மாநிலங்களின் பாதுகாப்புக்குக் காவல்துறை இருக்க
‘குடிமைப் பாதுகாப்பு வலைப்பின்னல்’ யாருக்காக?
ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவக் குண்டர் படைக்கு அங்கீகாரம் வழங்கும் முயற்சியா?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
‘குடிமைப் பாதுகாப்பு வலைப்பின்னல்’ யாருக்காக?
ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவக் குண்டர் படைக்கு அங்கீகாரம் வழங்கும் முயற்சியா?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
மாநிலங்களின் பாதுகாப்புக்குக் காவல்துறை இருக்க ‘குடிமைப் பாதுகாப்பு வலைப்பின்னல்’ யாருக்காக?
ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவக் குண்டர் படைக்கு அங்கீகாரம் வழங்கும் முயற்சியா? மாநில உரிமைகளைப் பறித்து, குடிமக்களின் உரிமையைக் கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
- மாநிலங்களின் பாதுகாப்புக்குக் காவல்துறை இருக்க ‘குடிமைப் பாதுகாப்பு வலைப்பின்னல்’ யாருக்காக? ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவக் குண்டர் படைக்கு அங்கீகாரம் வழங்கும் முயற்சியா? திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
- உள்நாட்டுப் பாதுகாப்புக்கென்று தனிப்படையா?
- பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையா?
- ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் துணை செய்வதற்கா?
- புதுடில்லியில் போராட்டக்காரர்களைத் தாக்கியவர்கள்!
- புதிய வலைப் பின்னலை அனைவரும் எதிர்க்கவேண்டும்!
எல்லா மாவட்டங்களில் இருந்தும் நக்சல்களை ஒழித்துவிட்டதாகவும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் நேற்று (8.11.2026) சட்டீஸ்கரில் கோப்ரா படையினருடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 15 அன்று, டில்லியில் பேசும்போதும், இதே போன்றுதான் பிரதமர் பேசினார். ஆனால், ‘அறிவுஜீவி நக்சல்கள்’ (திமாகி நக்சல்) என்று ஓர் அடையாளத்தைச் சூட்டி, யாரெல்லாம் தங்கள் அரசுக்கு எதிராகப் பேசுகிறார்களோ, சிந்திக்கிறார்களோ அவர்களை எல்லாம் சாடினார்.
உள்நாட்டுப் பாதுகாப்புக்கென்று தனிப்படையா?
12 ஆண்டுகால ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும், திட்டங்களையும், ஜும்லாக்களையும் ‘புதிய இந்தியா பிறந்துவிட்டது’ என்றும், ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ என்றும் நம்பிக் கொண்டிருந்த மக்கள் தற்போது விழிப்படைந்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்த விழிப்புணர்வு இப்போது வட புலத்திலும் வரத் தொடங்கியிருப்பதன் அடையாளமாக, நீட் திணிப்பு, எஸ்.அய்.ஆர். மூலம் வாக்குரிமைப் பறிப்பு போன்ற அநீதிகளை எதிர்த்து நாடெங்கும் அறவழியிலான மக்கள் போராட்டங்கள் நடைபெற்றுவரும் இச் சூழலில், உள்நாட்டுப் பாதுகாப்புக்கென்று ஒரு படை உருவாக்கப்பட இருப்பதாக இந்திய அரசின் உள்துறை அறிவித்திருக்கிறது.
உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பேசிக் கொண்டே, இன்னொரு புறம் இப்படியொரு வலைப்பின்னலை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. கடந்த அக்டோபர் 23 அன்று இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்துடன் இணைந்து, உள்துறை அமைச்சகம் ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot Project) 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 60 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்ட குடிமைப் பாதுகாப்பு வலையமைப்பை (Civil Defence Network) உருவாக்க உள்ளது என்று அச் செய்தி தெரிவிக்கிறது. முதற்கட்டமாக, இந்த 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த குடிமைப் பாதுகாப்பு முதன்மைப் பயிற்சியாளர்களுக்கு மூன்று நாள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலிருந்தும் தலா 50 பேர் வீதம், மொத்தம் 600 முதன்மைப் பயிற்சியாளர்கள் இந்திய ராணுவத்தின் குறிப்பிட்ட பயிற்சி மய்யங்களில் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்தப் பயிற்சியைப் பெறுவார்கள் என்றும் குறிப்பிடும் அந்தச் செய்தி, மேலும் முக்கியமான ஒன்றைக் காட்டுகிறது.
பிரதமர் மோடியின்
தொலைநோக்குப் பார்வையா?
தொலைநோக்குப் பார்வையா?
‘பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின் போது, நவீன அமைப்புகளும், மேம்பட்ட தொழில்நுட்பங்களும், தற்போதைய காலத்திற்கு ஏற்ற தயார்நிலைத் திறன்களுடன் கூடிய ஒரு வலுவான குடிமைப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்க வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் சொன்னதன் அடிப்படையிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது’ என்று அச் செய்தி குறிப்பிடுகிறது.
இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் ராணுவம் (முப்படை) இருக்கிறது; உள்நாட்டு, எல்லைப் பாதுகாப்புக்கான பிற படைகள், சிறப்பு அதிரடிப் படைகள் இருக்கின்றன. அவற்றில் சேருவதற்கான தகுதிகள், முறையான பயிற்சிகள், அதற்கான பயிற்சி மய்யங்கள் எல்லாம் ஏராளமாக செலவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் கீழ் காவல்துறை இருக்கிறது. அதில் தேவைக்கேற்ப சிறப்புப் படைப்பிரிவுகள் இருக்கின்றன. ஏற்கெனவே, குடிமக்கள் பங்கேற்கும் அமைப்புகள் ஊர்காவல் படை (ஹோம்ஹார்டு) என்ற பெயரில் சில இடங்களில் இருக்கின்றன. பேரிடர் மீட்புப் படைகள் இருக்கின்றன.
இவற்றைத் தவிர்த்து, எதற்காக இப்போது ஒரு குடிமைப் பாதுகாப்பு வலைப்பின்னல்? அதுவும் ‘தயார் நிலைகள்’, ‘நவீன அமைப்புகள்’ என்றெல்லாம் சந்தேகமூட்டும் சொல்லாடல்கள் என்ன சொல்ல வருகின்றன? உள்நாட்டு அச்சுறுத்தல் இல்லை என்று சொல்லிவிட்டு, எதற்காக இந்தப் படையணி?
இதில் யார் சேர்க்கப்படவிருக்கிறார்கள்? என்ன விதமான பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன? இதற்கான தேவை என்ன? இவர்களின் அதிகாரங்கள் என்ன?
ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் துணை செய்வதற்கா?
ஆர்.எஸ்.எஸ்.சும், அந்த ஆக்டோபசின் கரங்களான பல அடியாள் படைகளும், நாட்டின் பல பகுதிகளிலும் பசுவதைத் தடுப்பு, மதமாற்றத் தடுப்பு, கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல்கள், கொலைகள், தீ வைப்புகள், வன்முறைகள், வழிபாட்டுத் தலங்கள் – வீடுகள் இடிப்பு, கொள்ளைகள் என்று அட்டூழியங்களில் ஈடுபட்டுவருகின்றன.
இவர்களுக்கெல்லாம் பயிற்சியும், அங்கீகாரமும் தரும் சூழ்ச்சியாக இந்த ‘சிவில் டிபன்ஸ் நெட்வொர்க்’ அமையுமோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் இப்படி உருவாக்கப்பட்ட ‘ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ என்னும் குழுக்கள் பல இடங்களில் உண்டாக்கிய பிரச்சினைகள், அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் செய்த செயல்கள், சாத்தான்குளம் காவல் மரணங்களைத் தொடர்ந்து இவ் வமைப்பின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. இந்த அமைப்பிற்குள்ளும் அப்போதே இந்துத்துவாவினரின் ஊடுருவல் இருந்ததாகச் சந்தேகம் எழுந்தது. இப்படி பல எதிர்மறையான, மக்கள் விரோதமான நிகழ்வுகளே வரலாற்றில் உள்ளன.
நக்சலைட்டுகளை அழிக்கிறோம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சல்வார் ஜுடூம் படைகள், பழங்குடி மக்கள் மீது நிகழ்த்திய கொடுமைகளை நாடு அறியும்.
புதுடில்லியில் போராட்டக்காரர்களைத் தாக்கியவர்கள்!
புதுதில்லியில் நடந்த போராட்டங்களின் போது, பேட்ச் அணியாத, காவல்துறையினர் தானா என்று உறுதிசெய்ய முடியாத குண்டர்கள் பலர் போராட்டக்காரர்களைத் தாக்கியதும், சீருடை அணியாத பலர் காவல்துறையினர் என்ற பெயரில் செய்த அத்துமீறல்களும் உச்சநீதிமன்றத்தாலேயே கண்டிக்கப்பட்டன. ஆனாலும், அதன் பின்னும் தொடர்கின்றன. இது தானே ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் போக்கு!
இராணுவமும், காவல்துறையும் அரசை நடத்தத் தேவையானவை என்றாலும், அதிகாரம் கையில் கிடைக்கும்போது யார் எப்படி மாறுவார்கள் என்பதற்கு மோசமான பல நிகழ்வுகள் உலகம் முழுவதும், இந்தியா, தமிழ்நாடு என எங்கும் நடந்துள்ளன. முறையான கட்டுப்பாடுகள், பயிற்சி உள்ள அமைப்புகளுக்கே இதுதான் நிலைமை என்றால், மற்ற அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கினால் நிலைமை என்ன ஆகும்? மறைமுகமாக, இந்துத்துவக் குண்டர்களைக் கொண்ட படையாக இதனை உருவாக்குவது ஒன்றிய அரசின் நோக்கமாக இருக்காது என்று மறுக்க முடியுமா?
‘இந்துத்துவா’வின் தத்துவக் கர்த்தாவான வி.டி.சாவர்க்கர் எழுதிய ‘Hinduise Military; Militarise Hindudom’ என்பதே ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டம். ‘இராணுவத்தை இந்துமயமாக்கு; இந்துவை இராணுவமயமாக்கும்’ என்பதன் முதல் பாதியை நடைமுறைப்படுத்துவதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அக்னிபாத் வீரர்கள் என்னும் பெயரில் கொண்டுவரப்பட்ட திட்டம், அத்தகையதொரு முயற்சியா என்னும் கேள்வி காரணமாகவும் அத் திட்டம் எதிர்க்கப்பட்டது.
தற்போது கொண்டுவரப்பட்டிருப்பது அதன் இரண்டாம் பகுதியான ‘இந்துக்களை, ஆர்.எஸ்.எஸ்.சை இராணுவமயமாக்கும்’ சூழ்ச்சித் திட்டம்தான்.
மேலும், மாநிலங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது மாநில அரசின் பட்டியலுக்குட்பட்ட காவல்துறையின் கடமை. அதனை மீறிய மற்றோர் இணை அமைப்பு உருவாக்கப்படுவதை எப்படி அரசியலமைப்புச் சட்டப்படி ஏற்க முடியும்? உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில், மாநிலங்களின் கட்டுப்பாட்டை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கக் கூடாரத்துக்குள் புகுந்த ஒட்டகத்தின் கதையாக, ஒன்றிய அரசு மேற்கொள்ளும் அதிகார அத்துமீறல் அல்லவா இது? இதனை மாநில உரிமை என்னும் நோக்கிலும் ஏற்க முடியுமா? இதனை மாநில அரசு கண்டிக்க வேண்டாமா?
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் திட்டங்கள், எத்தகைய உள்நோக்கங்கள் கொண்டவை என்பதைப் பல பிரச்சினைகளில் நாம் வெளிக்கொண்டு வந்துள்ளோம். அதிகாரத்தையும், ஆயுதத்தையும் ஒரே நேரத்தில் தங்கள் கைகளில் கொண்டுவர அவர்கள் சுற்றிச் சுற்றி வலை பின்னிக் கொண்டே இருக்கின்றனர். அரசியலைமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்புகளைத் தங்கள் கைகளில் கொண்டுவருகின்றனர். அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாகப் பல விசயங்களில் செயல்படுகின்றனர். சட்டத்தைத் திருத்தி, தங்களுக்குச் சார்பானதாக, சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துவதற்கான முயற்சிகளைச் செய்துவருகின்றனர். இந்நிலையில், அதன் இன்னொரு முயற்சியே இந்த ‘குடிமைப் பாதுகாப்பு வலைப்பின்னல்’ என்பது சந்தேகத்திற்கிடமில்லாதது.
புதிய வலைப் பின்னலை
அனைவரும் எதிர்க்கவேண்டும்!
அனைவரும் எதிர்க்கவேண்டும்!
இந்தியாவின் ஜனநாயகத்திற்கு எதிராக, மாநில உரிமைகளைப் பறித்து, குடிமக்களின் உரிமையைக் கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் இந்த முயற்சியை அனைவரும் எதிர்க்க வேண்டும்! ஜனநாயகவாதிகள் எதிர்க்க வேண்டும்! குறிப்பாக மாநில அரசுகள் எதிர்க்க வேண்டும்! இது அவசியம் – அவசரம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.11.2026
