அந்நாள் – இந்நாள் (6.9.2026)

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னையில் பகுத்தறிவாளர் கழகம் தொடங்கிய நாள் இன்று (6.9.1970)

பாரெங்கும் பகுத்தறிவாளர் கழகங்கள்!

முதலில் தோன்றியது சென்னையில்!!

பகுத்தறிவுச் சிந்தனையையும், அறிவியல் மனப்பான்மையையும் மக்களிடையே வளர்க்கவும், மூடநம்பிக் கைகளை ஒழிக்கவும்  தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டதே பகுத்தறிவாளர் கழகமாகும்.

முதன் முதலில் பகுத்தறிவாளர் கழகத்தின் தொடக்க விழா 6-9-1970 அன்று மாலை சென்னை பாலர் அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றச் செயலாளர் க.து.நடராசன் தலைமையிலும், தமிழ்நாடு கல்வி அமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் முன்னிலையிலும் தந்தை பெரியார் அவர்கள் கழகத்தைத் தொடக்கி வைத்து அறிவுரையாற்றியதுடன் அதன் வளர்ச்சிக்கு ரூ. 1000 நன்கொடை அளித்தும் ஊக்குவித்தார். அமைச்சர் நாவலர் சிறப்புரையாற்றுகையில் அரியதோர் விளக்கம் அளித்து “மூட நம்பிக்கையைத் தகர்த்துப் புதிய சமுதாயம் அமைப்போம்” என்று உறுதி பூண்டார்.

பகுத்தறிவாளர் கழகப் புரவலராக “விடுதலை” ஆசிரியர் கி.வீரமணியும், தலைவராக க.து.நடராசனும் மற்றும் நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உயர் அதிகாரிகள் உள்பட மாணவர் களும், பல்வேறு துறை பணியாளர்களும் பெரிதும் ஆர்வத்துடன் பகுத்தறி வாளர் கழகத்தில் தொடர்ந்து உறுப்பினர் களாயினர். தொடர்ந்து தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பகுத்தறிவாளர் கழகம் ஆங்காங்கு உள்ள பகுத்தறிவாளர்களால் தொடங்கப்பட்டு செயல்படத் தொடங்கின.

சென்னை பகுத்தறிவாளர் கழகம் வாரமொரு நாள் பகுத்தறிவுப் பாடம் நடத்த ஏற்பாடு செய்து பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. 21-11-1970 அன்று மாலை 6-15 மணிக்கு பெரியார் திடலில் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.

சென்னை பகுத்தறிவாளர் கழக புரவலரான “விடுதலை” ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “கடவுள்” என்ற தலைப்பில் முதல் பாடத்தைத் தொடக்கி வைத்து முதல் பாடத்திற்கு அடிப்படை நூல்களாக தந்தை பெரியார் அவர்களின் “பிரகிருதிவாதம் அல்லது மெட்டி ரியலிசம்”, சிங்காரவேலனாரின் “கடவுளும் பிரபஞ்சமும்”, பெர்ட்ரண்டு ரஸ்ஸலின் “நான் ஏன் கிறித்தவனல்ல” என்ற நூல்களை எடுத்துக் காட்டி விளக்கினார்.

கடவுள் பெயரால் நடக்கும் ஏமாற்று வேலைகள் மற்றும் ஜாதி வெறியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தல்,  மக்களிடையே சுயமரியாதை உணர்வையும் அறிவியல் பார்வையை யும் பரப்புதல், சமத்துவம் மற்றும் பகுத் தறிவு சிந்தனைகளைத் தமிழ்நாட்டில் உள்ள பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தல் ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு 57ஆம் ஆண்டில் நுழைகிறது பகுத்தறிவாளர் கழகம்.

– – – – –

இந்நாள் - அந்நாள்

தமிழறிஞர் சாலை இளந்திரையன் பிறந்தநாள் இன்று (6.9.1930)

சாலை இளந்திரையன் அவர்கள் தமிழ்ப் பேராசிரியரும், திறனாய்வாளரும், சொற்பொழிவாளரும், கவிஞரும், எழுத்தாளரும், இதழாளரும், அரசியற் செயற்பாட்டாளரும் ஆவார். அறிவியக்கப் பேரவை உருவாக்கியவர் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழக நிறுவனர்களில் ஒருவர். தமிழ், தமிழன், தமிழ்நாடு என்னும் நூலை எழுதியதற்காக குற்றவியல் வழக்கை எதிர்கொண்டவர். பொதுவுடைமைத் தமிழ்த்தேசியச் சிந்தனையாளருமான சாலை இளந்திரையனார் அவர்களின் பிறந்தநாள் இன்று (06-09-1930)

அறிவியக்கப் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்து நடத்தி யவர்; “அறிவியக்கம்” என்ற மாத இதழை இவர் பொறுப்பாசிரியராக இருந்து நடத்தினார்.

தந்தை பெரியார் அவர்களின் தன்மானக் கொள்கையர்;  தமிழ்ப் பேராசிரியர்;  திறனாய்வாளர்; சொற் பொழிவாளர்; பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர்.

ஆய்வு செய்து “டாக்டர்” பட்டம் பெற்றோர், அதனைத் தமிழில் “பண்டாரகர்” என்பதா, “முனைவர்” என்பதா என்ற விவாதம் வந்த போது “முனைவன் கண்டது முதல் நூலாகும்” என்பதற்கு இணங்க “முனைவர்” என்றே தன்னுடைய பெயருக்கு முன்னும், தன் இணையர் சாலினி அவர்கள் பெயருக்கு முன்னும் இட்டு நிலைக்கச் செய்தார். சென்னை பல்கலைக்கழகமும் “முனைவர்” என்பதையே ஏற்று தமிழில் அப்பட்டத்தை அளித்தது. அதுவே நிலைத்தது.

1978 இல் பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் ஏற்று நடைமுறைப்படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழ் நாட்டு அரசு ஏற்று, அப்போது முதல் கடைப்பிடிக்க உத்தரவிட்ட போது, எழுந்த எதிர்ப்புகளுக்கு சரியான மறுப்பு அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

“திருந்திய எழுத்துகள்” என்றார். “எழுத்துச் சீர்திருத்த மாநாடு” மாநாடு நடத்தினார்.

தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சாலையார் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லி தமிழ்ச் சங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஆகியவை தோன்றக் காரணமானவர்.

உரைவீச்சு என்ற புது இலக்கிய வடிவத்தைப் பயன்படுத்தினார்.

ஆண்டுதோறும் இந்தியத் தமிழ்ப் பேராசிரியர்கள் தம்முடைய ஆய்வுகளை வெளியிடுவதற்காக இந்தியப் பல்கலைக் கழக தமிழாசிரியர் மன்றம் என்னும் அமைப்பை உருவாக்க சாலை இளந்திரையன் உந்தாற்றலாக இருந்தார்.

புரட்சிக் கவிஞர் பாடல்களை எழுச்சி யுடன் மேடைகளில் முழங்கிவந்த சாலையார் 1991ஆம் ஆண்டில் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பாரதிதாசன் விருது அளித்துப் பெருமைப்படுத்தப்பட்டார். அவர் தமது 68 ஆவது வயதில் 04-10-1998 அன்று மறைவுற்றார்.

தகவல்: பாணாவரம் பெ.வீரமணி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *