திருநெல்வேலி, நவ.10- சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த கடையநல்லூரைச் சேர்ந்த 23 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் கொடை செய்யப் பட்டதைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
சாலை விபத்தில் படுகாயம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 23). இவர் கடந்த 5ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கித் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மூளைச்சாவும், குடும்பத்தினரின் முடிவும்!
மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி ஹரிஹரன் மூளைச்சாவு அடைந்தார். மகனை இழந்த கடும் துயரத்திலும், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் ஹரிஹரனின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளைக் கொடை செய்ய முன்வந்தனர்.
குடும்பத்தினரின் முழு ஒப்புதலுடன் ஹரிஹரனின் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டன. கொடையாகப் பெறப்பட்ட உறுப்புகள், அவசரத் தேவையில் இருந்த பல மருத்துவப் பயனாளிகளுக்கு பொருத்தப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளன.
தமிழ்நாடு அரசு மரியாதை
உடல் உறுப்புக் கொடை செய்வோரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கிணங்க, மறைவிலும் பிறருக்கு வாழ்வு அளித்த இளைஞர் ஹரிஹரனின் உடலுக்கு அரசு அதிகாரிகள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் நலச் சங்கத்தினா்
நவம்பர் 21-அன்று
உண்ணாநிலைப் போராட்டம்!
உண்ணாநிலைப் போராட்டம்!
இராணிப்பேட்டை, நவ.10- தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் நல சங்கத்தினா் வருகின்ற 21ஆம் தேதி சென்னையில் உண்ணாநிலை இருக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா்.
வாலாஜாபேட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா்கள் நல சங்க ராணிப்பேட்டை மாவட்டம் ஆயத்த கூட்டம் நடைபெற்றது.
தர ஊதியம் ரூ.5,400 இழந்து பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் 4000 போ் சென்னையில் வரும் 21.11.2026 அன்று உண்ணாநிலைப் போராட்டம் இருக்க திட்டமிட்டுள்ளனர்.
அதற்கான ஆயத்த கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 100 ஆசிரியா்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகள் மணிவண்ணன், முருகன், ஏசுபாதம், வேண்டாம் மணி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
தமிழ்நாடு முழுவதும் தீபாவளிப் பரிசு
116 இடங்களில் தீ விபத்து!
சென்னை, நவ.10- தீபாவளிப் பண்டிகையான 8.11.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் இருந்து 184 அழைப்புகள் தீயணைப்புத் துறையினருக்கு வந்துள்ளன.
இந்த அழைப்புகளில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 116 அழைப்புகளும், பட்டாசு விபத்துகள் இல்லாத தீ விபத்து தொடர்பாக 68 அழைப்புகளும் வந்துள்ளன.
இதில், சென்னையைப் பொறுத்தவரையில் பட்டாசு வெடித்த தீ விபத்து தொடர்பாக 12 அழைப்புகளும், மற்ற தீ விபத்து தொடர்பாக 12 அழைப்புகளும் என மொத்தம் 24 அழைப்புகள் வந்துள்ளன.
இவ்வாறாக தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் தமிழ்நாடு முழுவதும் 116 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துகளின் விவரம்
2022 ஆண்டு முதல் 2026 ஆண்டு வரை தீபாவளியின்போது பட்டாசு வெடித்ததில் தமிழ்நாடு மற்றும் சென்னையில் ஏற்பட்ட தீ விபத்துகளின் விவரம் வருமாறு:-
தமிழ்நாடு
2022 -336; 2023 -–254; 2024 -150; 2025 -43; 2026 -116
சென்னை
2022 -208; 2023 -102; 2024 -48; 2025 -15; 2026 -12
