அறிவியலைக் கண்டு அஞ்சும் மதவாதக் கூட்டம்

- Advertisement -

த.மு.யாழ் திலீபன்

 

அறிவியல், கலை, வரலாறு, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் என்பன மனித சமூகத்தின் தூண்களாகும். இவற்றில் நிகழும் ஒவ்வொரு முன்னேற்றமும் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் பிரிக்க முடியாதவாறு பிணைந்துள்ளன. பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச் சியில் நிலவும் சமத்துவமின்மையை முதலாளித்துவ அமைப்பின் அடையாளமாகக் கருதலாம். அறிவியல் வளர்ச்சி சமூகத்தினுள் உயிரோட்டமும் இயங்குதன்மையும் கொண்டதாக இருக்க வேண்டும். அறிவியல் அறிவைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகளும் பணிகளும் அறிவியலுக்கும் சமூகத்திற்கும் இடையே நிலவும் உயிர்ப்பான உரையாடலை மேலும் வலுப்படுத்தும் பாலமாக விளங்குகின்றன.

அறிவியலை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கம் கல்வி, மூடநம்பிக்கை, உண்மையைச் சரிபார்க்க, இயற்கையைப் புரிந்துகொள்ள, சுகா தாரத்தைப் பாதுகாக்க, மாணவர்களின் கேள்வி கேட்கும் திறனை வளர்க்க, பொருளாதார இழப்பு, மற்ற நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சி என்று இவற்றில் எல்லாம் தெளிவு கிடைத்துவிட்டால் சமூக முன்னேற்றம் இயல்பாகவே நடந்தேறும். ஆனால், அம்பேத்கர் சொல்லியது போன்றே, உலகில் எந்த மக்களும் அறிவைத் திட்டமிட்டுத் தடுக்கும் வேலையையே பழக்கவழக்கமாக மாற்றி, கடவுள், ஜாதி கட்டுப்பாடு, மதம் என்று சட்டமாக மாற்றி பெரும்பான்மை மக்களை இந்து மதம் திட்டமிட்டு அறிவீனமான மக்களாக மாற்றி வைத்திருக்கிறது. பிஜேபிக்கு அதிகாரம் கையில் கிடைத்தவுடன் இந்த நடைமுறையை முழுவேகமாக கல்வி மற்றும் அறிவியல் துறையில் அரங்கேற்றி வருகிறது.

2020 பெங்களூரில் நடந்த அறிவியல் மாநாட்டில், ஆராய்ச்சியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியது: “Innovate, Patent, Produce, Prosper” (புதுமை புரியுங்கள், காப்புரிமை பெறுங்கள், உற்பத்தி செய்யுங்கள், வளம் பெறுங்கள்) என்றார். அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் 10-க்குள் இந்தியா இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஜிடிபியில் 0.6% – 0.7% ஆகவே உள்ளது. அதே நேரம், இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட தென் கொரியா, தனது ஜிடிபியில் 2% – 3% வரை ஆராய்ச்சிக்குச் செலவிடுகிறது. அடிப்படை அறிவியல் தொடர்பான இலாப நோக்கமற்ற ஆராய்ச்சிக்கு அரசு நிதியை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில்,  ஆராய்ச்சி  ஆர்வம் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் வீழ்ச்சியடையும்.

அறிவியலில் ஏற்படும் முன்னேற்றங்கள் சந்தையில் விற்கப்படும் பொருளாக இன்று சுலபமாக மாறி விடுகிறது. இந்த மாற்றம் அறிவுசார் சொத்துரிமைக்கு வழிவகுத்தது. ஆராய்ச்சிகள் பொது நிதியில் உருவாக்கப்பட்டாலும் காப்புரிமை மூலம் அதைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கின்றன. உலகம் முழுவதும் புதியதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பதால் அறிவியலுக்கு நிதியளிப்பதில் தனியார் துறையின் தலையீடு அதிகரித்துள்ளது. தனியார் நலன்கள் ஆதிக்கம் செலுத்தும்போது அறிவியலின் மீதான பொது நம்பிக்கையும் குறையத் தொடங்குகிறது. எனவே, சுதந்திரமான கேள்வி கேட்கும் சூழலையும், நிறுவனங்களின் நிதி-நிர்வாக சுயாட்சியையும் பேணுவது அவசியமென்ற முறையிலும், மக்களின் பாதுகாப்பு கருதியும் மோடி அரசு அறிவியல் துறையில் தாராளமயமாதல் எனும் நிலையை நிறுத்தி, அரசே முழு நிதிப் பங்களிப்புடன் நடத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் வலுக்கிறது.

மோடி அரசில் அறிவியல் துறை எதிர்கொள்ளும் பாதிப்புகள்

1947–க்கு அடுத்த  முப்பது ஆண்டுகளில் அறிவியல்- தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஒப்பீட்டளவில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், உலகமயமாக்கலுக்குப் பின்,

நவ தாராளவாதப்
பொருளாதாரக் கொள்கைகள்

மூன்று காரணிகளால் அறிவியல் மனப் பான்மை, தொழில்நுட்ப வளர்ச்சி, இந்தியாவின் சுயசார்பு ஆகியவை பலவீனமடைந்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில் இந்நிலை மேலும் மோசமடைந் துள்ளது — இதற்குக் காரணம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் செல்வாக்கு அதிகரிப்பும் மாநில அறிவியல் அகாடமிகள், உயர்கல்வித் துறையில் மாநிலங்களுக்கு இருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டதும்தான்!

2014-இல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அறிவியல் துறை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு வெளிப்பாடாக, ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாடுகளில் ஆர்.எஸ்.எஸ்.,   சங்பரிவார் அமைப்பினர் பங்கேற்று, பிற்போக்குக் கருத்துகளைப் பரப்பி மாநாட்டை நாசப்படுத்தி வருகின்றனர். 2022-இல் அறிவியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 300-க்கும் மேற்பட்ட விருதுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் உச்சகட்டமாக, ஏற்கனவே நிதி குறைவாக ஒதுக்கப்படுகிறது என்ற நிலையிருந்தும், 2024-இல் நடைபெறவிருந்த இந்திய அறிவியல் மாநாட்டிற்கான நிதி ஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கற்பனை எப்படி அறிவியலாகும்?

2018-இல் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில், அமைச்சர் ஹர்ஷ வர்தன், ஸ்டீபன் ஹாக்கிங்கின் ‘நிறை-ஆற்றல் சமன்பாடு’ வேதங்களில் இருந்து பெறப்பட்டது எனக் கூறியதாகத் தெரிவித்தார். இதற்கு முன்னர் 2015-இல் ஆனந்த போடாஸ் என்பவர், பழங்கால இந்தியாவில் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார். 2016-இல் பாண்டே என்பவர், சிவன் மிகச்சிறந்த சுற்றுச்சூழலியாளர் என்று உளறினர்.

இது போன்ற அறிவியல்பூர்வமற்ற கருத்துகளைத் தடுக்க, பிரதமரின் அறிவியல் ஆலோசகரும், அறிவியல் அகாடமிகளும் அறிவியல் மாநாட்டு தலைமையகத்தினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்புத் தலைவர்கள்  வலியுறுத்தினர்.

கிடப்பில் கிடக்கும்
இந்திய அறிவியல் மாநாடு

இந்திய அறிவியல் மாநாடு சங்கம் 1914-இல் பிரிட்டிஷ் வேதியியல் அறிஞர்களான ஜே.எஸ். சைமன்சன், பேராசிரியர் பி.எஸ். மக்னோஹன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இம்மாநாடு 2015-இல் இருந்து முக்கியத்துவம் இழந்து, தற்போது நடத்துவதே சிரமமான நிலை உருவாகியுள்ளது.

2021, 2022 ஆண்டுகளில் கொரோனா காரணமாக மாநாடு நடைபெறவில்லை. 2023-இல் நாக்பூரில் நடைபெற்ற மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 2024-இல் 109-ஆம் மாநாடு முதலில் லக்னோ பல்கலைக்கழகத்திலும், பின்னர் ஜலந்தர் லவ்லி பல்கலைக்கழகத்திலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணமாக ஒன்றிய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஒத்துழைப்பு இல்லாமையே! இன்று வரையிலும் மோடி அரசால் அறிவியல் மாநாடு நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மோடி அரசின் இரட்டை வேடம்:
விஞ்ஞான பாரதி (VIBHA)

இந்திய அறிவியல் மாநாட்டைச் சீர்குலைத்துவிட்ட அதே வேளையில், 2015-இல் ஒன்றிய அரசு இந்திய பன்னாட்டு அறிவியல் திருவிழாவை (IISF) தொடங் கியது. சங்பரிவார் அமைப்புகளில் ஒன்றான விஞ்ஞான பாரதி (VIBHA) இதை ஆண்டுதோறும் நடத்துகிறது; இதன் அலுவலகம் குஜராத்தில் உள்ளது, பிரசுரங்களில் நரேந்திர மோடியின் ஒளிப்படம் இடம்பெறுகிறது.

இந்திய அறிவியல் மாநாட்டிற்கு ஒதுக்கப்பட்டு வந்த ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் நிதி ரத்து செய்யப்பட்ட அதே சூழலில், இந்திய பன்னாட்டு அறிவியல் விழாவிற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான பாரதியின் நோக்கம் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதல்ல; மாறாக, இந்துத்துவா அடிப்படையிலான பிற்போக்கு வலதுசாரி சித்தாந்தத்தை ஊக்குவித்து, இந்திய அறிவியல் மாநாட்டிற்கு மாற்றாக இந்துத்துவ அறிவியலோடு ஒப்புமைப்படுத்தி நிலைநிறுத்த முயல்வதே ஒன்றிய அரசின் நோக்கம்.

இயற்பியல் வேதியியல் பாட முக்கியத்துவங்களைக் குறைக்கும் தேசியக் கல்விக் கொள்கை

ஜம்மு காஷ்மீர் கல்வித் தளங்களில்  சில ஆண்டுகளுக்கு முன் இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படிக்க ஆர்வத்துடன் இருந்த மாணவர்களின் நிலை இன்று தலைகீழாகியுள்ளது. நவீனமயமாக்கல் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 அமலாக்கத் திற்குப் பின் அறிவியல் கல்வியின் மய்யத் தூண்களாக இருந்த இயற்பியல், வேதியியல் இளங்கலை பாடப் பிரிவுகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளது. இது மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இக்கொள்கையின் கீழ், பல கல்லூரிகளில் இயற்பியல், வேதியியல் பாடங்கள் மேஜர், மைனர் எனப் பிரிக்கப்பட்டு, முதன்மைப் பாடம் என்ற நிலை யிலிருந்து துணைப்பாடமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், இப்பாடங்களை முத ன்மையாக எடுக்க விரும்பிய மாணவர்கள், வேறு வழியின்றி தங்கள் விருப்பங்களுக்கு மாறாக வேறு பாடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அறிவியல் அமைப்பைச்
சீர்குலைக்கும் செயல்

ஆதாரமற்ற அறிவியல் கூற்றுகளை “இந்திய அறிவு அமைப்பு” (Indian Knowledge System) என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி பாடத் திட்டங்களில் சேர்க்கும் முயற்சி, பள்ளி மற்றும் இளநிலை /முதுநிலை மட்டங்களில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. என்.சி.இ.ஆர்.டி.  ஆறாம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகங்களில், இந்திய அறிவு மரபுகள் ஒருபக்கச் சார்பான சமஸ்கிருத பிரதிநிதித் துவத்துடன் தவறாக முன்வைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகிறது. பதினொன்றாம் வகுப்புப் புத்தகத்தில் ஆயுர்வேதம் 4,000 ஆண்டுகளுக்கு முந்தையது எனும் மிகைப்படுத்தப்பட்ட கூற்று இடம்பெற்றுள்ளது என அறிஞர்களும் ஆயுர்வேத நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்; உண்மையில் இது கிமு 6-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு, அய்.அய்.டி. மண்டியின் பி.டெக்,  (இந்திய அறிவு அமைப்பு) பாடத் திட்டத்தில் “மறு பிறவி”, “உடலுக்கு வெளியே அனுபவங்கள்” போன்ற சர்ச்சைக்குரிய தலைப்புகள் சேர்க்கப்பட்டு பரவலான எதிர்ப்பை சந்தித்தது. அதேபோல், பனாரஸ் இந்து பல்கலைக் கழகம்  பூத வித்யாவை அடிப்படையாகக் கொண்ட ஆறு மாத ஆயுர்வேத சான்றிதழ் படிப்பொன்றைத் தொடங்கியுள்ளது. இளநிலை  மருத்துவப் பட்டதாரிகளுக்கான இப்படிப்பில், உளவியல் சிகிச்சை, மனோதத்துவ நிலைகளுக்கான சிகிச்சை என்பதுடன் அமானுஷ்ய நடவடிக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாஜக அரசு இப்படி அனைத்துத் துறைகளிலும் அறிவியலை முடக்கும் வேலைகளிலும், அதற்கான பங்களிப்பையும், மாணவர்களைக் கல்வியிலிருந்து வெளியேற்றும் வேலையைத் திட்டமிட்டுச் செய்து வருவதுடன், அறிவியலுக்குப் புறம்பான கற்பனைவாத ஹிந்துத்துவ கதைகளை அறிவியலாகச் சித்தரிப்பதும் நாட்டின் வளர்ச்சிக்குக் கேடான செயல்மட்டுமல்ல, நாட்டை பின்னோக்கி இழுத்துக் கற்காலத்துக்குக் கொண்டு செல்லுமேயன்றி, நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *