புதுடில்லி, நவ. 8- வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்துத் தன்னிடம் வெளிப்படையான விவாதத்தில் ஈடுபடப் பிரதமர் மோடியை சம்மதிக்க வையுங்கள் என்று உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில், “அமித் ஷா ஜி, பிரதமரைக் குழப்பாதீர்கள். என்னுடன் வெளிப்படையான விவாதத்தில் ஈடுபட அவரைச் சம்மதிக்க வையுங்கள். எந்த மேடையிலும், எப்போது வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார். பயப்பட வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எஸ்.அய்.ஆர். குறித்து விவாதிக்க முடியாது என முன்பு கூறிய அமித் ஷா, தற்போது சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தத் தயார் என முரண்பாடாகப் பேசுவதையும் அவர் காட்சிப் பதிவு மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “விவாதத்திற்கு நாடாளுமன்றம் என்றொரு இடம் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்று விமர்சித்துள்ளார். ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளுக்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கேவும் வலியுறுத்தியுள்ளார்.
அழிவின் விளிம்பில் உள்ள குள்ளநரிகளைப் பாதுகாக்க
தமிழ்நாடு அரசு ரூ.1.3 கோடி நிதி ஒதுக்கீடு!
சென்னை, நவ. 8- தமிழ்நாட்டில் வேகமாக குறைந்து வரும் குள்ளநரிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, அவற்றை அழியாமல் பாதுகாப்பதற்காகத் தமிழ்நாடு அரசு ரூ.1.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் உணவுச் சங்கிலியின் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் வங்கா நரிகள் மற்றும் (குள்ளநரிகள்) கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து வருவதாக விலங்கு நல ஆர்வலர்களும் ஆய்வுகளும் சுட்டிக்காட்டி வருகின்றன.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அனைத்துப் வனம் மற்றும் குறுவனப் பகுதிகளில் பரவலாகக் காணப்பட்ட குள்ளநரிகள், தற்போது வாழ்விட இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெறும் 5 மாவட்டங்களுக்குள் மட்டுமே சுருங்கிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அனைத்துண்ணி பிரிவைச் சேர்ந்த இந்திய நரிகள் வறண்ட பகுதிகள், புதர்க்காடுகள் மற்றும் புல்வெளிகளில் வாழும் இயல்புடையவை. இவை கொறித்துண்ணிகள், பூச்சிகள், சிறிய பாலூட்டிகள் மற்றும் பழங்களை உணவாகக் கொள்வதன் மூலம், விவசாயத்திற்கும் சூழலியல் சமநிலைக்கும் பெரும் நன்மைகளைச் செய்கின்றன. முன்பே அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், முதற்கட்ட பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்காகத் தற்போது ரூ.1.3 கோடி நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும், நரிகளின் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்தவும் அரசால் எடுக்கப்பட்டுள்ள இந்த தொடக்கக் கால நடவடிக்கை இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!
8 இடங்களில் என்.அய்.ஏ. சோதனை
புதுடில்லி, நவ.8- போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் தொடர்பாக 8 இடங்களில் என்.அய்.ஏ. சோதனை நடத்தியுள்ளது.
போலி இந்திய கரன்சி நோட்டுகள் பறிமுதல் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.அய்.ஏ.) அதிரடி சோதனை நடத்தியது. இதன்படி, பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள எட்டு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
போலி ரூபாய் நோட்டுகள்
இதில், பீகாரின் கயா நகரில் 3 இடங்களிலும், அவுரங்காபாத்தில் 2 இடங்களிலும், ஜார்கண்டின் ஹசாரிபாக்கில் 2 இடங்களிலும், மேற்கு வங்காளத்தின் மால்டா நகரில் ஓரிடத்திலும் சோதனை நடந்தது.
பீகாரின் அவுரங்காபாத் நகரில் மதன்பூர் காவல் நிலையத்தில் ரூ.2.48 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதலை தொடர்ந்தே இந்த சோதனை நடந்துள்ளது. இதில் டிஜிட்டல் துணைக்கருவி கள், ஆவணங்கள் மற்றும் வங்காளதேச ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவத்தில் 4 பேருக்கு எதிராக வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இந்த போலி இந்திய ரூபாய் நோட்டுகள் கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர் என்று என்.அய்.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்
