சென்னை, ஆக. 11- மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, “திராவிடர் கழகத்தின் நீட் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குத் தடை விதித்தது ஏன்? பெரியார் திடலில் காவல்துறை குவிப்பு ஏன்? என சட்டமன்றத்தில் நேற்று (10.8.2026) கேள்வி எழுப்பினார். அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
நீட் தேர்விற்கு எதிராக நாமெல்லாம் ஒற்றை மனநிலையில் இருக்கின்றோம். ஒரே ஒரு கட்சிக்கு மட்டும் அதில் மாறுபட்ட கருத்து இருக்கலாம்.
இந்தப் பேரவையில், நாம் எல்லோ ரும் நீட்டிற்கு எதிராக இருக்கின்றோம் என்ற மனநிலை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது.
நீட் தேர்வுக்கு எதிரான ஒரு மனநிலையில் இந்த ஆட்சியும் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில், நீட் தேர்விற்கு எதிரான ஒரு பரப்புரையில், திராவிடர் கழகம் ஈடுபடுகிறது; முறையான அறிவிப்பு செய்கிறது. காவல்துறையிடம் அதற்கான அனுமதியைப் பெறுகிறார்கள்.
தமிழ்நாடு அரசாங்கத்தினுடைய நிலைப்பாட்டினை வலியுறுத்தி, ஒன்றிய அரசுக்கு எதிராக, அவர்கள் ஒரு பரப்புரையினை ஜனநாயக வழியில், அமைதி வழியில் மேற்கொள் கின்றபொழுது, அந்தப் பரப்புரைக்குத் தடை விதித்தது என்ன நியாயம்?
பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றிருக்கிறீர்கள், நான் பாராட்டுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன், வாழ்த்துகிறேன்.
அந்தப் பெரியார் திடலில், சுற்றிலும் காவல்துறையினரைக் குவித்து, ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது என்ன நியாயம்?
திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் கள் என்ன தீவிரவாதிகளா?
யோசிக்கவேண்டாமா? உங்களு டைய அந்தக் கருத்தை, நம்முடைய எல்லோருடைய கருத்தையும்தான் அவர்கள் பரப்புரையாக மேற்கொள் கிறார்கள்.
மாணவர்கள் போராட்டம் தமிழ் நாட்டில் நடைபெற்றது. டில்லியில் நடைபெற்ற மாணவர்களின் போராட் டத்தினுடைய குறிக்கோள் வேறு. தமிழ்நாட்டில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் குறிக்கோள்கள் வேறு.
டில்லியில் போராடிய மாணவர்கள், நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு எதிராக மட்டும்தான் போராடினார்கள். நாமோ, நீட் தேர்வே அடியோடு ரத்து செய்யப்படவேண்டும் என்ற குரலோடு போராடி வருகிறோம்.
அவர்கள், கொசுக்களை எதிர்க் கிறார்கள்; நாம், சாக்கடைகளை மூடவேண்டும் என்று சொல்கின்றோம். இதில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.
அப்படியானால், அந்த மாணவர் களின்மீது, நாம் நெருக்கடி கொடுத்து, தாக்குதல் தொடுத்தது சரியா? என்கிற கேள்வி எழுகிறது.
இப்பொழுது, தமிழ்நாடு மாணவர் இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் என்னைச் சந்தித்தார்கள்.
சென்னையில், நான்கு பேர், பட்டினிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையை இன்று அடைந்திருக்கிறார்கள். நம்முடைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அருமைச் சகோதரர் ராஜ்மோகன் அவர்கள்கூட, அவர்களைச் சந்தித்து, ஆறுதல் படுத்தியிருக்கிறார்.
நாம் என்ன சொல்கிறோம் என்று சொன்னால், அந்த மாணவர்களுடைய பல கோரிக்கைகள் இருக்கலாம். பட்டினிப் போரை நடத்தி, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளி்ப்படுத்துகின்றனர். மனிதாபிமானத்தோடு அதனை நாம் அணுகவேண்டும்.
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னால், மீண்டும் இதே பேரவையில், நீட் தேர்விற்கு எதிராக, தமிழ்நாட்டிற்கு முழுமையாக நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு வேண்டும் என்ற தீர்மானத்தை நாம் நிறைவேற்றுவோம். அதன்மூலமாக, மொத்த இந்தியாவுக்கும் வகுப்பெடுப் போம் என்று சொல்கிறார்கள்.
இது நியாயமான ஒரு கோரிக்கை தானே! அதை ஏன், இந்த அரசு பரிசீலிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தமிமுன் அன்சாரி சட்டப் பேரவையில் பேசுகையில் குறிப் பிட்டார்.
