அய்டிபிஅய் வங்கியை அந்நியமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி சென்னையில் வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

4 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 3– அய்டிபிஅய் வங்கியை அந்நியமயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி, வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் கடந்த அக்.14ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில், அய்டிபிஅய் வங்கியின் 60.72 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு விற்கும் முடிவு எடுக்கப்பட்டது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பான ‘யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்’ கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது. மேலும், நாடு தழுவிய அளவில் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, அய்டிபிஅய் வங்கியை அந்நியமயமாக்குவதற்கும், தனியார் மயமாக்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய அய்டிபிஅய் அதிகாரிகள் சங்கத்தினர் நவ.2, 3 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதற்கு அகில வங்கி அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தது.

அதன்படி, அய்டிபிஅய் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை நேற்று (2.11.2026) தொடங்கினர். நாடு முழுவதும் 20 ஆயிரம் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக, அய்டிபிஅய் வங்கியை அந்நியமயமாக்கும் முயற்சியை கண்டித்து, அகில இந்திய அய்டிபிஅய் அதிகாரி, ஊழியர்கள் சென்னை நந்தனத்தில் நேற்று (நவ.2) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜன், அகில இந்திய அய்டிபிஅய் அதிகாரிகள் சங்க செயலாளர் பனிந்திர நூலி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச் செயலாளர் ரோஷன் கார்க்கி, தலைவர் விவேக்ராஜா, துணை பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்னன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், அய்டிபிஅய் வங்கியை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தி பேசினர்.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியது: “அய்டிபிஅய் வங்கி கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் முறையே ரூ.5,600 கோடி, ரூ.7,500 கோடி மற்றும் ரூ.9,500 கோடி என மொத்தம் ரூ.22,600 கோடியைத் நிகர லாபமாக ஈட்டியுள்ளது. மேலும், பொது மக்களின் ரூ.3,50,000 கோடி வைப்புத்தொகை, இந்த வங்கியில் பாதுகாப்பாக உள்ளது. இத்தகைய சிறப்பான செயல்பாட்டைக் கொண்ட ஒரு பொதுத்துறை வங்கியை அரசு தனியாருக்கு தாராளம் காட்டுகிறது.

அய்டிபிஅய் வங்கி தற்போது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு புதிய பணியாளர் சேர்க்கை மற்றும் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக் கொள்கை முறையாகப் பின்பற்றப்படுகிறது.

ஆனால், இந்த வங்கி ஒருமுறை தனியார் வெளிநாட்டு நிறுவனத்தின் கைக்குச் சென்றால், இந்த இடஒதுக்கீட்டு முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவு சிதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசின் இந்த தேவையற்ற, ஆபத்தான முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.

ஒப்பந்தப் பணிகளுக்கு 20 சதவீதம் கமிஷன்

த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மீது சங்கம் புகார்

சிவகங்கை, நவ.3- சிவகங்கையில், VB-G RAM G திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை விதிகளை மீறி தவெக கட்சி நிர்வாகிகளுக்கு வழங்க முயற்சிப்பதாக, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம், அத்தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி மீது குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தங்களை வழங்குவதற்கு 20 சதவீதம் வரை கமிஷன் பெறப்படுவதாகவும் ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் பொருளாளர் எம். ஜெகன் கூறுகையில், ‘ஒப்பந்தங்களை கட்சி நிர்வாகிகளுக்கு ஒதுக்க சட்டமன்ற உறுப்பினர் திட்டமிடுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அண்மையில் அவரை நேரில் சந்தித்து, அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் பணிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், அந்தப் பணிகள் தனது பிள்ளைகளுக்கு (கட்சி நிர்வாகிகள்) உரியவை என்று அவர் கூறினார். மேலும், எங்களை அவமரியாதை செய்து அங்கிருந்து வெளியேறும்படி வற்புறுத்தினார்’ என்று குற்றம்சாட்டினார்.

விதிகளின்படி, ஊராட்சித் தலைவர் இல்லாதபோது, இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி எழுத்தர் மூலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இதுகுறித்து ஜெகன் மேலும் கூறுகையில், ஒப்பந்ததாரர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இதுவரை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பணிகள் ஒதுக்கப்பட்டதில்லை என்றார். தற்போது புதிய நடைமுறையை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்தச் செய்தி அச்சுக்குச் செல்லும் வரை தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணியைத் தொடர்புகொள்ள செய்தியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவருக்குப் பதிலளித்த கட்சி நிர்வாகி ஒருவர், எம்.எல்.ஏ அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதாகவும், பின்னர் இந்தப் புகார் குறித்து விளக்கமளிப்பார் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஒப்பந்தப் பணிகள் சட்ட விதிகளின்படியே ஒதுக்கப்படும் என்றும், அதில் எந்தவிதமான விதிமீறலுக்கும் அனுமதி கிடையாது என்றும் மாவட்ட ஆட்சியர் பி. ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஒப்பந்தங்களை நியாயமான முறையில் ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று திட்ட வளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததாகவும், சங்க உறுப்பினர்கள் அவரிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *