத்தில், ‘‘மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்ட குழுவுக்கு ஆயிரம் பாராட்டுகள்’’ என்றும், “ஒன்றிய – மாநில அரசுகள் தடுமாறுகிற போது, அதற்கு வழி காட்டுகிற கலங்கரை விளக்கமாக அந்தக் குழுவின் அறிக்கை இருக்கிறது’’ என்றும், அதை மறுபடியும் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கோரிக்கை விடுத்து உரையாற்றினார்.

 சிறப்புக் கருத்தரங்கம்

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (12.11.2026) மாலை 6.30 மணிக்கு, தி.மு.க. அரசு அமைத்த, ‘‘ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலை குழுவைக் கலைத்தது சரிதானா? – மாநில உரிமைகளை அடகு வைப்பதா?’’ எனும் தலைப்பில், ஒரு சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவரும் திராவிடர் கழகச் செயலவைத் தலைவருமான வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தமிழ்நாடு மூதறிஞர் குழு த் தலைவர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் தலைமையேற்று உரையாற்றினார். அதைத் தொடர்ந்து,  சிறப்புரையாற்றிய பெரு மக்களுக்கு தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்துப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. பின்னர், திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், தி.மு.க.சட்டத் துறை இணைச் செயலாளர் வழக்குரைஞர் பரந்தாமன், தமிழ்நாடு திட்டக் குழு மேனாள் துணைத் தலைவர்  பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

திராவிடக் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், பெரியாரிய ஆய்வாளர் பொ.நாகராஜன், திராவிட இயக்க எழுத்தாளர் வாலாசா வல்லவன், புலவர் பா.வெற்றியழகன், புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் தலைவர் செல்வ மீனாட்சி சுந்தரம், கவிச்சிங்கம் கண்மதியன், வெற்றிச் செல்வி பூங்குன்றன், பெரியார் செல்வி,  நன்னன்குடி வேண்மாள், அவ்வை,  பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தின் இயக்குநர் முனைவர் அதிரடி க.அன்பழகன், திராவிடர் கழக தொழில்நுட்ப அணி  மாநிலச் செயலாளர் வி.சி.வில்வம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மேனாள் முதல்வர் ராஜசேகரன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,  பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம், தேவநர்மதா, புலவர் பா.வீரமணி,  விடுதலை அச்சக மேலாளர் சரவணன், வா.மு.சே.திருவள்ளுவன்,  சாமி.சமதர்மம், ஆனந்தி சமதர்மம், பெரியார் பெருந்தொண்டர்கள் தங்கமணி தனலட்சுமி, பெரியார் மாணாக்கன், அயனாவரம் துரைராஜ், தோழர்கள் தமிழமுதன், யாழ்திலீபன், பூவை தமிழ்ச்செல்வன், வஜ்ரவேல், வழக்குரைஞர் திருப்பூர் பாண்டியன், விழிகள் பதிப்பகம் வேணுகோபால், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை அன்புச்சென்வன், பகுத்தறிவாளர் கழக ஆவடி மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், தென்சென்னை பகுத்தறிவாளர் கழகத் தோழர் மாணிக்கம், பெரியார் பெருந்தொண்டர் ராஜப்பா உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திராவிடர் கழகம்

கழகத் தலைவர்
ஆசிரியர் சிறப்புரை

நிறைவாக கழகத்தின் தலைவர் ஆசிரியர் இரவு 8 மணிக்கு உரை யாற்றினார்.

அவர் தமது உரையை, “கடலில் திசை தெரியாமல் தடுமாறுகின்ற கலங்களுக்கு கலங்கரை விளக்கம் எப்படி வழிகாட்டுகிறதோ, அதுபோலத்தான், திராவிட மாடல் நாயகர் அமைத்துள்ள, மேனாள் நீதியரசர் ஜோசப் குரியன் தலைமையிலான உயர்நிலைக்குழு ஆகும்!” என்று பலத்த கைதட்டல்களுடன் தொடங்கினார். அப்படிப்பட்ட ஒரு குழுவை அமைத்த திராவிட மாடல் முதலமைச்சரை, “இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்” என்று வள்ளுவர் சொன்னதை எடுத்தாண்டு பாராட்டினார். அதைத் தொடர்ந்து, இப்படிப்பட்ட உயர்நிலைக் குழுக்களின் வரலாற்றைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்ட எண்ணிய அவர், “சர்க்காரியா கமிசனாக இருந்தாலும் சரி, பூஞ்ச்சி கமிசனாக இருந்தாலும் சரி, அவை நிலைமைகளை ஆராய்ந்ததே தவிர, தீர்வுகளைச் சொல்லவில்லை. ஆனால், மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான இக்குழு, எல்லா தளங்களிலும் ஆய்வு செய்து, என்னென்ன பிரச்சினைகள்? அதற்கு என்னென்ன தீர்வுகள் என்பதையும் வகுத்துள்ளது” என்று முதலிரண்டு கமிசன்களைவிட இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தினார். மேலும் அவர், “அதற்காகவே இக்குழுவுக்கு ஆயிரம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அறிவித்ததுடன், அவரே எழுந்து நின்றபடி, “அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டுகிறேன்” என்று குறிப்பிடுவதற்குள், அவர் எழும் போதே அனைவரும் எழுந்து நின்று பலத்த கையொலி செய்து, மேனாள் நீதியரசர் குரியன் தலைமையிலனான குழுவினருக்கு மரியாதை செய்தனர்.

த.வெ.க. அரசு இரட்டை வேடம் போடக்கூடாது!

கைதட்டல் ஓய்ந்ததும், “பா.ஜ.க.வைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் இக்குழுவைக் கலைத்ததை ஏற்கவில்லை” என்பதை நினைவுபடுத்திவிட்டு, த.வெ.க. அரசு, His master’s voice ஆக இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

எந்தக்கொம்பனாலும் இந்த இயக்கத்தை
அசைத்துக்கூடப் பார்க்க முடியாது!

அதையொட்டியே, “இதுவரை திராவிடர் கழகம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலைப் பெறாமல் நாங்கள் விட்டதில்லை. இதை மறுபடியும் கொண்டு வருவதற்கு நாங்கள் என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்போம்” என்று அதிரடியாக அறிவித்ததும், கைதட்டல்களில் பொறி பறந்தது. அத்துடன் விடவில்லை அவர், ”ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணித்த ஆச்சாரியாரியாரையே, Hindi Never; English Ever என்று பேசவைத்த இயக்கம் இது. ஆகவே, எந்தக்கொம்பனாலும் இந்த இயக்கத்தை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது” என்று உரத்தக் குரலில் அறிவித்து, பார்வையாளர்களையும் அதே உணர்வுக்காளாக்கி, ”இந்தப்பிரச்சினை குறித்து அனைவரும் பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்றும் கூறி, “மாநில உரிமைகளில் உடன்பாடு என்று சொல்கிற த.வெ.க. அரசு இரட்டை வேடம் போடக்கூடாது” என்றும், ‘‘காலையில் எடுத்த முடிவுகளை மாலையில் மாற்றுவது போல, கலைக்கப்பட்ட இக்குழுவையும் மறுபடியும் கொண்டுவர மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றும், ‘‘இது த.வெ.க.அரசுக்கும் வலிமை சேர்க்கிற அறிக்கையல்லவா?” என்றும் அடுக்கிக்கொண்டே போக, பார்வையாளர்கள் அரங்கமே அதிரும் வண்ணம் கைகளைத் தட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து, பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநர் திருமகள் அவர்களின் நினைவு நாளையொட்டி, பூவிருந்தவல்லி பெரியார் மாணாக்கன் குடும்பத்தினரின் நன்றிக் காணிக்கையாகச் சந்தாக்கள் நன்கொடையாகச் சேர்ந்து ரூ.4,000/- த்தை கழகத் தலைவரிடம் வழங்கினர். முனைவர் த.கு.திவாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத் தலைவர் அவருக்கு பொன்னாடை அணிவித்து, ‘‘அவரது பிறந்தநாளில் மாநில உரிமை முழக்கமிட்டிருக்கிறோம்” என்று பாராட்டிக் கூறினார். பின்னர் வழக்குரைஞர் உத்திரகுமாரன், ‘‘Role of the Supreme Court In Protection of Rights of Persons with Disabilities In India’’ எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ளதைக் கழகத் தலைவரிடம் கூறி வாழ்த்துப்பெற்றார்.

பங்கேற்ற பிரமுகர்கள்!

நிறைவாக, தமிழ்நாடு மூதறிஞர் குழு செயலாளர் முனைவர் த.கு.திவாகரன் நன்றி கூறி நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *