தம்பி, தங்கைகளே, தாய்மார்களே, சகோதரிகளே, தோழர்களே, நமது நிரந்தர உறவுகளான ஆதிதிராவிடத் தோழர்களே!
கேளுங்கள், புரிந்துகொள்ளுங்கள்!
இதோ சில அறிய வேண்டிய அரிய செய்திகள் இதோ:
‘பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட, தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்லுவோம்’ என்றவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் நடத்திய ‘குடிஅரசு’ வார ஏட்டில், சந்தாக்களில் சலுகை அளித்து,
‘‘ஆதிதிராவிட சங்கங்களுக்குப் பாதி சந்தாவுக்கு அனுப்பப்படும்’’ என்று அறிவித்தார்! அவர்கள் படித்து, அறிந்துகொள்ள அவ்வளவு பெரிய தூண்டுதல் அல்லவா, அது?
காரைக்குடிக்கு அருகில் உள்ள சிராவயல் கிராமத்தில், ஆதிதிராவிடர்களுக்கென்று, அங்கு காங்கிரஸ் பொருளுதவியால் வெட்டப்பட்டிருந்த ‘காந்தி கிணற்றைத்’ திறந்து வைத்துப் பேசிய பேச்சு, எவ்வளவு ஆழமான உரிமை முழக்கம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
‘காங்கிரஸ்காரர்’ பெரியார் பேசுகிறார் (1925):
‘‘இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை, ஒரு பெருமையைக் கருதி, நீங்கள் எனக்கு அளித்திருந்தாலும், உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்சமும் மனமில்லை. அல்லாமலும், இதை ஒரு சிறுமையாகவே மதித்து, மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்கிறேன்.
ஆதிதிராவிடர்களுக்கென்று தனிக் கிணறு வெட்டுவது அக்கிரமம் என்பதே எனது அபிப்பிராயம்.
இவ்வாறு தனிக்கிணறுகள் வெட்டுவது ஆதிதிரா விடர்கள் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்களல்லர் என்று ஒரு நிரந்தர வேலியும், ஞாபகக் குறிப்பும் ஏற்படுத்துவதாகத்தான் அர்த்தமாகும்.
எதற்காக அவர்களுக்குத் தனிக் கிணறு வெட்ட வேண்டும்?
சிலர், ஆதிதிராவிடர்களுக்கு நன்மை செய்வதாக வேஷம் போட்டு, தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலை நிறுத்திக் கொள்ளத்தான் இவ்வித தர்மங்கள் உதவும்.
நமது கிணறு, குளங்களில் ஆதிதிராவிடர்கள் தண்ணீர் எடுக்க ஏன், அனுமதிக்கலாகாது?
பறவைகளும், மிருகங்களும் குளங்களில் தண்ணீர் சாப்பிடுவதில்லையா?
‘குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது’ என்பது உங்களுக்குத் தெரியாதா?
அதில் என்ன வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?
இவ் விதத் தண்ணீரை இந்த ஆதிதிராவிடர்கள் எடுத்துச் சாப்பிடுவதால், என்ன கெடுதி ஏற்பட்டு விடும்!’’
எப்படிப்பட்ட நெற்றியடிக் கேள்விக் கணைகள் – படித்தீர்களா?
இவை யாருக்காக? தனது தலைவர் (அன்று) காந்தியார் நிலைப்பாட்டினையே எதிர்த்து, இப்டி முழங்கினார்.
பெரியாரை மறவாதீர்!
பெரியார் போராட்டங்களை மறுக்காதீர்கள்!
உணருங்கள், உணருங்கள்!
உண்மையை உணருங்கள்!
(தொடரும்)
