இந்நாள் – அந்நாள்

4 Min Read
- Advertisement -

வீரமாமுனிவர் (கான்ஸ்டண்டைன் ஜோசப் பெஸ்கி) பிறந்தநாள் இன்று (8.11.1680)

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் மாபெரும் தொண்டாற்றிய இத்தாலியத் துறவியும், தமிழறிஞருமாவார் வீரமாமுனிவர். இன்று அவரது பிறந்தநாள் ஆகும். தமிழ் இலக்கிய உலகிற்கு இவர் செய்த பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை.

வீரமாமுனிவர் இத்தாலி நாட்டில் உள்ள மாந்துவா மாகாணத்தைச் சேர்ந்த காஸ்திகிளியோனே (Castiglione) என்னும் சிற்றூரில் நவம்பர் 8, 1680 அன்று பிறந்தார்.

கான்ஸ்டண்டைன் ஜோசப் பெஸ்கி  என்பது இவரது இயற்பெயர் ஆகும். இளம் வயதிலேயே இயேசு சபைக் குருவான இவர், பல்வேறு அய்ரோப்பிய மொழிகளுடன் இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரு போன்ற செம்மொழிகளிலும் சிறந்து விளங்கினார்.

கிறித்துவ மதத்தைப் பரப்பும் நோக்கத்துடன் 1710-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்தார்.   தமிழ் மக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியோடு முழுமையாக இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.   தமது பெயரை ‘தைரியநாதர்’ என்றும், பின்னர் தமிழில் ‘வீரமாமுனிவர்’ என்றும் மாற்றிக் கொண்டார்.   தமிழின் மீது கொண்ட பற்றினால், பழநி நகரில் வாழ்ந்த சுப்பிரதீப கவிராயரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் முறையாகக் கற்றுத் தேர்ந்தார்.   தமிழர்களைப் போலவே உடை அணிந்து, வாழ்ந்து உண்மையான தமிழ்த் துறவியாக மாறினார்.

வீரமாமுனிவர் தமிழ் மொழிக்குச் செய்த இலக்கண, இலக்கியப் பணிகள் அற்புதமானவை   தேம்பாவணி: கிறித்தவக் காப்பியமான இந்நூல் தமிழின் அய்ம்பெரும் காப்பியங்களுக்கு நிகராகப் போற்றப்படுகிறது.

தமிழில் முதன்முதலில் சொற்களைத் தொகுத்து அகரவரிசைப்படுத்தி உருவான அகராதி இதுவாகும். பெயர்தொகை, சொட் தொகை, பொருள் தொகை, தொடை அகராதி என நான்கு பிரிவுகளைக் கொண்டது.

தமிழ் மொழியின் செம்மையை வெளிப்படுத்தும் வகையில் ‘தொன்னூல் விளக்கம்’ (ஐந்திலக்கண விளக்கம்), கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம் போன்ற இலக்கண நூல்களை இயற்றினார்.

தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் இவர் முக்கியமானவர். விவிலிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘பரமார்த்த குரு கதைகள்’ என்னும் நகைச்சுவை மற்றும் நையாண்டி நிறைந்த உரைநடை நூலை எழுதினார்.

திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, அடைக்கல மாலை உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார்.

தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய தொண்டினைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு சென்னை மெரினா கடற்கரையில் இவருக்குச் சிலை நிறுவிச் சிறப்பித்துள்ளது.

 

“சுயமரியாதைச் சுடரொளி” க.பார்வதி அம்மையார் நினைவுநாள் இன்று (8-11-2023)

 

சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி அவர்கள் திராவிடர் கழக மகளி ரணியின் மேனாள் மாநிலச் செயலாளர் மற்றும் கழகத்தின் காப்பாளர் ஆவார்.

தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திராவிடர் கழக மகளிரணியில் தொடக்க காலத்தில் இருந்தே தீவிரமாகப் பணியாற்றியவர்.

அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கழகம் நடத்திய அத்தனைப் போராட்டங்களிலும் தவறாமல் பங்கேற்றவர் – சிறை ஏகியவர் ஆவார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நம்பிக்கையைப் பெற்று பல்வேறு கழகப் பொறுப்புகளில் மகளிரை ஒருங்கிணைத்து களப்பணியாற்றிய தொண்டறச் செம்மல் ஆவார்.

தமிழ்நாடு முழுவதும் சக மகளிரணிப் பொறுப் பாளர்களுடன் சுற்றிச் சுற்றி வந்து கழக மகளிரணியை மாவட்டங்கள் தோறும் கட்டமைத்ததில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தனது மரணத்திற்குப் பின் விழிக்கொடை வழங்கப்பட்ட நிலையில் சென்னை –  பெரியார் திடலில் தன் உடலைக் கொண்டு சென்று அங்கு சில மணி நேரம் வைத்து பிறகு மருத்துவமனையில் தனது உடலை கொடையாக ஒப்படைக்க வேண்டும் என்றும், உடலுக்கு மாலை எதுவும் அணிவிக்காமல் உண்டியல் வைத்து மாலைக்குப் பதில் நிதியளித்து அந்தத் தொகையை “பெரியார் உலக” த்துக்கு வழங்க வேண்டும் என்றும் மரணத்திலும் தனது கொள்கை உணர்வை வெளிப்படுத்தியவர் ஆவார். தன் பிள்ளைகளுக்கெல் லாம் ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திக் காட்டிய கொள்கை வீரர்.

வயது மூப்பு மற்றும் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் தமது 77 ஆம் வயதில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாளில் சென்னை தாழம்பூரில் உள்ள அவரது மகன் இல்லத்தில் மறைவுற்றார். அவரது இந்நினைவு நாளில் அவருடைய புகழைப் போற்றி நினைவுக் கூர்வோம்!

 

தந்தை பெரியார் அவர்கள் அய்ரோப்பியச் சுற்றுப் பயணம் முடித்துத் தாயகம் வந்தடைந்த நாள் இன்று (08-11-1932).

இந்நாள் - அந்நாள்

எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்த நாள்
இன்று (08-11-1895)

ஜெர்மானிய இயற்பியலாளர் வில்ஹெம் கொன்ராட் ரொண்ட்ஜென் (Wilhelm Conrad Röntgen) அவர்கள் எதிர்மின் கதிர்கள் (Cathode Rays) தொடர்பான சோதனைகளை மேற்கொண்டபோது, எக்ஸ் கதிர்களைக் (X-rays) கண்டுபிடித்த நாள் இன்று (08-11-1895) மேலும் உலக கதிரியக்கவியல் நாள் இன்று (நவம்பர் 08, 2026). இன்றைய நவீன மருத்துவத் துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8 ஆம் தேதி உலக கதிரியக்கவியல் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. மேலும் எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்த நாளின் நினைவாக 2012-ஆம் ஆண்டுமுதல் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *