இந்துக்கள் நடராஜர் சிலை மூலம் அணுத்துகள் இயற்பியலை அன்றே கணித்தனரா?

3 Min Read
- Advertisement -

பரவும் செய்தி:

அணுக்கரு இயற்பியலை இந்தியர்கள் அன்றே (அறிவியல் புரட்சிக்கு முன்னே) கணித்ததற்கு ஆதாரமாக சிதம்பரம் நடராஜர் சிலை இருப்பதாகவும் அதனை அங்கீகரித்து ஜெனிவாவில் உள்ள செர்ன் (CERN) ஆராய்ச்சி நிறுவனம் நடராஜர் சிலையை அதன் வாசலில் நிறுவியுள்ளது என்றும் திருகுடந்தை உ வே வேங்கடேஷ் என்பவர் பேசிய காணொளி பரவி வருகிறது.

அதன் உண்மைத் தன்மைகளை விடுதலை ஆய்ந்தறிவோர் குழு ஆய்வு செய்தது.

ஆய்வு

காணொளியில் உள்ளது போல் செர்ன்  (European Organization for Nuclear Research) ஆராய்ச்சி நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் அமைந்துள்ளதும் அங்கு அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி நடைபெறுவதும் உண்மையே!

அங்கு 2000 அடி குழி தோண்டி அணுத்துகள்களை மோதவிட்டு நடக்கும் ஆராய்ச்சியில் அணுக்களின் உருவாக்கம், அழிவுப் பற்றி ஆய்வு நடப்பதாக கூறுகிறார்.

இவர் குறிப்பிடும் செர்ன்-ல் நிறுவப்பட்டுள்ள துகள்களை மோதவிட்டு ஆராயும் பெரிய ஹாட்ரான் மோதுவியின்(Large Hadron Collider) அதிகபட்சமான ஆழம் 574 அடி(175 மீட்டர்) ஆகும். காணொளியில் சொல்வது போல் 2000 அடி அல்ல.

இங்கு துகள்களின் ஆக்கம், அழிவு பற்றிய ஆய்வும், பிரபஞ்சம் தோன்றிய தொடக்க நிலையில் துகள்கள் எப்படி இருந்தன என்பது பற்றிய ஆய்வும் நடக்கிறது. இது அணுவைவிடச் சிறிய, அடிப்படைத் துகள்களான குவார்க், குளுவான், போஸான் போன்றவை பற்றியதாகும். புரோட்டான்களை (சில சோதனைகளில் அயனிகளையும்) அதிவேகத்தில் மோதச் செய்து இவை ஆராயப்படுகின்றன. அணுக்கள் உருவானது பிரபஞ்சம் தோன்றி சுமார் 3.8 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் என்பதால், இந்த ஆய்வு அணுக்களின் உருவாக்கம் பற்றியதல்ல..

அதே போல் உருவாக்கப்பட்ட அணுக்களின் எண்ணிக்கையும் அழிந்த அணுக்களின் எண்ணிக்கையும் சமம் என கண்டறியப்பட்டதாக கூறுகிறார். அது சரியானதல்ல.

ஆற்றல் அழிவின்மை விதிப்படி, ஆற்றல் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்துக்கு மாறும்போது அதன் மொத்த அளவு மாறாது. ஆனால் துகள்களின் எண்ணிக்கைக்கு இந்த விதி பொருந்தாது. ஆற்றல் மிக்க கதிர்வீச்சிலிருந்து துகள்-எதிர்த்துகள் இணைகள் உருவாகலாம், அவை மோதி அழியவும் செய்யலாம். இவ்வாறு துகள்களின் எண்ணிக்கை மாறினாலும், மொத்த ஆற்றலும் (நிறை உட்பட) மின்னூட்டமும் மாறாமல் இருக்கும்..

அணுக்கள் உருவாவதும் அழிவதும் சமம் என்று குறியீடாக நடராஜர் சிலை தெரிவிப்பதால் அதனை ஏற்று செர்ன்-ல் நிறுவப்பட்டுள்ளது.

அணுக்கள் உருவாவதும் அழிவதும் சமம் என்று நடராஜர் சிலை தெரிவிப்பதாக எந்த குறிப்புகளும் இல்லை. சிவன் நடனத்திற்கும் நடராஜர் சிலைக்கும் காலைத்தூக்கி ஆடும் வடிவத்துக்கும் சொல்லப்படும் காரணம் வேறு.

மேலும் நடராஜர் சிலையை செர்ன் நிர்வாகமே நிறுவியுள்ளது என்று கூறுகிறார். ஆனால், செர்ன் குறிப்புப்படி நடராஜர் சிலை இந்தியா சார்பாக பரிசாக அளிக்கப்பட்டது. 1960 முதல் செர்ன் உடன் இருக்கும் நல்லுறவுக்கு சாட்சியாக மட்டுமே அச்சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளதே தவிர அவர்களாக அணு அறிவியல் தொடர்பாக நிறுவவில்லை.

சிலைத்தகட்டில் அவர் சொன்ன பிரிட்ஜாப்  கேப்ராவின் ”தாவோ ஆப் பிசிக்ஸ்” புத்தகக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

ஆனால் அவை எதுவும் காணொளியில் உள்ளது போல ஆக்கம் மற்றும் அழிவு பெறும் அணுக்களின் எண்ணிக்கை சமம் பற்றியோ அல்லது அதை ஆய்வு பூர்வமாக நிறுவிய சான்றுகள் பற்றியோ, அவற்றிக்கும் நடராஜர் சிலைக்கும் துகள் இயற்பியலுக்கும் உள்ள தொடர்பு பற்றியோ குறிப்பிடப்படவில்லை.

மாறாக ஆக்கமும் அழிவும் பருப்பொருளின் அடிப்படை என பொறிக்கப்பட்டுள்ளது. இந்து மதப்படி சிவனின் நடனம் துகள்களின் பிரபஞ்ச நடனத்தோடு ஒப்புமை படுத்தி குறிப்பிடபட்டுள்ளது. இது ஒரு உருவகம் என்றே சிலை குறித்த செர்ன் இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் அன்றே துகள் இயற்பியல் பற்றி இந்தியர்கள் அறிந்திருந்தார்கள் என்று குறிப்பிடவில்லை.

விளக்கம்

செர்ன்ல் நடராஜர் சிலை ஜூன் 18 2004ல் இந்தியாவால் பரிசளிக்கப்பட்டு செர்ன்-ன் 39 வது 40 வது கட்டிடத்திற்கு இடையில் நிறுவப்பட்டுள்ளது.

காணொளியில் கூறுவது போல நடராஜர் வலக்கை ஒலி, இடக்கை நெருப்பு, அணு ஆக்கம் அணு அழிவு என எதற்கும் அறிவியல் ஆய்வு ரீதியான விளக்கமோ ஆய்வுகளோ இல்லை.

மேலும் இணையத்தில் தொடர்ந்து செர்ன் நடராஜர் சிலை பொய்த் தகவல்கள் பரவிய போது செர்ன் சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு அளித்த பதிலில் மேற்கண்ட விளக்கங்களை அளித்து செர்ன் பல நாடுகளை அறிவியலாளர்கள் பணிபுரியும் பன்மையக் கலாச்சார நிறுவனம் ஆகும். இங்குள்ள நடராஜர் சிலை பல நாடுகளின் பரிசுகளில் ஒன்றே மிகத் தெளிவாக என விளக்கியுள்ளது.

முடிவு

அறிவியல் சிந்தனைக்காக நடராஜர் சிலை நிறுவப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது பொய்யே.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *