சென்னை, நவ. 8- தமிழ்நாட்டில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களின் அலுவலக பராமரிப்பு மற்றும் பொது மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, மாதம் ரூ.1,000 பராமரிப்புப் படி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் பழனிசாமி நேற்று முன்தினம் (6.11.2026) வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 12,646 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான பிறப்பு, இறப்பு, பட்டா, சிட்டா, வருமானம், இருப்பிடம், ஜாதிச் சான்று, முதல் பட்டதாரி சான்று மற்றும் சட்டப்பூர்வ வாரிசு சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்குவதில் இவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
தினமும் ஏராளமான பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவல கங்களுக்கு வந்து செல்வதால், அங்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் வசதி அமரும் இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதள வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தவும், அதைத் தொடர்ந்து பராமரிக்கவும் மாதம் ஒன்றிற்கு ஒரு கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.1,000 வீதம், ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்பட உள்ளது.
12,646 விஏஓ அலுவலகங்களின் பராமரிப்பிற்காக மொத்தம் ரூ.15.18 கோடி நிதி ஒதுக்க கோரி வருவாய் நிர்வாக ஆணையர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று, நடப்பு 2026-2027ஆம் நிதியாண்டில் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான 7 மாத காலத்திற்கு ரூ.8 கோடியே 85 லட்சத்து 22 ஆயிரம் நிதியை ஒப்பளிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தொகையானது மாதந்தோறும் கிராம நிர்வாக அலுவலர்களின் ஊதியப் பட்டியலிலேயே ‘பராமரிப்புப் படி’ என்ற தலைப்பின் கீழ் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
