சென்னை, அக். 7- மதுராந்தகம், தாரா புரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (6.10.2026) அமைதியாக நடைபெற்று முடிந்தது. மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற, மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதுடன், ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, இத்தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட், ஜானகிராமன் (நாதக) உள்ளிட்ட 28 பேர் களத்தில் இருந்தனர். அதே போல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா ( தவெக), சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட்), கார்த்திகா(நாதக) உள்ளிட்ட 22 பேர் களத்தில் இருந்தனர்.
அக்டோபர் 4ஆம் தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுற்ற நிலையில், நேற்று காலை 7 மணி முதல் இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங் கியது. மதுராந்தகத்தில் காலை 2 மணி நேரம் வாக்குப்பதிவு மந்தமான நிலையிலேயே இருந்து வந்தது. மேலும், ஏழு இடங்களில் இயந்திரங்கள் பழுது காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. பின்னர், பிற்பகலுக்கு மேல் வாக்குப்பதிவு விறுவிறுப்பை எட்டியது. ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தாராபுரம் தொகுதியில் நேற்று காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். கவுண்டச்சி புதூர் வாக்குச்சாவடியில் திமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய நபர் தவெக சார்பில் பூத் ஏஜெண்டாக நியமிக்கப்பட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அந்த வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தநிலையில்,இறுதி நேரத்தில் வந்த வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குஎண்ணிக்கை மய்யங்களுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இறுதி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீதமும், தாரா புரத்தில் 80.30 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த ஏப்ரலில் நடை பெற்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகத்தில் 92.30 சதவீதமும், தாராபுரத்தில் 89.9 சதவீதமும் வாக்குகள் பதிவாயிருந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. வரும், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மய்யங்களில் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப் பட உள்ளன.
புதுச்சேரி 80.81% வாக்குப் பதிவு: புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில், மங்கலம், தட்டாஞ் சாவடி என இரு தொகுதிகளில் போட்டி யிட்டு வென்ற முதலமைச்சர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். இதையடுத்து அங்கு நேற்று இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 80.81 சதவீத வாக்குகள் பதிவாயின. இது கடந்த பொதுத்தேர்தலை விட 6.29 சதவீதம் குறைவாகும்.
மதுராந்தகத்தில், தாராபுரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது: ஏப்ரலை விடக் குறைந்த வாக்குப்பதிவு
Leave a Comment
