தங்களின் சொந்த ஊர் எது? திருச்சிக்கு எப்போது வந்தீர்கள்?
எனது பெயர் இரா.விஜயராகவன். அம்மா ஜெயலட்சுமி, அப்பா இராமதாஸ். நான் 1954ஆம் ஆண்டு பிறந்தேன். தற்போது 72 வயதாகிறது. எனது சொந்த ஊர் மன்னார்குடி மாவட்டம் மேலப்பனையூர் கிராமம். எனக்கு ஒரு வயது இருக்கும் போதே எனது தாய், தந்தையை இழந்துவிட்டேன். எனது பெரியப்பா தான் என்னை வளர்த்தார்கள். நான் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். கிராமத்தில் விவசாய வேலைகள் செய்து கொண்டிருந்தேன். இந்நிலையில் திருச்சி பொன்மலை இரயில்வே தொழிற்சாலையில் வேலை கிடைத்து, 1981ஆம் ஆண்டு திருச்சிக்கு வந்தேன்.
திராவிடர் கழகக் கொள்கைகள் எப்போது அறிமுகமாகின? இரயில்வே பணிமனையில் இயக்க வேலைகள் எப்படி இருந்தன?
குலமாணிக்கம் கிராமத்தில் வசித்த நவமணி என்பவர், உறவுமுறையில் எனக்கு அண்ணன் ஆவார். அவர் திராவிடர் கழகத்தில் இருந்தார். அவர் மூலம் இந்தக் கொள்கைகள் எனக்கு அறிமுகமாகின. தந்தை பெரியார் குறித்துப் பொதுவுடமைத் தோழர் ஒருவர் எழுதிய நூலைத்தான் முதன்முதலில் நான் வாசித்தேன். பொன்மலை இரயில்வே தொழிற்சாலை வந்த பிறகு பெரியார் கொள்கையாளர் இராமச்சந்திரன் அறிமுகமானார். தனிப்பட்ட முறையில் எனக்கு உதவிகளும் செய்தார். அந்தச் சமயத்தில் 30 – திற்கும் மேற்பட்ட தோழர்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்தனர்.
நுழைவாயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி கூட்டங்கள் நடத்துவோம். ஆசிரியர் அவர்களை அழைத்தும் நிகழ்ச்சிகள் செய்துள்ளோம். பொன்மலை சந்தைப் பகுதிக்கு 1988ஆம் ஆண்டு ஆசிரியர் பேச வந்தார். அந்நிகழ்வில்தான் எனது இணையர் பேபி அவர்கள் தாலியை நீக்கிக் கொண்டார். மூடநம்பிக்கை ஊர்வலம், நா.மா.முத்துக்கூத்தன் பொம்மலாட்ட நிகழ்ச்சி, சங்கராச்சாரியாருக்குக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என ஏதாவது செய்து கொண்டே இருப்போம். அந்தச் சமயத்தில் திருச்சி மாவட்டத் தலைவராக டி.டி.வீரப்பா, செயலாளராக ஓ.அரங்கராசு, ஒன்றியச் செயலாளராக ஞா.ஆரோக்கியராஜ் ஆகியோர் இருந்தனர். அக்கூட்டத்தில் பிச்சாண்டார்கோயில் பி.வி.இராமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்.
திருச்சி பொன்மலையில் இருந்து பகுத்தறிவுச் சுடர் ஏந்தி, திண்டுக்கல் வரை தொடர் ஓட்டம் ஓடியதாகக் கேள்விப்பட்டுள்ளோமே?
ஆமாம்! இட ஒதுக்கீடு தொடர்பான மாநாடு திண்டுக்கல் நகரத்தில் நடைபெற்றது. அதுசமயம் பொன்மலை இரயில்வே தொழிற்சாலையில் இருந்து 13 தோழர்கள் பகுத்தறிவுச் சுடர் ஏந்தி ஓடினோம். மாநாட்டுத் திடலை அடைந்ததும் மேடையேறி, ஆசிரியர் அவர்களிடம் சுடரைக் கொடுத்தோம். அந்த ஓட்டத்தில் தனலெட்சுமி என்கிற மகளிரும் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் கலந்து கொண்ட வடமாநிலத் தலைவர் ஒருவர், நமது கழகக் கொடியை ஆசிரியரிடம் மேடையில் பெற்றுக் கொண்டார். அதைத் தங்கள் மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதாகக் கூறினார்.
நாங்கள் இரயில்வே தொழிற்சாலையில் பணிபுரிந்தாலும் பொன்மலை, அம்பிகாபுரம், கீழ்க்கல்கண்டார்கோட்டை, மேல்கல்கண்டார்கோட்டை, பொன்மலைப்பட்டி, மிலிட்டரி காலனி எனப் பல இடங்களிலும் கூட்டங்கள் நடத்துவோம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் சுற்றுப் பகுதியெங்கும் சுவரெழுத்துகள் எழுதுவோம். இதை ஒவ்வோர் ஆண்டும் செய்வோம். அதுமட்டுமின்றி பொன்மலை பணிமனை எதிரிலும், கல்கண்டார் கோட்டையிலும் பெரியார் சிலைகளை நிறுவினோம்.
திராவிடர் கழகத்தில் இவ்வளவு தீவிரமாகச் செயல்பட்டதால், நிறுவனத்தில் இருந்து எதிர்ப்புகள் வந்திருக்குமே?
ஆமாம்! அதனால் எனது பணி உயர்வு பலமுறை தள்ளிப்போனது. எனினும் பணிமனைத் தோழர்கள் எதற்கும் அஞ்சியதில்லை. ஒருமுறை காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் எங்கள் நிறுவனத்திற்குள் பேச வருவதாக, அறிவிப்பும் பலகையில் துண்டறிக்கை ஒட்டியிருந்தார்கள். அதைப் பார்த்த நானும், இராமச்சந்திரன் தோழரும் உடனடியாக அலுவலகத்திற்குச் சென்று விளக்கம் கேட்டோம். அவரை அழைத்துப் பேச வைத்தால் அது மதரீதியான பிரச்சாரமாக இருக்கும் என்றோம். தொடர்ந்து எதிர்ப்புகள் வரவே அந்த நிகழ்ச்சியையே ரத்து செய்துவிட்டார்கள்.
திருச்சி மாவட்டம், பெருங்குடி கிராமத்தில் “பேய்” ஓட்டிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே பெருங்குடி எனும் கிராமம் உள்ளது. அங்கு 6 மணிக்கு மேல் பேய் வருவதாகவும், அது பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் பரபரப்பாய் பேசப்பட்டது. அதனால் கிராம மக்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் ஆறு மணிக்குள் வீட்டிற்குத் திரும்பி, கதவைப் பூட்டிக் கொண்டு இருந்துள்ளனர். இதையறிந்த ஒரு மந்திரவாதி(?) “பேயை விரட்டுகிறேன்”, எனப் பூஜைகள் செய்துள்ளார்.
இந்தச் செய்திகளை அறிந்ததும் மூடநம்பிக்கை ஒழிப்புக் குழுவினருடன் 30 பேர் அந்தக் கிராமத்திற்குச் சென்றோம். இரவு முழுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் “மந்திரமா? தந்திரமா?” ஆகியவை நடத்தினோம். இதன் மூலம் அந்தக் கிராம மக்கள் தெளிவு பெற்றனர். இதில் மூடநம்பிக்கை ஒழிப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர் வெற்றிமணி, ஞா.ஆரோக்கியராஜ், மு.சேகர், “மந்திரமா, தந்திரமா” ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திருச்சி மாவட்டத் தோழர்கள் பலரும் பங்கேற்றோம்.
தனிப்பட்ட முறையில் தங்களின் இயக்கச் செயல்பாடுகள் எப்படி இருந்தன?
மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்களில் இதுவரை ஏழுமுறை அலகுகுத்தி நடந்து வந்துள்ளேன். சற்றொப்ப 40 ஆண்டுகளாக “விடுதலை” படித்து வருகிறேன். தொழிற்சாலையில் பணிபுரிந்த போது 7 ஆண்டுகள் “உண்மை” முகவராகச் செயல்பட்டேன். பொன்மலைப் பகுதிகளில் மட்டும் 300 புத்தகங்கள் வரை விற்பனை செய்துள்ளேன். அதுமட்டுமின்றி தொழிற்சாலை வாயிலில் வரிசையாகத் தட்டிகள் வைத்திருப்போம். அதில் ‘உண்மை’ இதழின் பக்கங்களை, ஒவ்வொரு தட்டியிலும் ஒட்டி வைப்போம். அதையும் பலர் படிப்பார்கள்.
நான் வாங்கக் கூடிய நூல்களைப் “பைண்டிங்” செய்து பாதுகாப்பாய் வைப்பது எனது வழக்கம். அந்த வகையில் 300-க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் 10 ஆண்டு ‘உண்மை’ இதழ்களையும் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் திடலில் வழங்கினேன்.
பொன்மலையில் இருந்தபோது குடும்பச் சந்திப்பு நடத்தி, எங்கள் வீட்டில் விருந்து உபசரிப்பு நடத்தி இருக்கிறோம். தமிழ்நாட்டில் நடைபெற்ற பெரும்பாலான மாநாடுகளில் இணையருடன் கலந்து கொண்டுள்ளேன். வைக்கம் நூற்றாண்டு நிகழ்ச்சிக்கும் கேரளா சென்று வந்தோம். பொன்மலைப் பணிமனையில் இருந்து 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். பின்னர் துவாக்குடி அருகே வாழவந்தான்கோட்டையில் 2012ஆம் ஆண்டு புதிதாக வீடு கட்டி வந்துவிட்டோம். புதுமனை புகுவிழாவில்கூட எந்தச் சடங்குகளும் செய்யவில்லை. உறவினர்களிடம் அந்த எதிர்பார்ப்புகள் இருந்தாலும், நாங்கள் சமரசம் செய்து கொள்ளவில்லை.
நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்துள்ளீர்கள். இப்போது இயக்கம் எப்படி இருக்கிறது?
பொன்மலை இரயில்வே பணிமலையில் வேலை செய்த 33 ஆண்டுகளும், என்னால் முடிந்த இயக்க வேலைகளைச் செய்து வந்துள்ளேன். ஆறாம் வகுப்புப் படிக்கும்போது திருவாரூர், கோட்டூர் பகுதியில் நடந்த கூட்டத்தில் தந்தை பெரியாரைப் பார்த்துள்ளேன். ஆசிரியர் அவர்களைப் பலமுறைச் சந்தித்துள்ளேன். ஓய்விற்குப் பிறகு என்னால் களப்பணிகளில் ஈடுபட முடியவில்லை. எனினும் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிடுவேன். குறிப்பாக எனது இணையர் பேபி அவர்கள் 25 ஆண்டுகளாக என்னுடன் இயக்கத்தில் பயணித்து வருகிறார். உடல்நலன் கருதி இப்போதுதான் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனினும் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த திருச்சி மாவட்டக் குடும்பச் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, எங்கள் பெயரன் மகிழ்மித்திரனை அழைத்துக் கொண்டு போனோம். அந்நிகழ்வில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள், எங்கள் பெயரனை “மடியில்” வைத்துப் புகைப்படம் எடுத்ததை எங்களால் மறக்க முடியாது. அன்றைய தினம் ஏராளமான கழகத் தோழர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இனி தொடர்ந்து நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டும் என்கிற உற்சாகமும் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இயக்கப் பிரச்சாரங்கள் நடக்காத நாட்களே இல்லை எனும் அளவிற்கு அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. அதில் ஆசிரியர் அவர்களும் மாதத்தில் பல நாட்கள் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்கள். ஏராளமான இளைஞர்களும், மாணவர்களும் நமது இயக்கத்தில் இருப்பதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது”, எனக் கூறிய இரா.விஜயராகவன், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன் மருத்துவக் கல்லூரிக்குத் தமது உடலைக் கொடையாகப் பதிவு செய்துள்ளார்.
