மதுரை, நவ.1 தேனி தேக்கம்பட்டி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தால், மதுரை மத்திய சிறை காவலர்களின் பணி நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவலர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அரசாணைப்படி 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும். ஆனால் மதுரை சிறை காவல்துறை துணைத் தலைவரும் கண்காணிப்பாளரும் தன்னிச்சையாக 12 மணி நேரம் வேலை வாங்குவதாக காவலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுபற்றி கூறியதாவது: தற்போது தேனி, விழுப்புரம், தருமபுரி சிறைகளில் மட்டுமே கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடம் உள்ளது. மற்ற சிறைகளில் முன்பு இருந்தது. ஆனால் அதற்கான பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படாததால் 2019இல் ‘தேவை இல்லை’ என அரசிடம் ஒப்படைப்பு செய்யப்பட்டு, அதற்கு பதில் ஜெயிலர்கள் நியமிக்கப்பட்டனர். ஜெயிலர் ஒவ்வொரு முறையும் மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் கேட்க வேண்டியிருக்கிறது. இதனால் சிறைப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
தேனி சிறையில் 3 உதவி சிறை அலு வலர்கள் பணியில் இருந்தும் அவர்களில் ஒருவரை இரவு அதிகாரியாக நியமிக்காதது யாருடைய தவறு? சிறைவிதிப்படி உதவி சிறை அலுவலரே புதிய கைதிகளை சிறைக்குள் அனுமதிக்க முடியும். அந்த இடத்தில் தலைமைக் காவலரை இரவு அதிகாரியாக நியமித்தது யார்? இதற்கெல்லாம் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சிறைத்துறையை சீர்த்திருத்த வேண்டும்; எங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனக்கருதிய காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோரை பணியிடம் மாற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எங்களுக்கு மீண்டும் 8 மணி நேர வேலை வழங்க வேண்டும். மாவட்ட சிறைகளில் மீண்டும் கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்கி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றனர்.
