திருத்தணி, அக். 30- திருத்தணி ஒன்றியம் கன்னிகா புரம், கிருஷ்ணசமுத்திரம், வேலஞ்சேரி ஆகிய 3 ஊராட்சிகளில் சேதமடைந்த அரசு தொடக்கப் பள்ளிக் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்ட நிலையில், புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் மாணவர்கள் தற்காலிகமாக கிறித்துவ ஆலயம் இ-சேவை மய்யங்களில் கல்வி பயின்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னிகாபுரம், கிருஷ்ணசமுத்திரம், வேலஞ்சேரி ஆகிய 3 ஊராட்சிகளில் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப் பள்ளிக் கட்டடங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் சேதமடைந்தன. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இதற்கிடையே, கடந்த ஆண்டு ஆர்.கே.பேட்டை ஒன்றியம் கொண்டாபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில், 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அதிக அளவில் சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடித்து அகற்றி, புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, கன்னிகாபுரம், கிருஷ்ணசமுத்திரம், வேலஞ்சேரி ஆகிய 3 ஊராட்சிகளில் இருந்த பள்ளிக் கட்டடங்கள் கடந்த நவம்பர் மாதம் இடித்து அகற்றப் பட்டன. தொடர்ந்து, புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கான திட்ட அறிக்கையைத் தயாரித்த திருத்தணி ஒன்றிய நிர்வாகம், அதனை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிவைத்தது. ஆனால், 11 மாதங் களுக்கு மேலாகியும் புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன. பள்ளிக் கட்டிடங்கள் இல்லாததால், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் உள்ள கிறித்தவ ஆலயத்திலும், வேலஞ்சேரி மற்றும் கன்னிகாபுரம் பகுதிகளில் உள்ள அரசு இ-சேவை மய்யக் கட்டடங்களிலும் மாணவர் களுக்கு தற்காலிகமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த இடங்களில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாத தால், அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பள்ளிக் கட்டடங்கள் இல்லாத சூழலில் மாணவர்களின் கல்வியும், பாதுகாப்பும் பாதிக்கப்படுவதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் உடனடியாக புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
