“வேறு சூழல்கள், ஒரே ஆசைகள்” என்ற பொருண்மையில் இவ்வாண்டு ‘பன்னாட்டு இளைஞர் நாள்’ இன்று (12.08.2026) அயக்கிய நாடுகள் அவையால் கொண்டாடப்படுகிறது. அதன் இந்த ஆண்டு நோக்கமாக, பல நாடுகளிலும், பல்வேறு சூழல்களிலும் வாழும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் வேறுபட்டாலும், அவர்களின் கனவுகள், சுயமரியாதை, வாய்ப்பு, பங்கேற்பு, நிலையான எதிர்காலம் ஆகியவை அனைவருக்கும் பொதுவானவை என்பதை வலியுறுத்துகிறது. இன்றைய காலத்தில் இது முக்கியமான ஒன்றாகும்.
சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை நோக்கமாகத் தந்தை பெரியார் எதை வரையறுத்தாரோ, இலக்காக எதைக் கொண்டாரோ அதைத் தான் இன்று வேறு வார்த்தைகளில் அய்க்கிய நாடுகள் அவை இளைஞர் நாளுக்கான நோக்கமாக அறிவித்துள்ளது. மிகவும் பின்தங்கிய நாடுகள், நிலத்தால் சூழப்பட்ட வளரும் நாடுகள் மற்றும் வளரும் சிறிய தீவு நாடுகள் ஆகியவை உலக மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க வளர்ந்து வரும் நாடுகள் என்று அடையாளம் கண்டுள்ள அய்.நா, ‘இந்நாடுகளின் மாறுபட்ட சூழல்கள் பல இளைஞர்களுக்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தக்கூடும். ஆனால், அவற்றால் அந்த இளைஞர்கள் பாதிக்கப்படாத வகையில் செயல்பாடுகள் வேண்டும்’ என்கிறது.
தரமான கல்வி கிடைக்காத நிலை, அதிக வேலைவாய்ப்பு இல்லாமை, பாதுகாப்பற்ற பணிகள், இணைய வசதி குறைவு (மிகவும் பின்தங்கிய நாடுகளில் 34% இளைஞர்களுக்கு மட்டுமே இணைய வசதி கிடைக்கிறது), காலநிலை மாற்றத்தால் சிறிய தீவு நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு, மனநலம் தொடர்பான அழுத்தங்கள், சமூக விலக்குகள் ஆகியவற்றை முக்கியப் பிரச்சினைகளாக அடையாள கண்டுள்ளது அய்க்கிய நாடுகள் அவை.
உலகம் முழுவதும் உள்ள இந்தப் பிரச்சினை, வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இருக்கும் இந்தியாவிலும், பெரும்பான்மை சமூகத்து இளைஞர்களின் பிரச்சினையாகவும் இருக்கிறது. இதே நாட்டில் எல்லா வளங்களும், வசதிகளும் கொண்ட இளைஞர்கள், மாணவர்கள், குடும்பங்கள் உண்டு. இன்னொரு புறம், ‘இவற்றையெல்லாம் அடைய முடியாதவர்களாக அல்ல, அடையக் கூடாது’ என்று தடுக்கப்பட்டவர்களாக இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் வதைக்கப்படுகிறார்கள். இதற்கான ‘உரிமைக் குரலை எழுப்பினால், அவர்கள் நசுக்கப்படுகிறார்கள்’ என்னும் அவலம் இன்னும் இந்நாட்டில் நிலவுகிறது.
‘பொதுவான கனவுகள் இருந்தாலே சமமான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதிவிடக் கூடாது’ என்று கூறும் அய்.நா.வின் இந்த அறிக்கையின் பார்வை மிக முக்கியமானது மட்டுமல்ல; ஆழமான பொருள் கொண்டது. மருத்துவம் படிக்க வேண்டும் என்பது பள்ளிக் குழந்தைகள் பலரின் கனவு. ஆனால், அதை அடைவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்கின்றனவா? ஒரே மாதிரியான பள்ளிகள், ஆசிரியர்கள், கற்றல் கருவிகள் இருக்கின்றனவா? அப்படியே இருந்தாலும், அதையும் தாண்டி ‘பயிற்சி மய்யங்களில்’ சேர்ந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்’ என்ற நிலையை ஏற்படுத்தும் நீட் போன்ற தடைகளை ஓர் அரசே கொண்டு வந்து திணிக்கிறது என்றால், இந்தச் சமமான வாய்ப்புகள் கிடைக்கக் கூடாது என்று கருதுவதாகத் தானே பொருள். இந்த அரசு ரீதியான தடைகளையும் அல்லவா பெரிதும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.
“ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது; மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கிறார்கள்; நாட்டில் அறிவும், ஒழுக்கமும், நாணயமும், சமநிலையும் வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால் நாட்டில் எல்லாத் துறைகளிலும், சம தர்மம், சம ஈவு, சம உடைமை, சம ஆட்சித் தன்மை, சம நோக்கு, சம நுகர்ச்சி, சம அனுபவம் இருக்கவேண்டும்! ஏற்படவேண்டும்!!ஏற்படுத்தப்பட வேண்டும்!!! ஏற்பட்டாக வேண்டும்!!!!” என்று தந்தை பெரியார் (விடுதலை, 13.1.1965) கூறுவதுதானே திராவிடக் கொள்கைகள்-கோட்பாடுகளின் சுருக்கப் பிழிவு. இதற்காகத் தானே இந்த இயக்கம் போராடுகிறது. இன்று அய்.நா அவை சொல்வதைத் தானே “புத்துலகத் தொலைநோக்காளராம்’ தந்தை பெரியார் அன்றே குறிப்பிட்டார். 1925 முதல் நூறு ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும், தடைகளைத் தகர்த்து, தொடர்ந்து போராடுவது இதற்காகத் தானே!
இளைஞர்கள் “பாசிவ் பயனாளிகள்” அல்ல; அவர்கள் சமூக முன்னேற்றத்தின் இயக்கிகள். நிலையான, சமமான, பங்கேற்பு நிறைந்த எதிர்காலம் பெற விரும்பும் இளைஞர்களின் பொதுவான கனவை நிறைவேற்றுவதும், எந்த இளைஞரும் பின்தங்காமல், அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்குவது பன்னாட்டுச் சமூகத்தின் பொறுப்பு என்கிறது அய்.நா! அதில் இன்றைய பிரச்சினைகளையும் முன்வைத்து, முக்கியமான முன்னெடுப்பாக வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள், இன்றைய நாளின் பேசுபொருளாக மட்டும் நின்றுவிடக் கூடாது.
உலகின் இளைஞர்கள் வெவ்வேறு சமூக, பொருளாதார, புவியியல் சூழல்களில் வாழ்ந்தாலும், கல்வி, வேலைவாய்ப்பு, நல்வாழ்வு, சமத்துவம், கண்ணியம், பாதுகாப்பு மற்றும் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பங்கேற்பு ஆகியவற்றின் மீதான அவர்களின் அடிப்படை எதிர்பார்ப்புகள் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை என்று கூறும் அய்.நா மன்றத்தின் இளைஞர் நாள் குறித்த அறிக்கை, அதை அடைவதை இலக்காகக் கொள்கிறது.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தேவையும், நோக்கமும் உலகளாவியவை என்பதைத் தான் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது.
