டில்லி, செப். 25 காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு – கருநாடகா இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், அந்த உத்தரவை கர்நாடகா அரசு கண்டுகொள்ளாமல் தற்போது வரை தண்ணீர் திறந்துவிடாமல் உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணை யத்தின் உத்தரவை ஏற்று நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘கர்நாடகாவில் நான்கு முக்கிய நீர் தேக்கங்களில் வரப்பெற்ற நீர் மற்றும் கடந்த 30 ஆண்டுகளின் சராசரி நீர் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் 50.5% பற்றாக்குறை உள்ளது. இருப்பினும் பிலிகுண்டலுவில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரபெற்றிருக்க வேண்டிய நீர் 93.732 டிஎம்சி. ஆனால், தமிழ்நாட்டுக்கு 33.503 டிம்சி நீர் மட்டுமே. தமிழ்நாட்டிற்கு 50.5 நீர் கிடைத்திருக்க வேண்டும், ஆனால் கிடைக்கவில்லை. இப்போது பருவமழை முடிவடைந்துவிட்டதால் இனி மழை பெய்ய வாய்ப்பில்லை. கர்நாடகத்திடம் நீர் தேக்கங்களில் நீர் உள்ளது. அவர்கள் கோடை காலத்திலும் கூட நீரை பயன்படுத்தி நீர் தேக்கத்தின் அளவை குறைத்து விட்டார்கள்’ என வாதிட்டனர்.
இதையடுத்து கருநாடகா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கருநாடகா அரசு தொடர்ந்து நீரை விடுவித்து வருகிறோம். இந்த வறட்சி ஆண்டிலும் கூட ஆணையத்தின் உத்தரவுகளை பின்பற்றி நீரை திறந்துவிட்டுள்ளோம். கடந்த 15 நாட்களில் கூடுதல் நீர் விடுவிக்கப் பட்டுள்ளது. ஆணையம் சூழ் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கருநாடகாவில் இனி மழை பெய்ய வாய்ப்பில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை மூலம் நீர் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே நிலவும் சூழலுக்கு ஏற்ப முடிந்தவரை உத்தரவுகளை செயல்படுத்தி வருகிறது’ என்று வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம், நிலுவை நீரான 16.03 டிஎம்சி நீரை திறந்து விடக்கோரும் தமிழ்நாடு அரசு மனுவுக்கு பதிலளிக்க கருநாடக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இதனிடையே காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் வேளாண்மை ஆணை யத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அங்கு, தமிழ் நாட்டுக்கு தினசரி விநாடிக்கு 4,000 கன அடி நீரை கர்நாடகா அரசு திறக்க வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தர விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
