மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் பாசிசப் பாய்ச்சல்!

- Advertisement -

மேற்குவங்கத்தில் நடைபெற்ற துர்கா பூஜைக் கொண்டாட்டங்களின் போது, பகுத்தறிவு மற்றும் சமத்துவத்தைப் போதிக்கும் புத்தகக் கண்காட்சி அரங்குகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், பல பூஜைப் பந்தல்களில் நாதுராம் கோட்சே, கோல்வால்கர் மற்றும் சாவர்க்கர் உள்ளிட்ட ஹிந்துத்துவ தலைவர்களோடு காந்தியாரின் படங்களும் வைக்கப்பட்டு, எதிர்கால ஹிந்து தேசத்தின் பிதாமகன்களாகக் காட்சிப்படுத்தப்பட்ட விவகாரம் கடுமையான விவாதங்களை எழுப்பியுள்ளது.

மேற்குவங்கத்தில் முதன்முறையாக துர்கா பூஜையின் போது மாநிலம் முழுவதும் பல்வேறு புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. இதில் பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போதிக்கும் நூல்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், இந்த நூல்களை விற்பனை செய்த அரங்குகளை பாஜக மற்றும் ஹிந்துத்துவ குண்டர்கள் கடுமையாகச் சிதைத்து அழித்துள்ளனர். மேலும், புல்டோசர்களைப் பயன்படுத்தியும் இந்த அரங்குகள் உடைத்தெறியப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு நேர்மாறாக, பெரும்பாலான துர்கா பூஜைப் பந்தல்களில் ஹிந்துத்துவ நபர்களின் படங்கள் மற்றும் சிலைகள் இடம் பிடித்துள்ளன. குறிப்பாக,  காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே, எம்.எஸ். கோல்வால்கர் மற்றும்  சாவர்க்கர் உள்ளிட்டோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.   இவர்கள் அனைவரும் ஹிந்து தேசத்தை உருவாக்க உறுதுணையாக இருந்தவர்கள் என்றும், எதிர்கால ஹிந்து தேசத்தின் பிதா மகன்கள் என்றும் அவர்களின் படங்களுக்கு அருகில் பெருமையுடன் எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்களாட்சி மற்றும் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் ஒரு நாட்டில் பகுத்தறிவு சிந்தனைக்கான அரங்குகள் இடிக்கப்படுவதும், அதேசமயம் சர்ச்சைக்குரிய ஹிந்துத்துவ தலைவர்கள் பெருமைப்படுத்தப்படுவதும் மேற்குவங்க அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

கால் நூற்றாண்டு காலம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆட்சி, தோழர் ஜோதிபாசு தலைமையில் நடைபெற்ற ஒரு மாநிலத்தில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவு நூல்கள் இடம் பெற்ற கண்காட்சி அரங்கம் அடித்து நொறுக்கப்பட்டதும், தீக்கிரையாக்கப்பட்டதும் சகித்துக் கொள்ளவே முடியாத பாசிசம் என்பதில் சந்தேகம் இல்லை.

அம்மாநிலத்தில் பிஜேபி ஆட்சி வந்தாலும் வந்தது; அராஜகமும் வெளிப்படையான இந்துத்துவா போக்கும் தலை விரித்தாட ஆரம்பித்து விட்டன.

பொதுவாக பிஜேபி ஆளும் மாநிலங்கள் எல்லாமே மதவாத வெள்ளத்தில் மூழ்கி விட்டன; மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் பூஜ்யம் என்ற நிலைதான்.

பிஜேபி ஆட்சியில்லாத மாநிலங்களில் பிஜேபி ஆட்சியைக் கொண்டு வர குதிரைப் பேரம் மட்டுமல்ல – எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய தில்லுமுல்லுகள் அரங்கேற்றங்கள் கோரத் தன்மையில் நடைபெற்று வருகின்றன. தன்னாட்சி அதிகாரங் கொண்ட அமைப்புகள் எல்லாம் ஒன்றிய பிஜேபி அரசின் கால்களில் சரணடைந்து விட்டன. ஒரே நாடு, ஒற்றை ஆட்சி என்ற அதிபர் ஆட்சி முறையை நோக்கி நாடு நகர்த்தப்படுகிறது. இந்த நிலையில் ‘இண்டியா’ கூட்டணி என்ன செய்யப் போகிறது என்பதுதான் முக்கியம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *