‘வாபி – சாபி’ பண்பாட்டுத் தத்துவத்தை வரையறுத்து விளக்குவது அவ்வளவு எளிதான பணியல்ல.
காரணம், இது வெறும் அறிதல் அல்ல – உணர்வது, ஆம். அப்படி அவர்கள் உணர்ந்து சுவைத்துத் தன்ெனழுச்சிக் கொள்ளும் தகைமையை, வெளியில் நின்று ஒரு மாளிகையின் அழகினை மட்டுமே ரசித்து விட்டுப் போவதற்கும், வீட்டிற்குள் வசித்து, லகித்து வாழ்ந்த அந்த அனுபவத்தை அனுபவித்து மகிழ்தற்கும் ஏராளமான வேறுபாடு உண்டல்லவா?
அதுபோலவே,
‘வாபி’ என்பது ஒருவகையான தனித்த அமைதி (stillness) நடைமுறை யதார்த்தத்தினை ஏற்று ஒப்புக் கொண்டு எளிமையைச் சுவைத்து, அதனையே தனது வாழ்வியலாக ஒருவர் ஏற்று வாழ்வதே என்பது ஒருவகை விளக்கம் ஆகலாம்.
எதிலும் எளிமை; ஆடம்பரம் அற்ற, விளம்பர வெளிச்சமில்லாத, அழகின் சிரிப்பு அது! நம்மில் பலருக்கும் ‘எளிமை’ என்றும் அழகாகத் தோன்றுவதே இல்லை.
ஒப்பனைகள் மூலம் கிடைக்கும் ஆடம்பரமான அழகு தற்காலிக ஈர்ப்பினை, மகிழ்ச்சியைத்தான் அளிக்கும்.
ஆனால், அது நிரந்தரமல்ல! ஒப்பனை எப்போதும் கலைக்கப்பட வேண்டியதுதானே?
மேலை நாட்டவரிடம் தங்களது உடல் நலம் பற்றிய தகவலை – தன் வரலாறு எழுதுகையில் ஒப்பனையற்ற ‘ஸ்கேன்’ மறைப்பதில்லை.
பல நிகழ்வுகளைப் போல் அதுவும் ஒரு தவிர்க்க முடியாத ஒன்று.
வாழ்க்கை என்றாலே – அனைவரது வாழ்விலும் ஏற்ற – இறக்கங்கள் இயல்பானவை. அதனை மூடி மறைத்து வாழ்வதனால் நமக்கு எந்த நன்மையோ பயனோ கிடையாது!
அண்மையில் வெளிவந்துள்ள திருமதி சோனியா காந்தி அம்மையாரின் தன் வரலாறு கூறும் நூலில் தனது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று – அதுபோல சில சிக்கல்கள் மீண்டும் ஏற்பட்டதையும் – சரி செய்ததையும் ஒளிவு மறைவு இன்றி அப்பட்டமான உணர்வுகளை வடித்தெடுக்கின்றார்.
மருத்துவமனைகளில் பல முறை தந்தை பெரியார் அனுமதிக்கப்பட்டு, காய்ச்சல், நீர் பிரிதல் கோளாறு நோய் ஆகியவைகட்குச் சிகிச்சை பெற்றபோது, ‘விடுதலை’ நாளேட்டில் ‘அய்யாவின் உடல் நிலை பற்றிப் போடுவதற்கு முன் (ஏராளமான பல லட்சம் தொண்டர்கள் கவலை அடைவதைப் போக்க) அறிவித்த வழக்கம் உண்டு.
ஆனால் அதனை எழுதி வெளியிடுவதற்கு முன் தந்தை பெரியார் அவர்களை சற்று தயக்கத்தோடும், கவலையோடும் அணுகி ‘‘எப்படிப் போடுவது?’’ அய்யா என்றுகேட்டபோது, கொஞ்சம்கூட யோசிக்காமல் தயங்காது, கூச்சப்படாது, ‘எனது உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அப்படியே வெளியிடுவதே சரி – இல்லையேல் மக்களிடையே எதிரிகள் புரளிச் செய்திகளைப் பரப்பி, மனக்கிலேசம் அடையச் செய்வார்கள்.
அதைத் தவிர்க்கும் வகையில் மருத்துவர்கள் எப்படிக் கூறுகிறார்களோ அதனை ஒளிவு மறைவின்றி, அப்படியே எழுதிப் போடுங்கள்’ என்று ஆணையிடுவார்கள்!
இதுதான் அந்த ‘வாபி – சாபி.’ ஜப்பானிய எளிமையின் இனிமை என்ற அரிய, அறிய வேண்டிய, பற்றிக் கொள்ள வேண்டிய பண்பாடு அது நமக்குப் பயன்பாடும்கூட!
(வளரும்)
