புதுடில்லி, நவ.9 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு விற்பனை செய்யும் இ20 பெட்ரோல் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கப்படுவதாக அரசு கூறிவரும் நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எத்தனால் கலக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: “இ20 என்பது 420 பெட்ரோலாக மாறிவிட்டது (இந்திய தண்டனைச் சட்டத்தில் 420 என்பது மோசடியைக் குறிக்கும் பிரிவாகும்). பொதுமக்களின் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுகிறது” என்று அவர் விமர்சித்துள்ளார்.
கர்நாடக அரசு 7 மாவட்டங்களில் இருந்து பெட்ரோல் மாதிரிகளைச் சேகரித்து அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில், பரிசோதிக்கப்பட்ட 14 மாதிரிகளில் 11 மாதிரிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் எத்தனால் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அய்ஓசிஎல், எச்பிசிஎல் பிபிசிஎல், நயாரா மற்றும் ஷெல் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் யாவும் நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறியுள்ளன. இந்த நிறுவனங்களின் சொந்த ஆய்வகங்கள் எத்தனால் அளவு குறித்த உண்மையான விவரங்களை மறைத்து வெளிப்படுத்தவில்லை.
“மோடி அவர்களே, நாட்டு மக்களின் வாகனங்களில் நீங்கள் என்ன நிரப்புகிறீர்கள் என்று சொல் லுங்கள்? பெட்ரோலில் உண்மையில் எவ்வளவு எத்தனால் உள்ளது? 20 சதவீதத்திற்கும் அதிகமாக எத்தனால் கலக்கும் நிறுவனங்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?” என்று ராகுல் காந்தி தனது பதிவில் கேள் விகளை எழுப்பியுள்ளார்.
