2024-2025ஆம் நிதியாண்டில் மாநிலக் கட்சிகளின் வருவாய் 52 சதவீதம் சரிவு! வரவை விட அதிகமாக செலவிட்ட 21 கட்சிகள்

புதுடில்லி, மே 29 தன்னார்வ அமைப்பான ஜனநாயக சீர்த்திருத்தங் களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் அங்கீகரிக்கப் பட்ட 67 மாநில கட்சிகளில் 36 கட்சிகளின் 2024-2025ஆம் நிதியாண்டிற்கான  வரவு செலவு தணிக்கை அறிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 31 கட்சிகள் தணிக்கை அறிக்கைகளை சமர்பிப்பதற்கான காலக்கெடுவான 2025 அக்டோபர் 31ஆம் தேதிக்குப் பிறகும், 207 நாட்கள் கடந்த நிலையிலும் இன்னும் வெளியிடவில்லை.

இந்த தணிக்கை அறிக்கைகளின் படி, 2025-2025ஆம் நிதியாண்டில் 36 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.1,192.94 கோடியாக பதிவாகி உள்ளது. இது 2023-2024ஆம் நிதியாண்டில் கிடைத்த ரூ.2,463.17 கோடியை விட ரூ.1,270.23 கோடி (51.57 சதவீதம்) குறைவாகும். ஆனாலும் இந்த கட்சிகள் அறிவித்த மொத்த செலவினம் ரூ.1,433.07 கோடி. இது மொத்த வருவாயை விட ரூ.240.12 கோடி (20 சதவீதம்) அதிகமாகும்.

இந்த பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்த கட்சிகள் மட்டுமே மொத்த வருவாயில் சுமார் 69 சதவீதத்தையும், மொத்த செலவினத்தில் 77 சதவீதத்தையும் கொண்டுள்ளன. அதிகபட்சமாக தெலுங்கு தேசம் கட்சி ரூ.228.31 கோடியை வருவாயாக அறிவித் துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் ரூ.219.35 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.140.39 கோடியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

செலவினங்களை பொறுத்த வரை, அதிகபட்சமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.340.20 கோடியை செலவிட்டுள்ளது.

பிஜூ ஜனதா தளம் ரூ.288.44, திரிணாமூல் காங்கிரஸ் ரூ.227.59 கோடியை செலவிட்டுள்ளன. 36 கட்சிகளில் 21 கட்சிகள் தாங்கள் ஈட்டிய வருவாயை விட அதிகமான தொகையை செலவிட்டுள்ளதாக கூறி உள்ளன. அதிகபட்சமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வருவாயை விட ரூ.199.82 கோடியை அதிகமாக செலவிட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ், பிஆர்எஸ், பிஜூ ஜனதா தளம், அய்க்கிய ஜனதா தளம், சமாஜ் வாடி ஆகிய கட்சிகளும் வருவாயை விட அதிகமாக செலவிட்டுள்ளன.

மிச்சம் பிடித்த கட்சிகள்

36 கட்சிகளில் 15 கட்சிகள் தங்கள் வருவாயில் மிச்சம்பிடித்து குறிப்பிட்ட தொகையை கையிருப்பில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளன. அதில் முதலிடத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி ரூ.166.98 கோடியை கையிருப்பில் வைத்துள்ளது. மகாராட்டிரா நவநிர்மாண் சேனா ரூ.36.27 கோடியையும், அதிமுக ரூ.35.86 கோடியையும் மிச்சம்பிடித்து வைத்துள்ளன.

தேர்தலுக்கே அதிக செலவு

மாநில கட்சிகளுக்கு நிதி திரட்டுவதற்கான மிகப்பெரிய ஆதாரமாக தன்னார்வ நன்கொடைகளே தொடர்ந்து இருந்து வருவதாக ஏடிஆர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மொத்த வருவாயில் ரூ.702.36 கோடி (58.88 சதவீதம்) நன்கொடைகள் மூலம் பெறப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திரிணாமூல் காங்கிரஸ் ரூ.184.08 கோடி நன்கொடை பெற்றதாக தெரிவித்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங். ரூ.140.05 கோடி, தெலுங்கு தேசம் ரூ.85.20 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளன.

வட்டி வருவாய் மூலம் கூடுதலாக ரூ.277.21 கோடியை இக்கட்சிகள் பெற்றுள்ளன. இது மொத்த வருவாயில் 23.24 சதவீதம். 15 மாநில கட்சிகள் மொத்த செலவினத்தில் 55 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை தேர்தல் பணிகளுக்காகவே செலவிட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரங்களுக்காக ஒய்எஸ்ஆர் காங். ரூ.299.92 கோடி, பிஜூ ஜனதா தளம் ரூ.270.66 கோடி, பிஆர்எஸ் ரூ.147.99 கோடியை செலவிட்டுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *