தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் திராவிடர் கழகம் தனது ஆதரவை அளிக்கும் – பிரச்சாரமும் மேற்கொள்ளும்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

 தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் தேவையின்றி இடைத்தேர்தல் ‘‘திணிக்கப்படுகிறது!’’
 த.வெ.க.வின் 4 மாத ஆட்சியில் சாதனைகள் இல்லை – வேதனைகள்தான்!
இதற்குப் பாடம் கற்பிக்கும் வகையிலும், தி.மு.க.வின் கடந்த கால ஆட்சியின் மாட்சியைக் கருத்தில் கொண்டும்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

 

தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் தேவையில்லாமல் திணிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. தலைமையில் கடந்த நான்கு மாதங்களாக நடைபெறும் ஆட்சியில், சாதனைகள் கிடையாது; வேதனைகள்தான், ‘‘குதிரை பேரங்கள்தான்’’. இந்த நிலையில், 4 மாத த.வெ.க. ஆட்சிக்குப் பாடம் கற்பிக்கவும், கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியின் சிறப்பான செயல்பாடுகள், திட்டங்கள் கருதியும், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பது என்றும், வெற்றிக்குப் பாடு படுவது, பிரச்சாரம் செய்வது என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு, பொதுத் தேர்தல் நடைபெற்ற சில மாதங்களிலேயே அவசியமற்ற ஓர் இடைத் தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் காலியாக உள்ள ஏழு தொகுதிகளில், பிற அய்ந்து தொகுதிகளின் வெற்றியை எதிர்த்துத் தேர்தல் வழக்கு இருப்பதால், அவற்றை விடுத்து இவ் விரண்டு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டி ருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் முன்பு அ.இ.அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றவர்கள், மக்கள் தங்களைத் தேர்ந்தெடுக்கக் காரணமான கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக, போதிய தனிப் பெரும்பான்மை இல்லாத த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தியபோது அவரகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத விசித்திரமான குதிரை பேரம் நடைபெற்றது

பின்னர் சில நாட்களிலேயே தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகி, தலைமைச் செய லகத்துக்குள்ளேயே அமைச்சரைச் சந்தித்து த.வெ.க.வில் இணைந்துவிட்டதாகக் கூறி, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத விசித்திரமான ‘குதிரை பேரம்’ நடைபெற்றது.

அதன் விளைவாக திணிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கட்சி மாறி வந்தவர்களுக்கே வேட்பாளர்களாக மீண்டும் இடமளித்துள்ளது ஆளுங்கட்சி! இது அரசியல் அறவழியா? அவர்கள் முன்பு போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.இ.அ.தி.மு.க. இப்போது வேறு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்குரைஞர் பரந்தாமன் அவர்கள் மதுராந்தகம் தொகுதிக்கும், வழக்குரைஞர் சுகன்யா அவர்கள் தாராபுரம் தொகுதிக்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறாத த.வெ.க.வுக்கு, அப்போது தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சில கட்சிகள் ஆதரவளித்து, ஆட்சியிலும் பங்கு பெற்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தன.

மக்களின் வரிப்பணம் அல்லவா?

ஆனால் அதையும் தாண்டி, த.வெ.க.வுக்கு ஏற்பட்ட அச்ச உணர்வின் காரணமாக, அ.தி.மு.க.வில் இருந்து சில சட்டமன்ற உறுப்பினர்களை ஆசைகாட்டி இழுத்தனர். அதனால் கட்சித்தாவல் சட்டப்படி அவர்களின் பதவி பறிக்கப்படும் சூழல் ஏற்படும் என்பதால், அவர்களைப் பதவி விலகச் செய்து தற்போது இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளனர்.

இதற்கான தேவை என்ன? இந்த தேர்தல் நடைபெறுவதற்கு செலவழிக்கப்படும் தொகை மக்களின் வரிப்பணம் அல்லவா?

இதை வீணடிக்க யார்  உரிமை தந்தது? இந்தத் தேர்த லைத் திணித்து மக்கள் பணத்தை வீணடிக்கக் காரணம் யார் என்பதை மக்கள் அறிய மாட்டார்களா?

தற்போது ஆட்சிக்கான பெரும்பான்மையில் எந்தப் பிரச்சினையுமில்லை.

இந்த இடைத் தேர்தல் வெற்றி தோல்வி, ஆட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்ற நிலையில், நடைபெறவுள்ள இடைத் தேர்தலின் முக்கியத்துவம் என்ன என்பதைச் சிந்தித்துப் பார்த்து, அதற்கேற்ப மக்கள் வாக்களிக்க வேண்டியது அவசியமாகும்.

இடைத் தேர்தல் என்பது எடைத்தேர்தலே!

கடந்த 120 நாட்களாகத் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் த.வெ.க. ஆட்சியின் செயல்பாடுகளை அளவிடு வதற்கான வாய்ப்பே இந்த இடைத் தேர்தல்! பொதுவாக இடைத் தேர்தல்கள் என்பவையே,  அரசை எடைபோட்டுப் பார்க்கும் தேர்தலே!

அப்படி எடை போட்டுப் பார்த்தால் இந்த நான்கு மாதங்களில் ஆட்சியில் நடைபெற்றவை என்ன?

  1. தமிழ்நாட்டில் இதுவரை அறிந்திராத குதிரை பேரங்க ளும், கட்சித் தாவல்களும், நமது அரசியல் மாண்பைக் கேலிக்கு உள்ளாக்கியுள்ளன. அந்தச் சூழ்நிலைக்கு இலக்கான இரண்டு தொகுதிகளில் தான் இப்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்களித்த மக்களின் முடிவுக்கு எதிராகவே, கட்சி மாறிய வேட்பாளர்கள் இப்போது மீண்டும் வருகின்றனர்.
  2. தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவரும் செய்திகள் அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றன. கொலைகளும், கூலிப் படைகளும், பாலியல் வன்கொடு மைகளும், ஆணவப் படுகொலைகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.
  3. தமிழ்நாட்டை, ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல், மக்களைப் பாதுகாத்து வந்தது கடந்த தி.மு.க. ஆட்சி. ஆனால், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்ற பெயரில் நடைபெற்றுவந்த 100 நாள் வேலைத் திட்டத்தை வீணடிக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த திட்டத்தை ஏற்றுக் கையொப்பமிட்டிருக்கிறது தற்போதைய த.வெ.க. அரசு.
  4. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், பொரு ளாதார வளர்ச்சியையும் விரிவாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புத் திட்டங்களை இந்த அரசு கைவிட்டுள்ளது. அவற்றுள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக் கூடிய பரந்தூர் விமான நிலையத் திட்டம், பரந்தூர் வரையிலான மெட்ரோ விரிவாக்கம், உலகளாவிய விளையாட்டு நகரம், கிழக்குக் கடற்கரைச் சாலை மேம்பாலத் திட்டம், சென்னை கிண்டி – வேளச்சேரி மேம்பாலத் திட்டம் ஆகியவை வெளிப்படையாகக் கைவிடப்பட்டுவிட்டன. இன்னும் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
  5. தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறை வேற்றாமல் இருப்பதற்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு. திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டுவந்த மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2500 ஆக உயர்த்தித் தருவோம் என்ற வாக்குறுதியைத் த.வெ.க. நிறைவேற்றவில்லை.

அனைத்து வீடுகளுக்கும் ஆறு சிலிண்டர்கள் தரு வோம் என்று சொன்னதை, தகுதி உடையவர்களுக்கு மூன்று சிலிண்டர் என்று மாற்றி, சொன்னதற்கு மாறாக நடந்துகொள்கிறது த.வெ.க. அரசு.

  1. ஆதரவு அளித்துள்ள கட்சிகளே, இந்த அரசின் பல நிலைப்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காட்சிகளே நிரம்பியிருக்கின்றனவே தவிர, ஆட்சி சரியாக நடைபெறுகிறதா?
  2. நிதிநிலையைக் காரணம் காட்டி, மக்கள் நலத் திட்டங்களைத் தவிர்க்கும அரசு, ரூ.1200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் என்றும், பல கோடி செலவில் முதலமைச்சர் அலுவலகம் மாற்றம் என்றும் தேவையற்றவற்றுக்குச் செலவழிக்கும் அவலம்.
  3. ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசியக் கல்விக் கொள்கை யின் அம்சங்களை நிறைவேற்ற மறைமுகமாகப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் பல்கலைக்கழகங்களுக்குச் சாதமாகச் சில சட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
  4. மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கைது, வழக்குகள் தொடர்வதிலேயே இந்த அரசு குறியாக இருப்பதுடன், அதற்கு முகாந்திரங்கள் இல்லை என்று நீதிமன்றங்களின் கண்டனங்களையும் பெற்றுள்ளது. இதுவே, இதன் காழ்ப்புணர்ச்சிக்கு அடையாளமாகும்.
  5. தமிழ்நாடு சட்டமன்றத்தில், தேர்தல் தொகுதி மறு வரையறைப்பற்றி, எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றாக இருக்க, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த தென்மண்டல முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின், அந்த முடிவு மாற்றப்பட்டதே, இது நியாயந்தானா? உரிமையை அடகு வைத்த கொடுமையல்லவா?

இன்னும் இந்த 120 நாட்களில் நடைபெற்றுள்ள மக்கள் நலத் திட்டங்கள் என்று சொல்வதற்கு எதுவுமில்லை என்பதே தற்போதைய நிலை.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே நமது ஆதரவு!

இந்த இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற வேண்டியது அவசியமான ஒன்றாகும். கடந்த அய்ந்து ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை வழங்கினாலும், மக்களின் மாறுபட்ட முடிவின் காரணமாக எதிர்க்கட்சியாக ஆக்கப்பட்டபோதும், ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்து வருவது திராவிட முன்னேற்றக் கழகமே!

இன்னும், தனது பா.ஜ.க. கூட்டணியை விடாமல், அவர்களுடன் இணைந்தே போட்டியிடுகிறது அ.இ.அ.தி.மு.க! தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணி என்பது முற்றிலும் தோற்கடிக்கப்பட வேண்டிய கூட்டணியே ஆகும்.

இந்தத் தேர்தலில், தி.மு.க. வெற்றி பெறுவதன் மூலம் த.வெ.க. அரசுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடியும். அதன் தவறான நிலைப்பாடுகள், போக்குகள், அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகியவை மக்களுக்கு விரோதமானவை என்பதை எடுத்துச் சொல்லி திருத்த முயலும் மாறுபட்ட மக்கள் தீர்ப்பு. ஆரோக்கிய அரசியல் உருவாக தோல்வி ஒரு பாடமாக ஆவதற்கு, இந்த இடைத் தேர்தல் ஒரு முக்கியமான வாய்ப்பாகும்.

எனவே, நான்கு மாத த.வெ.க. ஆட்சிக்குப் பாடம் கற்பிக்கவும், ஜனநாயகத்தின் மாண்பையும் கருதி, இவ் விரு தொகுதி மக்களும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

போதிய பெரும்பான்மை ஆளுங்கட்சிக்கு இல்லை என்ற நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளே, ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளுக்கு விமர்சன மும், எதிர்ப்பும் தெரிவிக்கும் நிலையில், சட்டமன்ற நடவடிக்கைகளின் மரபும், மாண்பும் காணாமல் போன விசித்திரத்தை உருவாக்கிய ஆளுங்கட்சித் தோற்றால், தங்களது அதிகார, ஆணவம்பற்றி அவர்களே உணர்ந்து, மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள தி.மு.க.வின் வெற்றி உதவும் அல்லவா!

திராவிடர் கழகத்தின் முழுமையான ஆதரவை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கி, பிரச்சாரத்திலும் கழகம் ஈடுபடும்!

மயக்கமின்றி, தயக்கமின்றி இரண்டு தொகுதி வாக்காளப் பெருமக்களும் ஆழ்ந்து சிந்தித்து, வாக்களித்து தி.மு.க.வை வெற்றி பெற வைத்தால், அது ஒரு நல்ல அரசியல் திருப்பம் ஆகும்!

 

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை      

12.9.2026          

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *