செய்தியும் சிந்தனையும்! ‘‘எதுக்கு இந்த விளம்பரம்?’’- கருஞ்சிறுத்தை 

3 Min Read
- Advertisement -

இந்தியாவில் தேர்தல் ஆணையம் தொடர்பான வாக்குத் திருட்டு, எஸ்.அய்.ஆர். முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு  எதிராகக் கடும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அதைக் குறித்தெல்லாம் கண்டு கொள்ளாத பா.ஜ.க, அதைத் திசை திருப்பும் நோக்கில் நரேந்திர மோடி இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்று விளம்பரம் செய்து கொண்டிருந்தது.

உண்மையில் அதிக காலம் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை இன்னமும் தக்கவைத்திருப்பவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தான். 1947 ஆகஸ்ட் 15 முதல் 1964 மே 27 வரை 16 ஆண்டுகள் 286 நாட்கள் அவர் பிரதமராகப் பதவி வகித்தார்.

நரேந்திர மோடி பிரதமாகப் பதவி யேற்ற 2014 மே 26 முதல் தற்போது வரை, 12 ஆண்டுகள் 5 மாதங்கள் 15 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளன. ஆனால் அதற்குள்ளாக பெரிய பண்டிகை போன்று சங்பரிவார் கும்பல்கள் புகழ்பாடின.

அதற்கு ஏதாவது காரணம் வேண்டு மல்லவா? அதனால், அவர் குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்ற காலத்தி லிருந்து கணக்கிட்டு, ஓர் அரசின் தலைவராக 25 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்தவர் என்று கூறி அந்தக் கொண்டாட்டத்தை நடத்தினர். நல் வாய்ப்பாக, அதற்கு முன்பு அவர் அகமதாபாத் நகராட்சித் தலைவராக இருந்திருக்கவில்லை. இருந்திருந்தால் அதனையும் கணக்கில் சேர்த்திருப்பார்கள்.

இப்படி ஒரு திணிக்கப்பட்ட கொண்டாட்டத்தை நடத்திய போது, பன்னாட்டு அளவிலும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாயின. குறிப்பாக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இப்பதிவுகள் தற்செயலானவை அல்ல; அது லாபி செய்வதற்கான நிறுவனங்களுக்குப் பணம் கொடுத்து, மோடிக்குப் புகழ் பாட வைக்கப்பட்ட நிகழ்வு என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவின் வெளி நாட்டு முகவர்கள் பதிவுச் சட்டத்தின் (FARA) கீழ் இந்திய அரசாங்கத்திற்காகப் பணியாற்றிய அமெரிக்க லாபி நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலமாக இந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

டிரம்ப் இரண்டாவது முறையாகக் குடி யரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பிறகு அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களால் நடத்தப் படும் ‘மெர்குரி பப்ளிக் அஃபேர்ஸ்’ (Mercury Public Affairs) என்ற நிறுவனம் இந்தியாவுக்கு லாபி செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி பாஜக அரசு மாதந்தோறும் 70.43 லட்சம் ரூபாய் பணமும் கொடுத்துள்ளது. டிரம்ப்பின் முன்னாள் தலைமை அதிகாரி யாக இருந்த சூசி வியல்ஸ் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரியாக இருந்த பிரையன் லான்சா போன்றோர் பணியாற்றும் இந்த நிறுவனத்தின் ஆவணங்களின்படி, பிரதமர் மோடியைப் பாராட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள் மேற்குறிப்பிட்ட அதிகாரிகள் டிரம்ப்பிடம் செய்த லாபி மூலமாக பதிவிடப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மெர்குரி நிறுவனம் மட்டுமல்லாமல் மேலும்  சில லாபி நிறுவனங்களுடன்  பாஜக அரசு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. டிரம்ப்பின் உதவியாளரான ஜேசன் மில்லர் தலை மையிலான ‘எஸ்எச்டபள்யூ பார்ட்னர்ஸ் எல்எல்சி’ (SHW Partners LLC) என்ற மற்றொரு நிறுவனத்துடனும் இந்தியத் தூதரகம் 2025 ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலமாக அந்நிறுவனத்திற்கு மாதந்தோறும் சுமார் 1.41 கோடி ரூபாய் இந்திய மக்களின் வரிப் பணத்தை பா.ஜ.க. அரசு அள்ளிக் கொடுத்துள்ளது.

இத்தகைய லாபி நிறுவனங்கள் மூலமாகவே உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் தொலைபேசி வழியாகவும் நேரிலும் பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என அமெரிக்காவின் வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ‘கரகாட்டக்காரன்’ படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி உண்டு. ஆட்டம் நடக்கிற ஊருக்கெல்லாம் வந்து பாராட்டுத் தெரிவிப்பதற்காக பத்து ரூபாயைக் கொடுத்து விளம்பரம் செய்து கொள்வார் செந்தில். அப்போது கவுண்டமணி கேட்பதுதான் இதன் தலைப்பில் இருக்கும் கேள்வி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *