ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்ட மேனாள் அமைச்சர் பெரியகருப்பன் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!

- Advertisement -

புதுடில்லி, நவ. 7- தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 83,375 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், 83,374 வாக்குகளை பெற்றிருந்தார்.

இதனையடுத்து சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான அஞ்சல் வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால் தான் தோல்வியடைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பெரிய கருப்பனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பெரிய கருப்பன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள் பெரிய கருப்பனின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்து, இந்த மனு தொடர்பாக தவெக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி, இந்திய தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க அறிவிக்கை பிறப்பித்து உத்தரவிட்டனர்.

செயற்கை நுண்ணறிவு கொண்டு

அரசுப் பள்ளிகளில் தன்நிலைக் கற்றல் திட்டம் தொடக்கம்!

காஞ்சிபுரம், நவ. 7- தமிழ்நாட்டில் 500 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 25,140 மாணவர்கள் பயன்பெறும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தன்நிலைக் கற்றல் திட்டத்தை அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று (6.11.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித்துறை அரசு செயலர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: நடப்புக் கல்வியாண்டில் 15 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ‘தன்நிலை கற்றல் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 25,140 மாணவர்கள் பயன்பெறவுள்ளனர். தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வியில் சாதிக்க இத்திட்டம் உதவும்.

தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும் என்றார்.

தமிழ்நாடு தன்நிலைக் கற்றல் திட்டம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் திறன், வேகம் மற்றும் கற்றல் இடைவெளிகளைக் கண்டறிந்து, அவரவர் தேவைக்கு ஏற்ப கற்றல் வாய்ப்பு களை வழங்கும் திட்டமாகும். இதில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் கணினியைத் தனித்தனியாகப் பயன்படுத்தி தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்கமுடியும். மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தைக் கண்காணித்து, அவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவும்.

அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 15 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இதற்கான பிரத்யேகப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. கல்வி வளர்ச்சிக்கான தன்னார்வ அமைப்பான எஜுகேஷனல் இனிஷியேட்டிவ்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

சூரிய ஆற்றல், மின்சார வாகனப் பயிற்சி

தமிழ்நாடு அரசிடம் டி.என்.எஸ். இந்தியா பவுண்டேஷன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை, நவ. 7- தமிழ்நாடு அரசின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பசுமை தொழில்நுட்பம் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநரகம் மற்றும் ‘டிஎன்எஸ் இந்தியா பவுண்டேஷன்’ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் பழனி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக சென்னை (வடசென்னை), விழுப்புரம்  ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நவீன சூரிய ஆற்றல் மின் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன.

தொழில்துறை சார்ந்த பயிற்சிகள்

இந்த ஆய்வகங்கள் மூலம் மின்சார வாகனங்கள் சூரிய ஆற்றல் தொழில்நுட்பம் மற்றும் பணியிட திறன்கள் தொடர்பான பயிற்சிகள் தொழில்துறையின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இப்பயிற்சிகள் மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன் அதிகரித்து, வளரும் பசுமைத் தொழில்நுட்பத் துறையில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *