ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்புக்குத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்கிறதா? இருமொழிக் கொள்கையைக் கைவிட்டால் தமிழ்நாடே போராட்டக் களமாக மாறும்!

3 Min Read
- Advertisement -

தேசிய நெடுஞ்சாலைகளில் ஹிந்தித் திணிப்பா?
ரயில் நிலையங்களில் ஹிந்திக்கு முதல் இடமா?

தேசிய நெடுஞ்சாலைகளில் ஹிந்தித் திணிப்பா? ரயில் நிலையங்களில் ஹிந்திக்கு முதல் இடமா? ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்புக்குத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்கிறதா? இருமொழிக் கொள்கையைக் கைவிட்டால் தமிழ்நாடே போராட்டக் களமாக மாறும்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை வருமாறு:

ஒன்றிய பா.ஜ.க அரசு தனது திட்டங்களை ஒவ்வொன்றாகத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்து வதற்கான மும்முரத்தில் இருக்கிறது. அதற்கு, த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ‘அதிகாரம் கிடைத்தால் போதும், யார் ஆட்டுவித்தால் என்ன?’ என்ற தொனியில் தான் த.வெ.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாநில உரிமைப் பறிப்பு, பண்பாட்டுத் திணிப்பு, நிதி குறைப்பு என்ற எந்தப் பிரச்சினைக்கும் வாயைத் திறக்காமல் அமைதியாக இருக்கிறது த.வெ.க.அரசு. தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்ய பல்வேறு மறை முகமான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அதே நேரம், தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பார்ப்பதற்கு வெளிப்ப டையாகவும் சில வேலைகளில் ஈடுபடுகிறது.

தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைத் துறை வைத்த பெயர்ப்பலகைகளில் ஹிந்தி இருந்தது என்று கண்டனம் எழுந்தபோது, உடனடியாக ஓர் அமைச்சர் அதனை மறுத்து, சில அதிகாரிகளின் தவறு என்று காரணம் சொல்லிவிட்டு, இரு அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து ஒரு பரபரப்பைக் காட்டிவிட்டு ஓய்ந்தார்கள். கரூர் அரசு மருத்துவமனையில், மருந்துப் பையில் ஹிந்தி இருந்ததற்கும் ஏதேதோ காரணம் சொன்னார்கள்.

ஹிந்தி ஒட்டகம், தமிழ்நாடு கூடாரத்திற்குள் தலையை நுழைக்கிறது, இதன்மூலம் – எச்சரிக்கை!

தஞ்சை – சேலம்
தேசிய நெடுஞ்சாலையில்…

இப்போது தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்திலும் மைல்கற்களைப் புதுப்பித்து, அதில் மும்மொழியில் எழுதவிருக்கிறார்கள் என்ற செய்தியும், அதன் தொடக்கமாக தஞ்சை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஹிந்தியிலும் எழுதப்பட்டு இருக்கிறது என்னும் செய்தியும் வந்திருக்கிறது.

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை என்னாயிற்று? அறிஞர் அண்ணா காலத்திலிருந்து (1967 முதல்) உறுதியாக இருந்துவரும் ஆட்சிகளைப் போல இதில் இருக்கப் போகிறார்களா? இல்லை, இரு மொழிக் கொள்கையில் இந்த அரசு உறுதியாக இருக்கும் என்பது வெறும் வாய்வார்த்தை தானா? பா.ஜ.க. அரசுக்குப் பயந்து ஹிந்தித் திணிப்பை அனுமதித்தால், தமிழ்நாட்டு மக்களும், இளைஞர்களும் அதைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ரயில்வே துறையிலும் ஹிந்திக்கு முதன்மையிடம் தரும் வகையில், எல்லா ரயில் நிலையங்களிலும் பெயர்ப் பலகையைத் திருத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிகிறோம்.

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்ட நினைக்கிறதா ஒன்றிய அரசு?

தமிழ்நாட்டில் இன்னொரு ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்ட நினைக்கிறதா ஒன்றிய அரசு? அதற்குத் துணைபோகிறதா தமிழ்நாடு த.வெ.க. அரசு?

ஹிந்தி – சமஸ்கிருத மொழி – பண்பாட்டுத் திணிப்புகளை எதிர்க்கும் நெஞ்சுரம் கொண்டோர் தமிழ் மறவர்கள்! நெருப்புடன் விளையாட நினைக்க வேண்டாம் ஒன்றிய அரசு என்று எச்சரிக்க வேண்டியது நம் கடமை!

திராவிடர் கழகம்
தயங்காது! தயங்காது!!

ரயில் நிலையங்களில் தமிழுக்கு முதன்மை, நெடுஞ்சாலைக் கற்களில் இருமொழி என்ற நிலைமை திரும்பவில்லை என்றால், ஹிந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை அறிவித்துச் செயல்படுத்தத் திராவிடர் கழகம் தயங்காது! தயங்காது!!

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை    

11.11.2026      

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *