புதுடில்லி, நவ. 12- தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஆண்டு தோறும் சுமார் 1.5லட்சம் புகார்கள் வருவதாக ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹாத்கர் தெரிவித்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹாத்கர் பேட்டி ஒன்றில், ‘‘பெண்கள் தங்கள் புகார்களை பதிவு செய்வதற்கு தேசிய மகளிர் ஆணையத்தின் இணையதளம், மேலாண்மை தகவல் அமைப்பு, மின்னஞ்சல், நேரில் வருதல் மற்றும் 24 மணி நேர உதவி எண் எனப் பல்வேறு வழிகள் உள்ளன.
தேசிய மகளிர் ஆணையத்துக்கு ஆண்டு தோறும் சுமார் 1.5 லட்சம் புகார்கள் வருகின்றன. எங்கள் வரம்பிற்குள் வரும் வழக்குகளை பார்த்தால் குடும்ப வன்முறை தொடர்பான புகார்களே அதிகம் உள்ளன.
எந்த ஒரு பெண்ணும் புகார் அளிப்பது எப்படி என்று தெரியாத காரணத்தால் தேசிய மகளிர் ஆணையத்தை அணுக முடியாது என்று நினைக்கக் கூடாது. தேசிய மகளிர் ஆணையம் உங்கள் இல்லம் தேடி என்ற மக்கள் தொடர்பு முன்னெடுப்பு மூலமாக ஆணையத்தை அணுகுவதில் சிரமம் உள்ள பெண்களை சென்றடைய பல்வேறு மாநிலங்களில் பொது விசாரணைகளை ஆணையம் நடத்தி வருகின்றது.
பெண்களால் எங்களிடம் வரமுடியாவிட்டால் நாங்களே அவர்களை தேடி செல்வோம் என்று முடிவு செய்தோம்” என்றார்.
