நீதித்துறை எப்படி இருக்கிறது?

- Advertisement -

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான மார்கண்டேய கட்ஜு, நீதித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் போக்குகள் குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில்  வெளிப்படையாகத் தொடர்ந்து தனது கருத்துகளைப் பதிவு செய்து வருபவர்.

அண்மையில் ஊடக நேர்காணல் ஒன்றில், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதிடி.ஒய். சந்திரசூட் அவர்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டி.ஒய். சந்திரசூட் தனது பதவி, வாழ்க்கைப் பாதையை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் பல நீதித்துறை சமரசங்களையும் தவறான நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சந்திரசூட்டின் வழக்கு விசாரணை முறைகள்,  அவர் வழங்கிய சில முக்கிய தீர்ப்புகள் குறித்துத் தனது அதிருப்தியைத் தெரிவித்த கட்ஜு, நீதித்துறையின் நடுநிலைத்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நம்முடைய அரசர்கள் ஆண்ட காலத்தில் எல்லாம் சமஸ்கிருதக் கல்விதான் இருந்து வந்தது. மனுதர்மப்படிதான் தண்டனைகளும் இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சியில்தான் அதற்கு முடிவு ஏற்பட்டது.

அண்ணல் அம்தே்கர் தலைமையில் உருவான அரசியலமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகுதான் மனு தர்மத்துக்கு விடை கொடுக்கப்பட்டது.

உடையார்குடி கல்வெட்டு என்பது எத்தகையது என்பதை அறிந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி முறை எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

சுந்தர சோழனின் மூத்த மகனும் ராஜராஜனின் அண்ணனுமாகிய இளவரசன் இரண்டாம் ஆதிக்கக் கரிகாலனை இரவிதாசன், சோமன், பரமேசுவரன் ஆகிய பார்ப்பனர்கள் கொலை செய்தனர்.

கொலையாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படவில்லை. காரணம் மனுதர்மப்படி கொலை செய்தவன் ‘பிராமணனாக’ இருந்ததால் சிகைச் சேதம் (தலைமுடி); சூத்திரனாக இருந்தால் சிரைச் சேதமாம்! (தலையைக் கொய்தல்).

இன்றைக்கு அந்த நிலை இல்லையென்றாலும், தீர்ப்புகள் மறைமுகமாகப் பார்ப்பனியத்துக்கு அனுசரணையாக இருந்து வருவதைப் பார்க்க முடிகிறது.

மத விடயம், கோயில், கோயில் அர்ச்சகர்ப் பிரச்சினைகளில், அதனைக் கண் கூடாகப் பார்க்கிறோம். காரணம், நீதிபதிகள் ‘சிறுபான்மை’ யினைச் சேர்ந்தவர்கள்  – நீதிமன்றங்களில் பெரும்பான்மையாக இருப்பதுதான்.

உச்ச நீதிமன்றத்தின் பல முன்மாதிரி தீர்ப்புகளின்படி, ஒரு வழக்குரைஞர் அரசியல் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தாரா அல்லது அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாரா என்பதற்காக மட்டுமே அவரை நீதிபதி பதவியிலிருந்து விலக்கி வைக்க முடியாது.

பதவிப்பிரமாணம் எடுத்த பிறகு, அவர்கள் ‘அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகளுக்கும் நீதித்துறை அறநெறிகளுக்கும் கட்டுப்பட்டு, முற்றிலும் நடுநிலையோடு செயல்பட வேண்டும்’ என்பதே சட்ட விதியாகும்.

பதவிப்பிரமாணம் எடுத்த பிறகு ஒருவர் ‘மனசாட்சிப்படி நடுநிலையாகச் செயல்படுவார்’ என்ற கோட்பாடு, கோட்பாட்டு ரீதியாகச் சரியாக இருந்தாலும், நடைமுறையில் அது எந்த அளவிற்குச் சாத்தியம் என்ற அய்யம் எழுகிறது.

ஒரு குறிப்பிட்ட கட்சி சார்புடைய சித்தாந்தத்தைப் பின்பற்றும் நபர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் நீதித்துறை போன்ற உயரிய மற்றும் பொறுப்பான பதவிகளுக்கு வரும்போது, அவர்கள் நடுநிலையாகச் செயல்படுவார்கள் என்ற “பழைய பல்லவி” நடைமுறைக்கு ஒத்து வருமா என்று சமூக ஆர்வலர்களும் சட்ட வல்லுநர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

தன்னாட்சி அமைப்புகளின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைதான் ஜனநாயகத்தின் அடித்தளம். அப்படியிருக்க, நியமனங்களில் வெளிப்படைத்தன்மையும், அரசியல்சாராத் தன்மையும் கேள்விக்குறியாகும் போது, உயர் நீதித்துறை மற்றும் பிற அமைப்புகள் பட்சாதாபமற்று இயங்கும் என்று மக்கள் எவ்வாறு முழுமையாக நம்ப முடியும்?

அயோத்தி பிரச்சினையில் தீர்ப்பை நான் எழுதவில்லை கடவுள்தான் எழுதினார் என்று நீதிபதி சொல்வதெல்லாம் ஏற்கத்தக்கது தானா?

இத்தகைய சூழலில், நியமன நடைமுறைகளில் கூடுதல் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதும், அமைப்புகளின் சுதந்திரத்தை உறுதி செய்வதும் மட்டுமே பொதுமக்கள் மத்தியில் இழந்து வரும் நம்பிக்கையை மீட்க ஒரே வழியாகும்.

சிதம்பரம் கோயில் பிரச்சினையில் உயர்நீதிமன்றம் ஒருதீர்ப்பு வழங்குவதும், உச்சநீதிமன்றம் ஒவ்வொரு முறையும் அதன் எதிரான தீர்ப்புகளை வழங்குவதையும் நாடு பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற பொதுவான எண்ணம் வலுவாக மக்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *